ரத்தத்தில் சர்க்கரை அளவை எளிதாக அறிய சென்னை ஐ.ஐ.டி.,யில் புதிய கருவி உருவாக்கம்
7 கார்த்திகை 2025 வெள்ளி 12:21 | பார்வைகள் : 158
சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சியாளர்கள், ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை கணக்கிடும், 'கை கடிகாரம்' வடிவிலான புதிய கருவியை உருவாக்கி, காப்புரிமை பெற்றுள்ளனர்.
ஐ.சி.எம்.ஆர்., எனும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், 2023ம் ஆண்டு, ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், நாட்டில் மொத்த மக்கள் தொகையில், 9 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் நோயாளிகளுக்கு ஏற்ப, பரிசோதனைகளும் மேம்பட்டு வருகின்றன.
தற்போது, சி.ஜி.எம்., எனும் நடைமுறையில், ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு கண்காணிக்கப்படுகிறது. அதாவது, ஒரு சென்சார் சாதனம், நோயாளியின் கை அல்லது வயிற்று பகுதியில் பொருத்தப்படும். அதில் உள்ள, 2 முதல் 3 மி.மீட்டர் நீளத்திலான ஊசி, ரத்த நாளத்துடன் இணைக்கப்படும். அதன் வழியே, தினமும் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை, நம் மொபைல் போனில் அறிந்து கொள்ள முடியும்.
இந்த சாதனத்தை நான்கு வாரங்கம் மட்டுமே பயன்படுத்த முடியும். அதன்பின் வேறு சாதனம் பொருத்த வேண்டும். இதற்கு கூடுதல் செலவாகும். இந்நிலையில், சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சியாளர்கள், ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை எளிதாக அறிந்து கொள்ள, 'கை கடிகாரம்' வடிவிலான கருவியை உருவாக்கி, அதற்கு காப்புரிமை பெற்றுள்ளனர்.
இந்த கை கடிகாரத்திற்கு கீழே, 'சென்சார்' பொருத்தப்பட்டுள்ளது. அதில் உள்ள 1 மி.மீ., அளவிலான ஊசி, ரத்த நாளங்களுக்கு மேல் இருக்கும் திரவங்கள் வழியே, ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை உடனடியாக கணக்கிட்டு, கை கடிகாரத்தின் திரையில் காண்பிக்கும். இந்த புதிய கருவியில், ஊசியை மட்டும் தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம்.
இது குறித்து, சென்னை ஐ.ஐ.டி.,யின் உலோகவியல் மற்றும் பொருட்கள் இன்ஜினியரிங் துறையின் மின்னணு பொருட்கள் ஆய்வகத்தின் பேராசிரியர் பரசுராமன் சுவாமிநாதன் கூறுகையில், ''கை விரல்களில் ஊசியை குத்தி, ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை அறியும், அசவுகரியத்தை தவிர்க்க, சென்னை ஐ.ஐ.டி.யின் புதிய கண்டுபிடிப்பு வழிவகை செய்யும்,'' என்றார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan