Paristamil Navigation Paristamil advert login

கண் பார்வை குறைபாட்டை போக்கும் யோகா

கண் பார்வை குறைபாட்டை போக்கும் யோகா

30 மார்கழி 2019 திங்கள் 05:50 | பார்வைகள் : 9136


 மனிதன் பிறந்தது முதல், இறக்கும் வரை நமது எல்லா செயல்களும் சிறப்பாக நடைபெற வாழ்க்கையை வளமாக, நலமாக வாழ கண் என்ற உறுப்பு மிக அவசியம். அதனால் தான் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும் பொழுது என் கண்ணையே உன்னிடம் ஒப்படைக்கின்றேன் என்று கூறுவது வழக்கம். அப்படியென்றால் கண்ணை நாம் பாதுகாப்பது போல், என் பெண்ணை பாதுகாத்து வாழ வழிவகை செய்யுங்கள் என்று தானே அர்த்தம்.

 
ஆனால் இன்றைய மனிதர்கள் எல்லாரும் கண்ணைப் பாதுகாக்கின்றார்களா? அந்த காலத்தில் தொன்னூறு வயதிலும் கண்ணிற்கு கண்ணாடி போடாமல் வாழ்ந்த மனிதர்கள் ஏராளம். இன்றோ ஒன்பது வயதில் 9 தடவைகள் கண்ணிற்கு கண்ணாடி மாற்றிப் போட்டு கவலையுடன் வாழ்கின்ற மனிதர்கள் தான் ஏராளம். என்ன காரணம்? நாம், நமது முக்கிய உறுப்பான கண்ணைப் பாதுகாக்க தவறிவிட்டோம்.
 
 
கிட்டப்பார்வை ஏற்பட்டோருக்கு கிட்டத்தில் இருக்கும் பொருட்களை நன்கு பார்க்க முடியும். அதாவது கிட்டப் பார்வையில் அருகில் இருக்கும் பொருட்களின் பிம்பங்கள் விழித்திரையில் விழும். விழிக்கோளின் திசுக்களில் ஏற்படும் கோளாறினால் தள்ளிருக்கும் பொருட்களின் பிம்பங்கள் விழித்திரைக்கு முன்னாலேயே விழுந்துவிடும்.
 
தூரப்பார்வையில் தள்ளியிருக்கும் பொருட்களின் பிம்பம் சரியாக விழும். அருகில் இருக்கும் பொருட்களின் பிம்பங்கள் விழித்திரைக்கு பின்னால் விழும். பிம்பம் விழித்திரையில் விழுந்தால் மட்டுமே அதை நாம் உணர முடியும்.
 
பார்வைக் குறை இரண்டு விதமாக உள்ளது.
1. ஒளிவிலகல் தவறு.
2. கண் அமைப்பிலேயே தவறு
 
திரிகோணாசனம் செய்முறை
 
விரிப்பில் கிழக்கு நோக்கி இரு அடி கால்களை அகற்றி நிற்கவும். கைகளை பக்கவாட்டில் நேராக நீட்டவும். இப்பொழுது மூச்சை வெளிவிட்டுக் கொண்டு இடது கையை வலது கால் பெருவிரலைத் தொடவும். வலது கையை மேல் நோக்கி வைத்து உங்கள் கண்களால் வலது கை விரலை 20 விநாடிகள் பார்க்கவும். (படத்தைப் பார்க்கவும்). பின் மெதுவாக மூச்சை உள் இழுத்து சாதாரண நிலைக்கு வந்து மூச்சை வெளிவிடவும்.
 
இதேபோல் மூச்சை வெளியிட்டு வலது கையால் இடது காலை தொடவும். இடது கையை மேல் நோக்கி வைத்து உங்கள் கண்களால் இடது கைவிரலை 20 விநாடிகள் பார்க்கவும். பின் மெதுவாக மூச்சை உள் இழுத்து நிமிர்ந்து சாதாரண நிலைக்கு வரவும். இதுபோல் மூன்று முறைகள பயிற்சி செய்யவும்.
 
