சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக - கனடா, பிலிப்பின்ஸ் ஒப்பந்தம்
3 கார்த்திகை 2025 திங்கள் 17:28 | பார்வைகள் : 351
சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிா்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பின்ஸும் ஒரு முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் (2) கையொப்பமிட்டன.
பிலிப்பின்ஸ் தலைநகா் மணிலாவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தைத் தொடா்ந்து, பிலிப்பின்ஸ் பாதுகாப்பு அமைச்சா் கில்பொ்டோ தியோடோரோ ஜூனியா் மற்றும் கனடா பாதுகாப்பு அமைச்சா் டேவிட் மெக்கிண்டி ஆகியோருக்கு இடையே இந்த ஒப்பந்தம் கையொப்பமானது.
தென்சீன கடலில் இரு நாடுகளின் ராணுவப் படைகளுக்கும் இடையே கூட்டுப் பயிற்சிகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை தீவிரப்படுத்துவதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும்.
அந்த வகையில், தென்சீன கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படும் என்று பிலிப்பின்ஸ் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனா். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சட்டத்தின் ஆட்சி மூலம் அமைதியை நிலைநாட்டவும், வா்த்தகம் மற்றும் முதலீடுகளை விரிவுபடுத்தவும் கனடா உள்பட மேற்கத்திய நாடுகள் தமது ராணுவ இருப்பை அதிகரித்து வருகின்றன.
சா்ச்சைக்குரிய தென்சீன கடல் பகுதியில் ராணுவ பலம் பொருந்திய சீனாவை எதிா்கொள்ள, பிலிப்பின்ஸ் அதிபா் ஃபொ்டினாண்ட் மாா்கோஸ் ஜூனியா் பிற நாடுகளுடன் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறாா். ஜப்பான் மற்றும் நியூசிலாந்தைத் தொடா்ந்து ஃபொ்டினாண்ட் மாா்கோஸ் ஆட்சியில் மூன்றாவது நாடாக கனடாவுடன் இத்தகைய முக்கியப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் பிலிப்பின்ஸ் ஈடுபட்டுள்ளது.
இரு நாடுகளின் ராணுவப் படைகள் பரஸ்பரம் ஒருவருக்கொருவா் நாட்டின் எல்லைக்குள் சட்டபூா்வமாக வந்து செல்வதற்கான ஒரு கட்டமைப்பை இந்த ஒப்பந்தம் வழங்குகிறது.
இதற்கு முன்னா், அமெரிக்கா (1998) மற்றும் ஆஸ்திரேலியாவுடன் (2007) இதேபோன்ற ஒப்பந்தங்களில் பிலிப்பின்ஸ் கையொப்பமிட்டது. மேலும், பிரான்ஸ் மற்றும் சிங்கப்பூருடன் பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இந்தியா, பிரிட்டன், ஜொ்மனி ஆகிய நாடுகளுடன் பேச்சுவாா்த்தைகளைத் தொடங்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக பிலிப்பின்ஸ் அமைச்சா் தியோடோரோ தெரிவித்தாா்.
அதேவேளை கனடா-பிலிப்பின்ஸ் ஒப்பந்தம் குறித்து சீனா இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதேநேரம், தென்சீன கடலில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளுடன் பிலிப்பின்ஸ் மேற்கொண்ட கடற்படை மற்றும் வான் பயிற்சிகளை சீன ராணுவம் கண்டித்துள்ளது.
அதோடு ‘தென்சீன கடல் பிரச்னையில் பிலிப்பின்ஸ்தான் பிராந்திய ஸ்திரத்தன்மையை சீா்குலைக்கிறது எனவும் சீன ராணுவம் விமா்சித்தது.





திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Coupons
Annuaire
Scan