சுகப்பிரசவத்துக்கான வாய்ப்புகள் குறைவதற்கு காரணம்
3 ஐப்பசி 2019 வியாழன் 16:07 | பார்வைகள் : 9250
மகப்பேறு காலம் முழுவதும் முறையான உணவுப் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். தேவையற்ற கலோரிகள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டு, கர்ப்பிணியின் உடல் எடை மற்றும் கருப்பைக்குள் வளரும் சிசுவின் எடையினையும் அளவுக்கு மீறி அதிகரித்தால் சுகப்பிரசவத்துக்கான வாய்ப்புகள் தடைபடும். அவ்வப்போது எடையை பரிசோதித்துக் கொண்டு, தேவைக்கேற்ப ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.
பிரசவத்தின்போது அதிக எடையில் சிசு வளர்ந்திருந்தால், பிரசவ பாதையில் வெளிவருவதில் அதிக சிரமம் உண்டாகும். இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாக நான்கு கிலோ, நான்கரை கிலோ என்ற எடையில் குழந்தைகள் பிறப்பதைப் பார்க்கலாம்.
கருப்பையினுள் குழந்தை ஊட்டமுடன் வளர்வதற்கு சத்துப் பவுடர்களும் டானிக்குகளும் தேவையா என்பதை சிந்தித்து உட்கொள்ள வேண்டும். சத்துக்குறைபாடு உள்ள ஒருவர், தேவைப்படும் மருந்துகளை எடுக்கலாம்.
சிசேரியன்களுக்கு சில கர்ப்பிணிகளின் வாழ்க்கை முறையும் காரணம். கர்ப்பம் அடைந்தவுடன் முற்றிலுமாக ஓய்வு எடுப்பது அவசியமில்லை. சிறுசிறு வேலைகளை தாரளமாக செய்யலாம். எளிய நடைப்பயிற்சி மற்றும் யோகப் பயிற்சிகளின் மூலம் பிரசவத்தை எளிதாக எதிர்கொள்ளலாம். சுகப்பிரசவத்திற்கென பிரத்யேக ஆசனங்கள் இருக்கின்றன. மருத்துவரின் ஆலோசனையுடன் செய்யலாம். முக்கியமாக பிராணாயாமம் எனும் மூச்சுப் பயிற்சி, மனதை சாந்தப்படுத்துவதற்கு உதவும். மேலும், உடல் திசுக்களுக்குத் தேவையான பிராணவாயுவையும் தடையின்றி சேர்க்கும்.
கர்ப்பகாலம் தொடங்கிய உடனே, அதைச் சார்ந்த சந்தேகங்களையும், கர்ப்பகாலத்தில் கடைபிடிக்க வேண்டிய வாழ்க்கை முறைகள் பற்றியும் அனுபவமுள்ளவர்களிடம் அறிவுரை கேட்பது நல்லது. மருத்துவரின் ஆலோசனையோடு வீட்டில் இருக்கும் முதியவர்களிடத்திலும் ஆலோசனைகளைப் பெறலாம். பிரசவகாலம் நெருங்கும்போது ஏற்படும் பதற்றத்தின் காரணமாக அதிகரிக்கும் குருதியழுத்தமும் சுகமகப்பேற்றிற்கு முட்டுக்கட்டையாக இருக்கும்.
சிசேரியன் செய்தால் வலியின்றி பிரசவத்தை எதிர்கொள்ளலாம் என்று நினைப்பவர்களுக்கு… எதிர்காலத்தில் அடிமுதுகுப் பகுதியில் வலி உண்டாகலாம். அடுத்த பிரசவமும் சிசேரியனாக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம். அறுவை சிகிச்சை முடிந்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப, பல மாதங்கள் ஆகலாம். குழந்தைக்கு பால் கொடுப்பதிலும் சிரமம் ஏற்படும். தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில், மகப்பேறு மருத்துவர் அறுவை சிகிச்சைதான் வழி என்று சொன்னால், அதற்கான காரணத்தை ஆராய்ந்துவிட்டு நியாயமாய் இருப்பின் செய்துகொள்ளலாம்.