தோலில் ஏற்படும் பிரச்சினை
8 கார்த்திகை 2019 வெள்ளி 10:09 | பார்வைகள் : 9396
கெரட்டோசிஸ் பிலாரிஸ் என்பது தோல் கடினமான சொரசொரப்பான பரப்பைக் கொண்டிருக்கும் நிலையைக் குறிக்கிறது. மயிர் சிலிர்ப்பு (புல்லரித்தல்) ஏற்பட்டால் எப்படி இருக்குமோ, அது போல தோல் நிரந்தரமாக மாறிவிடுவதால் அதன் தோற்றத்தை வைத்து அதற்கு ‘சிக்கன் ஸ்கின்‘ என்று பெயரிட்டுள்ளனர். இதனால் கெடுதல் எதுவும் இல்லை, வீட்டிலேயே சில எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே இதனை சரிசெய்ய முடியும்.
இது முக்கியமாக கையின் மேல் பகுதியிலும் தொடையிலும் உண்டாகும். குழந்தைகளுக்கு கன்னத்திலும் உண்டாகலாம். தோலில் ஸ்குரூ போன்று பல புள்ளிகள் எழும்பிக் காணப்படும். அவை தோலின் நிறத்திலிருக்கலாம், சிவப்பாக அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கலாம். தோல் உப்பு காகிதம் போல சொரசரப்பாக காணப்படும். சிலசமயம், இந்த ஸ்குரூக்களை சுற்றிலும் இளஞ்சிவப்பு நிறமாகக் காணப்படலாம், அத்துடன் அரிப்பும் இருக்கலாம்.
தோலில் இருக்கும் மயிர்க்கால்களில் கெரட்டின் அதிகமாக சேருவதே இந்த ஸ்குரூக்கள் உண்டாக முக்கிய காரணமாகும். இப்படி கெரட்டின் அதிகமாக சேரும்போது மயிர்க்கால்களை அது அடைத்துக்கொள்வதால் தோல் சொரசொரப்பாக மாறி கடினமாகிறது. மேலும், இந்த சிறிய அடைப்புகளால் தோலில் உள்ள நுண்துளைகள் அகலமாகும்போது தோல் புள்ளி புள்ளியாகத் தோன்றும்.
பெரும்பாலும் கெரட்டோசிஸ் பிலாரிஸ் ஒரு குடும்பத்தில் உள்ள நபர்களிடையே அதிகம் காணப் படுகிறது, இதனை வைத்துப் பார்க்கையில் இது மரபியல் பிரச்சினை என்று கருதலாம். குளிர் மற்றும் குறைந்த ஈரப்பதமுள்ள காலநிலைகளில் இது அதிகமாக உண்டாகக்கூடும்.
தோலின் திசுப்பரிசோதனை செய்வதன் மூலம் இந்த பிரச்சினையின் அறிகுறிகளை கண்டறியலாம். உதாரணமாக கெரட்டின் சேர்ந்திருப்பது, மயிர்க்கால்கள் அடைபட்டு இருப்பது போன்ற அறிகுறிகள். இதனை தடுக்கவும் சிகிச்சையளிக்கவும் குறிப்பிட்ட வழிமுறைகள் எதுவும் இல்லை. எனினும், பின்வரும் நடவடிக்கைகள் உதவக்கூடும்.
சோப்பைப் பயன்படுத்தினால், தோலின் வறட்சி அதிகமாகும் என்பதால் சோப்பு பயன்படுத்துவதை தவிர்க்கலாம். குளிக்கும்போது தோலின் மடிப்புகளை விரித்துப் பரப்பச் செய்யும் போம் அல்லது நுரைக்கல் (பியூமிஸ் ஸ்டோன்) போன்றவற்றைப் பயன்படுத்தலாம். தோலுக்கு ஈரப்பதம் அளிக்க வேண்டும். வெந்நீரில் குளிப்பதற்கு பதிலாக வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். மேற்பூச்சாகப் பயன் படுத்தும் ரெட்டினாய்டுகளைப் பயன்படுத்தலாம். லேசர் முறையில் ரோமங்களை அகற்றலாம். தோல் சிவந்திருப்பதை தற்காலிகமாகப் போக்க, பல்ஸ் டை லேசர் சிகிச்சையளிக்கலாம்.
உங்களுக்கு கெரட்டோசிஸ் பிலாரிஸ் இருப்பதாக கண்டறியப்பட்டால், உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்ளவும், பிறகு மருத்துவர் வரச்சொல்லும் நாளில் தொடர்ந்து சிகிச்சை எடுக்கவும்.