Paristamil Navigation Paristamil advert login

ஜேர்மனியின் ஹம்பர்க் நகரில் கழிவுநீர் மாதிரியில் போலியோ வைரஸ்

ஜேர்மனியின் ஹம்பர்க் நகரில் கழிவுநீர் மாதிரியில் போலியோ வைரஸ்

15 கார்த்திகை 2025 சனி 05:54 | பார்வைகள் : 188


ஜேர்மனியின் ஹம்பர்க் நகரில் கழிவுநீர் மாதிரியில் போலியோ வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

ஏற்கனவே அந்நாட்டின் பல்வேறு இடங்களில் போலியோ வைரஸின் 2ஆவது ரகம் அண்மையில் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது ஹம்பர்க்கில் முதல் ரக போலியோ வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இதனால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்ற போதிலும், முறையான தடுப்பூசி செலுத்தாத நபர்களுக்கு போலியோ பாதிப்பு ஏற்படக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

‘போலியோ’ என்று அழைக்கப்படும் ‘போலியோமைலிடிஸ்’ நோய் பாதிப்பு, 20-ம் நூற்றாண்டின் முதல் பாதியில் உலகத்தின் பெரும்பாலான நாடுகளை அச்சுறுத்திய நோயாகும்.

குறிப்பாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை இந்த நோய் அதிகமாக பாதிக்கும்.

இது பெரும்பாலும் அறிகுறியற்றது.

இருப்பினும் காய்ச்சல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகளையும் ஏற்படுத்தும்.

உலகில் போலியோவால் பாதிக்கப்படும் 200 நபர்களில் ஒருவருக்கு மீளமுடியாத பக்கவாதம் ஏற்படுகிறது.

மேலும் நோயாளிகளில் 10 சதவீதம் பேர் உயிரிழக்கின்றனர்.

இதற்கு எந்த சிகிச்சையும் இல்லை. ஆனால் தடுப்பூசி மூலம் போலியோவை தடுக்க முடியும்.

மேலும் 1988-ம் ஆண்டு பாமர மக்களுக்கான தடுப்பூசி முயற்சிகள் தொடங்கிய பிறகு, உலகளவில் போலியோ பாதிப்புகள் 99 சதவீதம் குறைந்துள்ளன.

போலியோ வைரஸ் கிருமியில் 2 ரகங்கள் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இரண்டும் பக்கவாதம் மற்றும் மரணத்தை ஏற்படுத்தும்.

இதில் முதல் ரக போலியோ அரிதானது. இப்போது ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் மட்டுமே காணப்படுகிறது.

இரண்டாவது ரகம் பொதுவாக காணப்படும் போலியோ பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.

ஆனால் அதுவும் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் கழிவுநீர் மாதிரியில் போலியோ வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்