கோடை காலத்தில் சரும பிரச்சனைகள் வராமல் பாதுகாப்பது எப்படி?
10 பங்குனி 2020 செவ்வாய் 05:16 | பார்வைகள் : 9561
கோடையில் தான் குளிர்காலங்களை விட அதிகமாக முக சருமத்தில் அழுக்குகள் தங்கும், அதோடு உடலில் கோடை வெயிலை அதிகம் தாங்கும் பகுதியும் நமது முகம் தான். எனவே தான் நமது முகம் வறண்டு போதல், பருத்தொல்லை, வேனற்கட்டிகள், தோல் சுருக்கங்கள், சருமம் கருத்தல் உள்ளிட்ட பிரச்சினைகள் எல்லாம் தாங்கவேண்டியதாகி விடுகிறது. இவற்றிலிருந்து எளிதாக தப்புவது எப்படி? என்று அறிந்து கொள்ளலாம்.
* முகத்தை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள், பார்ட்டிகளுக்கோ அல்லது நண்பர்கள், உறவினர் வீடுகளுக்கோ சென்று திரும்பும் போது மறக்காமல் முகத்தில் செய்து கொண்ட ஒப்பனைகளை மறக்காமல் ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி நன்றாக கழுவி விட்டுத் தூங்கச் செல்லுங்கள்.
* எப்போது வெளியில் சென்று விட்டு வீடு திரும்பினாலும், திரும்பியதும் உடனே ஒரு முறை முகம் கழுவித் துடைக்க மறக்க கூடாது.
* முகம் கழுவும் போது முகத்தசைகளை அதிகம் அழுத்தி, தேய்த்து கழுவக் கூடாது. முகத்தில் தோலை அழுத்திக் கழுவினால் தோல் அழற்சி ஏற்பட்டு விரைவில் முகத்தில் தோல் எரிச்சலும், முகச் சுருக்கங்களும் தோன்றும்.
* வீட்டிலோ, அலுவலகத்திலோ எங்கிருந்தாலும் சரி அடிக்கடி முகத்தை விரல்களால் தொட்டுக் கொண்டே இருக்க வேண்டியதில்லை. விரல்களில், இதனால் நகங்களில் உள்ள பாக்டீரியாக்கள் முகத்தில் உள்ள சருமத் துளைகள் வாயிலாக ஊடுருவி பருக்களும், தேமல்களும் உருவாகும் வாய்ப்பை நாமே ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை.
* உங்களது ஒப்பனை சாதனங்களில் நான் கமெடோஜெனிக் லேபிள் இருக்கிறதா என்று சோதித்து பொருட்களை வாங்குங்கள். ஏனெனில் அந்த லேபிள்கள் இல்லாத ஒப்பனைப் பொருட்கள் முகச் சருமங்களில் கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகள் தோன்றக் காரணமாகும் சாத்தியம் இருக்கிறது.
* அடிக்கடி வெயிலில் அலையத் தேவையில்லை. ஏனெனில் வெயில் பருக்கள் உருவாகும் வாய்ப்பை அதிகப்படுத்தி விடும்.
* வாரம் ஒருமுறை ஆண்ட்டி ஆக்னே மாஸ்குகளைப்( முகப்பரு எதிர்ப்பு முகமூடிகள்!) பயன்படுத்தலாம்.
* சில நேரங்களில் முகப்பருக்கள் தோன்ற அவரவர் உடலில் சுரக்கும் ஹார்மோன் சமநிலையின்மையும் காரணம் என்பதால் டெர்மட்டாலஜிஸ்டுகளிடம் செல்லும் போது அவர்கள் உங்களை ஹார்மோன் டெஸ்டுகள் எடுக்கச் சொல்லவும் வாய்ப்பிருக்கிறது.
* முகத்திலும், முன் நெற்றிப் பகுதியிலும் பருக்கள் தோன்ற தலையில் இருக்கும் பொடுகும் ஒரு காரணம் என்பதால், உங்களது டெர்மட்டாலஜிஸ்டுகளை அணுகி உங்களது உடல்வாகு மற்றும் தோல் இயல்புக்குத் தக்கவாறு பொடுகு நீக்கி ஷாம்புக்களைப் பயன்படுத்துங்கள்.
* உங்களது உடலிலும் பருக்களோ, இன்ஃபெக்ஸன்களோ இருக்கும் பட்சத்தில் இறுக்கமான உடைகளை அணிவதைத் தவிர்த்து விடுங்கள்.
மேற்சொன்ன சரும நல டிப்ஸ்களை மறவாமல் பயன்படுத்தி வரப்போகும் கோடையின் கடுமையான அக்னி நட்சத்திர நாட்களை கடந்து செல்லுங்கள்.