Paristamil Navigation Paristamil advert login

என்ன பூச்சாண்டி காட்டினாலும் பயப்பட மாட்டேன்: இபிஎஸ்

என்ன பூச்சாண்டி காட்டினாலும் பயப்பட மாட்டேன்: இபிஎஸ்

9 கார்த்திகை 2025 ஞாயிறு 09:12 | பார்வைகள் : 124


என்ன பூச்சாண்டி காட்டினாலும் பயப்பட மாட்டேன் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் நடந்த அதிமுக கூட்டத்தில் இபிஎஸ் பேசியதாவது: எங்கள் மடியிலே கனம் இல்லை. வழியிலே பயம் இல்லை. கொடநாட்டில் எடப்பாடி பழனிசாமி எப்படினு உங்களுக்குத் தெரியும். என்ன பூச்சாண்டி காட்டினாலும் பழனிசாமி பயப்படமாட்டான். சட்டத்தின் ஆட்சி நடத்தினோம்.

அதிமுக ஆட்சியில் நான் முதல்வராக இருந்தபோது சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. சட்டப்படி தவறு செய்பவர்களை கண்டுபிடித்து சிறையில் அடைத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம். இந்த ஆட்சியில் அப்படியா இருக்கிறது? வேண்டுமென்று திட்டமிட்டு துரோகிகளும் இன்று பேசி வருகின்றனர். இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று எண்ணிப்பாருங்கள். இவர்கள் இயக்கத்திற்கு விசுவாசமானவர்களா?

எத்தனையோ எட்டப்பர்கள், துரோகிகள் நம் கூடவே இருந்து நம்மை வீழ்த்த முயன்றார்கள். அத்தனை பேரையும் நாம் வீழ்த்தி, தற்போது அதிமுக தலை நிமிர்ந்து நிற்கிறது. மக்கள், தொண்டர்கள் துணையோடு அனைத்து துரோகங்களையும் முறியடித்து உள்ளோம்.

வரும் தேர்தலில் அதிமுக சிறப்பான கூட்டணியை அமைக்கும். மக்களின் ஆதரவுடன் தேர்தலில் மாபெரும் வெற்றி பெறும். தமிழகத்தில் போதை ஆசாமிகளால் பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வருகிறது, ஆனால் இதை எல்லாம் தடுத்து நிறுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு திராணி இல்லை. இவ்வாறு இபிஎஸ் பேசினார்.

லஞ்சம், ஊழல்

மேலும் இபிஎஸ் பேசியதாவது: அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டத் திட்டம், முடிக்கப்பட்ட திட்டங்களைத் தான் நீங்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்துக்கொண்டிருக்கிறீர்கள். வேறு என்ன சாதனை செய்தீர்கள்? இந்த நான்கரை ஆண்டு காலம் வீணடிக்கப்பட்டுவிட்டது. லஞ்ச ஊழல் நிறைந்துவிட்டது. எல்லா துறையிலும் லஞ்சம், லஞ்சம் இல்லாத துறையே இல்லை. இந்தியாவிலேயே ஊழல் நிறைந்த மாநிலம் என்றால் அது தமிழகம் தான் என்று சொல்லுகின்ற அளவுக்கு மிக மோசமான கேவலமான ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

கார்ப்பரேட் கம்பெனி

திமுக என்றால் குடும்பம், குடும்பம் என்றால் திமுக. அது கட்சியல்ல கார்ப்பரேட் கம்பெனி. இன்று குடும்ப ஆட்சி நடக்கிறது. தமிழக மக்களைப் பொறுத்தவரை விழிப்புணர்வுள்ள, அறிவுக்கூர்மையுள்ள மக்கள். யார் ஆட்சிக்கு வரவேண்டும், யார் வரக்கூடாது என்பதைத் தீர்மானிக்கக் கூடிய சக்தி படைத்த மக்கள். எனவே கொள்ளையடிக்கும் கட்சி தேவையா? ஆட்சியில் இருக்க வேண்டுமா?

பிள்ளையார் சுழி

இன்பநிதியையும் கொண்டுவர பிள்ளையார் சுழி போட்டுள்ளனர். கருணாநிதி குடும்பம் என்ன அரச குடும்பமா? அவர் குடும்பம் தான் ஆட்சிக்கு வர வேண்டுமா? முதல்வராக வேண்டுமா? நெல் மணிகள் முளைத்துவிட்டது. நான் நேரடியாக சென்று பார்த்தேன். விவசாயிகள் கண்ணீர் விட்டனர். இதற்கெல்லாம் முடிவு கட்டும் தேர்தல் 2026ம் ஆண்டு தேர்தல். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்