Paristamil Navigation Paristamil advert login

கூட்டணி பற்றி முடிவு எடுக்க விஜய்க்கு அதிகாரம்: தவெக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்

கூட்டணி பற்றி முடிவு எடுக்க விஜய்க்கு அதிகாரம்: தவெக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்

6 கார்த்திகை 2025 வியாழன் 04:06 | பார்வைகள் : 104


தமிழக முதல்வர் வேட்பாளர் விஜய் தலைமையில் தேர்தலை சந்திப்போம் என்றும், கூட்டணி குறித்து முடிவு எடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் அளித்தும், தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

த.வெ.க., தலைவர் விஜய், செப்டம்பர் 27ம் தேதி பிரசாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். மாநில நிர்வாகிகள் பலரும் தலைமறைவாகினர். பனையூரில் உள்ள வீட்டில் விஜய் முடங்கினார். இவ்வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கட்சி பணிகளில், விஜய் மற்றும் மாநில நிர்வாகிகள், மீண்டும் கவனம் செலுத்த துவங்கி உள்ளனர்.

இந்த சூழலில், மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில், இன்று (நவ.,05) காலை த.வெ.க., சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கரூர் சம்பவம் நடந்து 38 நாட்களுக்கு பின், கட்சி நிர்வாகிகளுடன், பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பங்கேற்றார்.

இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என, 1,400க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.


இரங்கல் தீர்மானம்


கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து, தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்னென்ன?

* தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 35 மீனவர்கள் கைதுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்.

* பெண்கள் பாதுகாப்பு, விளம்பர மாடல் திமுக ஆட்சியில் தமிழகமே தலைகுனிந்து நிற்கிறது என்பதை கூறுவதோடு, சட்டம், ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யாத திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்.

* வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளை நிறுத்த கோரி தீர்மானம் நிறைவேற்றம்.

*பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமானம் பணிகளை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றம்.

* மக்கள் சந்திப்பு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கட்சி தலைவர் விஜய், அவரை காண வரும் மக்களுக்கு பாரபட்சம் இல்லாமல் தமிழக அரசு முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்.

* டெல்டா மாவட்ட விவசாயிகளின் பாதிப்புக்கு காரணமான தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்.

* வடகிழக்கு பருவமழைக்கு போதிய ஏற்பாடுகளை அரசு செய்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்.

* தமிழக தொழில்துறைக்கு வந்த முதலீடுகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்.

* ஜனநாயகத்துக்கு எதிராக கருத்துரிமையையும் பேச்சுரிமையையும் சிதைக்கும் வகையில் கைது நடவடிக்கை எடுக்கும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்.

* தமிழக முதல்வர் வேட்பாளர் விஜய் தலைமையில் தேர்தலை சந்திப்போம். கூட்டணி குறித்து முடிவு எடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றம்.

* கட்சியின் மீதும், நிர்வாகிகள் மீதும் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அவதூறுகளைப் பரப்பும் ஆளுங்கட்சியின் கைக்கூலிகளாகச் செயல்படுபவர்களுக்குக் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்