சூரிய ஒளி சிகிச்சை
 
அதிகாலை சூரியன் உதயமாகும் நேரம் மூன்று நிமிடங்கள் சூரியனை உற்று நோக்கவும். பின் மெதுவாக கண்களை மூடி ஒரு நிமிடம் ஓய்வெடுக்கவும். இதேபோல் மூன்று முறைகள் செய்யவும்.
 
கண்களின் மேல் மஜாஜ்
 
விரிப்பில் கிழக்கு நோக்கி அமரவும். கண்களை மூடவும். இரு கைகளையும் சுண்டுவிரல் ஒட்டி இருக்கும் கைகளின் மேடான பகுதியை மூடிய கண்களின் மேல் மெதுவாக வைத்து கண்களிலிருந்து காதுப்பகுதியை நோக்கி வருடிவிடவும். இது ஒரு மஜாஜ் செய்வது போல் இருக்கும். பத்து முதல் பதினைந்து முறை இவ்வாறு செய்யவும்.
 
கண் கழுவுதல்
 
குளிர்ந்த சுத்தமான குடி தண்ணீரை ஒரு அகன்ற பாத்திரத்தில் ஊற்றவும். அதில் தண்ணீர் வழிய வழிய நிரப்பிக் கொள்ளவும். தலையைக் குனிந்து கொண்டு கண்ணை விழித்து அந்த பாத்திரத்தினுள் கண்ணை மூழ்கச் செய்து கண் விழியினை உருட்டவும். இமையை லேசாக மூடித் திறக்கவும். மீண்டும் புதிதாக நீர் நிரப்பி அடுத்த கண்ணுக்கும் இவ்வாறு செய்யவும்.
 
ஒவ்வொரு கண்ணிற்கும் இரண்டு முறை செய்யவும். காலையில் குளிக்கும் பொழுதும், மாலையிலும் ஒரு முறை செய்யலாம். இதனை டி.வி. பார்த்த பின்பு, சினிமா பார்த்த பின்பு, சாலைகளில் போய் வந்த பின்பு, அதிகம் படிப்பவர்கள் இந்த கண் கழுவும் பயிற்சியைச் செய்யலாம்.
 
கண் கழுவுதல் பயிற்சியின் பலன்கள்
 
* கண்களுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கின்றது.
* கண்கள் குளிர்ச்சியடைகின்றது.
* கண்களிலுள்ள தூசிகள், அழுக்குகள் வெளியாகின்றது.
 
தீபத்தை உற்று நோக்குதல்
 
ஒரு விரிப்பில் நேராக அமர்ந்து கொள்ளவும். வஜ்ராசனத்தில் அமர்ந்தால் மிகவும் நல்லது. உங்கள் கண்முன் ஒரு தீபம் ஏற்றவும். அந்த தீபத்தை அதன் சுடரை ஒரு இரண்டு நிமிடம் உற்று பார்க்கவும். பின் ஒரு நிமிடம் கண்களை மூடவும். இதுபோல் மூன்று முறைகள் செய்யவும். இதனை வாரம் ஒருமுறை செய்யலாம். அந்த காலத்தில் கிணற்றில், ஆற்றில், நீச்சல் அடித்து குளிப்பார்கள். தண்ணீரும் சுத்தமாக இருக்கும். கிணற்றில் மூழ்கி கண்களை விழித்துப் பார்ப்பார்கள். அதனால் கண்ணில் உள்ள தூசுகள் போகும். கண் நரம்புகள் பலமாக இயங்கியது.
 
நாம் மீண்டும் பழைய கால ஒழுக்க வாழ்விற்குச் செல்வோம். உங்கள் வீட்டில் வளரும் செல்லக் குழந்தைகளுக்கு முன்னாடியே இந்த கண் பயிற்சியை, யோகத்தைப் பயிற்றுவித்தால் பின்னாடி, கண்ணாடி அணியாமல், அனைவருக்கும் முன்னோடியாகத் திகழ்ந்து வாழ்வாங்கு வாழலாம். 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்