Paristamil Navigation Paristamil advert login

வங்கக்கடலில் இரு காற்றழுத்த தாழ்வு 8 மாவட்டங்களில் இன்று கனமழை

வங்கக்கடலில் இரு காற்றழுத்த தாழ்வு 8 மாவட்டங்களில் இன்று கனமழை

18 கார்த்திகை 2025 செவ்வாய் 11:13 | பார்வைகள் : 111


வங்கக்கடலில் ஏற்கனவே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி, 22ம் தேதி உருவாக உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அந்த மையத்தின் அறிக்கை:

நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில், 12 செ.மீ., மழை பெய்து உள்ளது.

இதற்கு அடுத்தபடியாக, மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில், 9; ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம், 8; நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், தலைஞாயிறு, மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம், சீர்காழி ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில், இலங்கை கடலோர பகுதிக்கு அப்பால் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே பகுதியில் நீடிக்கிறது.

இது அடுத்த, 24 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கில், தமிழகம் நோக்கி மெதுவாக நகரக்கூடும்.

இந்நிலையில், தென்கிழக்கு வங்கக் கடலில், வரும், 22ல் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதுவும் மேற்கு, வடமேற்கு திசையில் தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு உள்ளது.

இதனால், தமிழகத்தில் பெரும்பாலான இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம். நாளை முதல், 22ம் தேதி வரை, மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி, தேனி மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை, செங்கல்பட்டு உட்பட வடகடலோர மாவட்டங்களில், 21ல் மீண்டும் கனமழை துவங்க வாய்ப்பு உள்ளது.

தென்மாவட்ட கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் இன்று, சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்