சிறப்பு குழந்தைகளை மேலும் சிறப்பாக்கலாம்
2 பங்குனி 2020 திங்கள் 05:42 | பார்வைகள் : 9054
ஆட்டிசம் குறைபாட்டை சீராக்க இன்று பல மருத்துவ பயிற்சிகளும், செயல் விளக்க பயிற்சி முறைகளும் வந்துவிட்டன. அதனால் ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகள் சில வருட பயிற்சியிலேயே சாதாரண இயல்பு உடைய குழந்தைகளை போல பேசவும், பழகவும் முடிகிறது’’ என்று முதல் கருத்திலேயே முத்திரை பதிக்கிறார், சுவர்ண லதா.
இவர் சென்னை அண்ணா நகரில் சிறப்பு குழந்தைகளுக்கான பயிற்சி பள்ளி ஒன்றை நடத்தி வரு கிறார். அங்கு ஆட்டிசம் பாதிப்பிற்குள்ளான குழந்தைகளும், வாய் பேச சிரமப்படும் குழந்தைகளும் பள்ளிக்கூட மாதிரியில் பாடம் பயில்கிறார்கள். வேலைவாய்ப்பு குறித்த சிறப்பு பயிற்சியும் பெறுகிறார்கள்.
‘‘என்னுடைய மகனுக்கும் ஆட்டிசம் குறைபாடு இருந்தது. அதனால் அவனுக்கான கல்வி கேள்விக்குறியானது. மகனுக்காக பல பள்ளிகளில் விசாரித்தோம். ஆனால் அவனுக்கான கல்வியும், அவனுக்கான திறன் பயிற்சிகளும் குறைவாகவே இருப்பதை உணர்ந்தோம். பல பள்ளிகளை மாற்றியபிறகும், சிறப்பு குழந்தைகளுக்கு தேவையான அம்சங்கள் முழுமையாக கிடைக்கப்பெறவில்லை. அதனால்தான், சொந்தமாகவே சிறப்பு பள்ளி ஒன்றை தொடங்கும் முடிவிற்கு வந்தோம். அதற்கு என் கணவர் ஹரிஹரனும் உதவினார்.’’ என்பவர், இன்று தன் மகனுக்கு கிடைக்கப்பெறாத முழுமையான கல்வியையும், சிறப்பு பயிற்சிகளையும் பல சிறப்பு குழந்தைகளுக்கு வழங்கி வருகிறார். அதில் பல இலவச சேவைகளும் அடங்கியிருக்கிறது.
‘‘சிறப்பு குழந்தையின் அன்னையாக நான் பல சிரமங்களை சந்தித்திருக்கிறேன். பயிற்சி பள்ளி தேடுவது, உடற்கல்வி ஆசிரியரை தேடுவது... இப்படி நான் அனுபவித்த சிரமங்களுக்கு தீர்வாகவே என் பள்ளி அமைந்திருக்கிறது. இங்கு கல்வி, உடற்பயிற்சி, திறன் வளர்ப்பு பயிற்சிகள், வேலைவாய்ப்பு சிந்தனைகள் என பலவும் பயிற்றுவிக்கப் படுகின்றன. இதை ஒரு சிறப்பு குழந்தையின் அன்னை யாகவே பகிர்ந்து கொள்கிறேன்.
குழந்தைகளின் ஆட்டிச பாதிப்புகளை ஆராய்ந்து, அதற்கு ஏற்ப முறையான பயிற்சி கொடுத்தால், சில வருடங்களிலேயே அவர்களை இயல்பான குழந்தைகளாக மாற்றலாம். இந்த பயிற்சி காலத்திலேயே அவர்களுக்கான கல்வி முறையாக வழங்கப்படும். இதற்கிடையில், உடல் இயக்க பயிற்சிகளும், சீரான பேச்சு பயிற்சியும் கொடுக்கிறோம். இதனால் பேச சிரமப்படும் குழந்தைகள் விரைவிலேயே பேசுகிறார்கள். மேலும் சிந்தித்தல் குறைபாடு உள்ளவர்களும், விரைவிலேயே நலம் பெறுகிறார்கள்.’’ என்பவர், சிறப்பு குழந்தைகளின் எதிர்காலம் குறித்தும் திட்டமிடுகிறார்.
‘‘சிறப்பு குழந்தையின் அன்னையாக நான் என்னவெல்லாம் செய்ய ஆசைப்படுவேனோ, அவை அத்தனையையும் இந்த பயிற்சி பள்ளியில் கொண்டு வந்திருக்கிறேன். இங்கு சிறப்பு குழந்தைகள் படிக்கலாம். பயிற்சி பெறலாம். இயல்பான குழந்தைகளாக மாறி வீடு திரும்பலாம். மேலும் அவர்களது எதிர்காலத்தை கூட சுயமாகவே கட்டமைத்து கொள்ளலாம். அதற்கான அத்தனை வசதிகளையும், நான் ஏற்படுத்தியிருக்கிறேன். ’’ என்பவர், இதுவரை வாய் பேச சிரமப்படும் பல குழந்தைகளை வர்ம கலை ஆசிரியர் மோகன் மூலம் சீராக்கி உள்ளார். அதுபற்றி மருத்துவ அறிவும், வர்ம கலை அறிவும் நிரம்பப்பெற்ற மோகனிடம் பேசினோம்.
‘‘தாடை அசைவு பயிற்சி, வர்ம கலை பயிற்சியின் மூலம் வாய் பேச சிரமப்படும் குழந்தைகளை எளிதாக பேச வைக்கலாம். இதற்கு சில காலம் தேவைப்பட்டாலும், குழந்தைகளால் நன்றாக வாய் பேச முடியும். என்னுடைய அனுபவத்தில், 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளை சிறப்பாக பேச வைத்திருக்கிறேன். மருத்துவ ரீதியான பேச்சு பயிற்சியும், வர்ம கலை பயிற்சியும் கைக்கொடுப்பதால், குழந்தைகளை பேச வைக்க முடிகிறது.’’
இந்த பள்ளியில் ஒவ்வொரு துறைக்கு பிரத்யேக ஆசிரியர்கள் இருக்கிறார்கள். சுவர்ண லதா, மோகன் ஆகியோருடன் ஜெய்ஸ்ரீ என்பவரும் சிறப்பு குழந்தைகளை மேலும் சிறப்பாக்க உதவுகிறார்.