Paristamil Navigation Paristamil advert login

துபாய் பாலைவனத்தில் புதைக்கப்பட்ட நிலையில் கிரிப்டோ கோடீஸ்வர தம்பதியின் உடல்

துபாய் பாலைவனத்தில் புதைக்கப்பட்ட நிலையில் கிரிப்டோ கோடீஸ்வர தம்பதியின் உடல்

10 கார்த்திகை 2025 திங்கள் 06:06 | பார்வைகள் : 232


ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு காணாமல் போன கிரிப்டோ கோடீஸ்வரர் தம்பதி துபாய் பாலைவனத்தில் துண்டு துண்டாக வெட்டி புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

ரஷ்யர்களான ரோமன் மற்றும் அன்னா நோவக் தம்பதி துபாயின் மலைப்பகுதி ரிசார்ட்டான ஹட்டாவில் உள்ள ஒரு ஏரிக்கரையில் மர்ம முதலீட்டாளர்களை சந்திக்கும் பொருட்டு சென்றுள்ளனர்.

ஆனால், அதன் பின்னர் அவர்கள் கடத்தப்பட்டதாக தகவல் வெளியானதுடன், பெருந்தொகை கேட்டு மிரட்டலும் விடுக்கப்பட்டது. அந்த மர்ம நபர்கள் கேட்டிருந்த பணம் தரப்படாத நிலையில், சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு அவர்களின் சடலம் பாலைவனத்தில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ரஷ்யாவில் உள்ள உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், இதுவரை செயிண்ட் பீட்டர்ஸ்பர்க், ஸ்டாவ்ரோபோல் மற்றும் கிராஸ்னோடர் பகுதிகளில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொல்லப்பட்டுள்ள ரோமன் மற்றும் அன்னா நோவக் தம்பதிக்கு டெலிகிராம் சமூக ஊடக உரிமையாளர் பாவெல் துரோவ் உட்பட பணக்காரர்கள் பலரின் தொடர்புகளும் இருந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று, அவர்களின் தனிப்பட்ட சாரதியே துபாய் ஏரிக்கரை ரிசார்ட் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால், அவர்கள் அங்கிருந்து முதலீட்டாளர்களை சந்திக்கும் பொருட்டு வேறு வாகனம் ஒன்றில் புறப்பட்டுள்ளனர்.

அதேவேளை, ரோமன் தமக்கு நெருக்கமான ஒருவருக்கு அனுப்பிய தகவலில், அவர் ஓமன் எல்லையில் உள்ள மலைப்பகுதியில் சிக்கிக்கொண்டதாகவும் அவருக்கு 200,000 டொலர் உடனடியாக தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த தம்பதி தொடர்பான விசாரணையில், அவர்களின் அலைபேசியைத் தொடர்புகொள்ள பல நாட்கள் முயன்றுள்ளனர். ஆனால், அதிகாரிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

இந்த வழக்கில் தற்போது ரஷ்யா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் இணைந்து பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே, கிரிப்டோ முதலீட்டாளர்கள் பலரிடம் இருந்தும் சுமார் 380 மில்லியன் பவுண்டுகள் தொகையை ஏமாற்றியதாக ரோமன் மீது விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில், சீனா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள் பலர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களில் எவரேனும், ரோமன் மற்றும் அன்னா நோவக் தம்பதியை கொலை செய்ய திட்டமிட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்