முதுமை கொண்டு வரும் நோய்கள்
27 சித்திரை 2020 திங்கள் 14:35 | பார்வைகள் : 10563
முதியவர்கள் பெரும்பாலும் பக்கவாதம், நரம்பு தளர்ச்சி, எலும்பு பலம் குறைதல் மற்றும் ஞாபக மறதியால் பாதிக்கப்படுகின்றனர். உலக அளவில் மக்கள் தொகையில் முதியோர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் ஆகும். இந்தியாவில் 8 சதவீதம் முதியோர்கள் உள்ளனர்.
வயதான காரணத்தால் பார்வை குறைதல், சோர்வு, கழுத்து எலும்பு தேய்வு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், பக்கவாதம், இதய கோளாறு, மன அழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப்படுகின்றனர்.
இதுபோன்ற பிரச்சினைகளால் கடந்த 5 ஆண்டுகளாக முதியவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எலும்பு பலம் குறைவதால், திடீரென்று கால் தவறி கீழே விழுகின்றனர். அப்போது இடுப்பு எலும்பு, முதுகுத் தண்டுவடம், கை மணிக்கட்டு எலும்பில் முறிவு ஏற்படுகிறது. தனியாக இருக்கும் முதியவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. ஒரு சிலரின் மனநிலையும் பாதிக்கப்படுகிறது.
முதுமை என்றாலே நோய்களும் கூடவே வந்துவிடுகிறது. அவர்களுக்கு 4, 5 நோய்கள் ஒன்றாக வருகின்றன. அவர்களை கவனிப்பது என்பது குழந்தையை கவனிப்பது போன்றது. அதே மாதிரி தான் சிகிச்சை அளிப்பதும். முதியவர்களுக்கு நோயின் தன்மையை பொறுத்து அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. 100 வயது முதியவருக்குக்கூட அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
சென்னை மருத்துவ கல்லூரியில் நடைபெறும் பயிற்சி பட்டறையில் முதியோர்களுக்கு ஏற்படும் பக்கவாதம், நினைவாற்றல் குறைவு, மூளை அறிவுத்திறன் குறித்தும், அடிக்கடி கீழே விழும் முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் பற்றியும் பல்வேறு ஆய்வுகள் செய்யப்படுகின்றன. முதியோர் மருத்துவ மாநாட்டில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கின்றனர்.
வெளிநாடுகளில் முதியோருக்கு அளிக்கப்படும் நவீன சிகிச்சை முறைகள், அதை இந்தியாவில் செயல்படுத்துவதற்கான நடைமுறைகள் பற்றி தற்போது விரிவாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.