இயற்கை அழகுதரும் செயற்கை புருவங்கள்
2 மார்கழி 2019 திங்கள் 09:50 | பார்வைகள் : 9612
பெண்கள் தங்கள் முகத்திற்கு தேவையான அழகினை பெற ‘புருவத்தை பயிர்செய்’யத் தொடங்கியிருக்கிறார்கள். தங்கள் முகத்தின் அழகினை மேம்படுத்த எத்தகைய புருவம் தேவை என்பதை முடிவுசெய்துவிட்டு அதை அப்படியே உருவாக்கி அழகில் ஜொலிக்கிறார்கள். இதற்காக நவீன தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
மான் போன்ற கண்கள் இருந்தாலும், ரோஜாப்பூ போன்ற இதழ்கள் இருந்தாலும் அழகான புருவங்கள்தான் பெண்களை பேரழகாக்கிக் காட்டுகிறது. ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு புருவங்கள் அவ்வளவு சிறப்பாய் அமைவதில்லை. மெலிதாகவும், முழுமையான வடிவம் பெறாமலும், கண்ணுக்கு அருகில் இறங்கியும், போதுமான அடர்த்தி இல்லாமலும் இருப்பவர்கள், தேவையான அளவில் புருவங்களை உருவாக்கி அழகை மேம்படுத்தலாம். அப்படி புருவத்தை பயிர்செய்ய ஒன்றரை மணிநேரம் போதுமானது. அதற்கு ‘மைக்ரோ பிளேடிங்’ என்று பெயர்.
இதற்காக முதலில் புருவத்தை துல்லியமாக வடிவமைத்து ‘த்ரெட்’ செய்து அழகாக்குவார்கள். அதற்கு மேல் புருவத்தை எந்த அளவுக்கு மேம்படுத்த வேண்டுமோ அதற்காக வரைந்து ‘ஸ்கெட்ச்’ போடுவார்கள். அதன் பிறகு இதற்காக இருக்கும் விசேஷ மை மூலம் செயற்கை புருவத்தை உருவாக்கி நிரப்புவார்கள்.
இப்படி புதிய புருவங்களை உருவாக்கும் மைக்ரோ பிளேடிங் செய்வதற்கென்று விசேஷ கருவிகள் இருக்கின்றன. அதனை பயன்படுத்தி மட்டுமே செய்ய முடியும். இதற்காக பயிற்சி பெற்றவர்கள், முழுமையான சுகாதார முறைகளை பின்பற்றி இதை உருவாக்குவார்கள்.
பெரும்பாலான பெண்கள் தங்கள் புருவ ரோமங்களின் நிறத்தில் கவனம் செலுத்துவதில்லை. ஆனால் சரும நிறத்திற்கு பொருத்தமாக புருவ ரோமத்தின் நிறம் அமையவேண்டும். மைக்ரோ பிளேடிங்குக்கு தயார் ஆவதற்கு முன்பு உங்களுக்கு எந்த நிறம் பொருத்தமாக இருக்கும் என்பதை தேர்ந்தெடுக்கவேண்டும். கறுப்பு, பிரவுன், டார்க் பிரவுன், லைட் பிரவுன் போன்றவை தென்னிந்திய பெண்களின் சருமத்திற்கு பொருத்தமாக இருக்கும். ஆனால் இப்போது பெரு நகரங்களில் வாழும் பெண்கள் புதிய வருகையான அரபிக் ஸ்டைலை தேர்ந் தெடுக்கிறார்கள். அதில் தங்க நிறம் கலந்திருக்கும். அதை பயன்படுத்தியும் புருவங்களை புனரமைப்பு செய்கிறார்கள்.
புதிய புருவத்தை உருவாக்க விரும்பும் பெண்ணின் முக அமைப்புக்கு பொருத்தமான வடிவத்தை முதலில் முடிவுசெய்கிறார்கள். அப்போதே புருவத்திற்கு தேவையான அடர்த்தியையும் கணக்கிடுகிறார்கள். வட்டம், சதுரம், ஓவல் வடிவங்களில் முக அமைப்பை பெற்றவர்களுக்கு கெட்டியான புருவமே அதிக அழகுதரும். சிறிய முகம் கொண்டவர்களுக்கு ஒல்லியான நீண்ட புருவம் அதிக அழகுதரும்.
சில பெண்கள் பிறவியிலேயே அடத்தியற்ற புருவத்தை பெற்றிருப்பார்கள். சிலருக்கு புருவ முடிகளும் அடிக்கடி உதிர்ந்துகொண்டிருக்கும். அதற்கும் மைக்ரோ பிளேடிங் துணைபுரியும். முழுமையாக புருவத்தை வடிவமைப்பதற்கு பதில், புருவங்களின் இடைஇடையே நிரப்பியும் மைக்ரோபிளேடிங் செய்யலாம்.
18 வயதை கடந்தவர்களுக்கே இதை செய்யவேண்டும். நடுத்தர வயதினருக்கு புருவ ரோமங்களில் அதிக அளவில் உதிரும். எந்த வயதினராக இருந்தாலும் அவர்களுக்கு ஒன்றரை மணி நேரத்தில் மைக்ரோபிளேடிங் செய்து விடலாம்.
இந்த முறையில் புருவத்தை வடிவமைத்த பின்பு சில நாட்கள் மிக கவனமாக பராமரிக்கவேண்டும். மைக்ரோ பிளேடிங் செய்த முதல் நான்கு நாட்களுக்கு புருவங்களில் சோப், பேஸ் வாஷ் போன்ற எதுவும் படக்கூடாது. குளிர்ந்த நீரை மட்டும் பயன்படுத்தி முகத்தை கழுவலாம். நான்கு நாட்கள் கடந்த பின்பு வழக்கமான பராமரிப்பு முறைகளுக்கு மாறிவிடலாம். எப்போதும் பயன்படுத்தும் சோப், பேஸ் வாஷ் போன்றவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.
மைக்ரோ பிளேடிங் செய்த முதல் நாளில் புருவம் அடர்நிறத்திற்கு தோன்றினாலும் நான்கு நாட்களில் முகத்திற்கு பொருத்தமாக, இயற்கை நிறம்போல் ஆகிவிடும். முதல் சில நாட்களில் அழகுக்கலை நிபுணர் பரிந்துரைக்கும் கிரீமை, அவ்வப்போது புருவங்களில் பூசவேண்டிய திருக்கும். நான்கு நாட்களும் கடந்த பின்பு வெயில்கொள்வது, மழையில் நனைவது போன்ற வழக்கமான அனைத்துக்கும் எந்த தடையும் இல்லை.
மைக்ரோ பிளேடிங் செய்வது நிரந்தரமானது. நீண்ட ஆயுளைகொண்டது. பத்து வருடங்கள் கடந்த பின்பு ஒருவேளை அதன் ஜொலிப்புத்தன்மை குறைந்தாலும், வேறு எந்த வித குறைபாடுகள் எதுவும் தோன்றாது. நிறம் மங்கும்போது மீண்டும் ‘பில்லிங்’ செய்துகொள்ளலாம். அனைத்து வகை சருமத்தினருக்கும் இது பொருந்தும்.
மைக்ரோ பிளேடிங் செய்த புருவங்களின் மேலும் கீழும் இயற்கையான புருவ ரோமங்கள் வளர்ந்துகொண்டிருக்கும். அவைகளை அந்தந்த காலகட்டங்களில் த்ரெட்டிங் செய்யவேண்டும். அதை சரியான முறையில் பரா மரிக்காவிட்டால் புருவ ரோமங்கள் நெட்டையும் குட்டையுமாக தோன்றும் நிலை உருவாகிவிடும்.
முக்கியமான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது புருவங்களில் கூடுதல் மேக்அப் செய்பவர்கள், நிகழ்ச்சி முடிந்த பின்பு ‘ரிமூவர்’ பயன்படுத்தி புருவங்களை சுத்தம் செய்துவிடவேண்டும்.