மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் எண்ணெயால் வரும் பாதிப்பு
6 கார்த்திகை 2019 புதன் 16:44 | பார்வைகள் : 8737
உணவை எண்ணெயில் மீண்டும் மீண்டும் பொரிக்கும் போது, அவற்றில் உள்ள கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் சிதைந்து உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் நச்சு பொருளாக மாறுகிறது. பெரிய உணவகங்களில் பயன்படுத்தி மீதமாகும் சமையல் எண்ணெய், சிறு உணவகங்களுக்கும், தெருவோர கடைகளுக்கும் மலிவு விலையில் விற்கப்படுகிறது. பயன்படுத்தப்பட்ட எண்ணெய், தொடர்ந்து பயன்படுத்த உகந்ததா என்பதை ‘டோட்டல் போலார் காம்பவுண்ட்’ (டி.பி.சி.) என்ற அளவீடு மூலம் அளவிடப்படுகிறது. இது 25 சதவீதத்தை விட குறைவாக இருந்தால் மட்டுமே சமைக்க அனுமதிக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்பதால் இதய நோய், அல்சைமர், புற்றுநோய், கல்லீரல் நோய்கள், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. பெரிய உணவகங்களில் சமைக்கப்பட்டு மீதமான எண்ணெய், சில சிறு கடைகளுக்கு முறைகேடாக விற்கப்படுகிறது.
அந்த எண்ணெயை மறுசுழற்சிக்கு மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட உயிரி டீசல் உற்பத்தி நிறுவனங்களிடம் மட்டுமே வழங்க வேண்டும். பயன்படுத்திய எண்ணெய் தெருவோர கடைகளுக்கு விற்க கூடாது. இதுதொடர்பாக பெரிய உணவகங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
சென்னையில், தினமும் 50 லிட்டருக்கு மேல் சமையல் எண்ணெயை பயன்படுத்தும் சுமார் 20 உணவகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து வாரம் 22 டன் பயன்படுத்தப்பட்ட எண்ணெய், உயிரி டீசல் உற்பத்தி நிறுவனங்களுக்கு அனுப்பலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் தினமும் 50 லிட்டருக்கு மேல் சமையல் எண்ணெய் பயன்படுத்தும் உணவகங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
புகை வெளியேறாத அளவுக்கு குறைந்த வெப்பநிலையில் எண்ணெயை சூடேற்றி உணவை பொரிக்க வேண்டும். அப்போது எண்ணெயில் தங்கும் உணவு துகள்களை, கருப்பாக மாறுவதற்கு முன்பாக தொடர்ந்து அகற்ற வேண்டும். உணவு பொரிக்கப்பட்ட எண்ணெயில், மீண்டும் உணவை பொரிக்க கூடாது. வடிகட்டிய பின், குழம்பு போன்றவற்றுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். அந்த எண்ணெயை 2 நாட்களுக்கு மேல் வைத்திருக்க கூடாது.
இந்த வழிமுறைகளை கடைபிடித்தால், இதய நோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதை தடுக்கலாம் என்று உணவு பாதுகாப்புத் துறையினர் தெரிவிக்கின்றனர்.