இந்த பண்டிகை காலத்தில் சுதேசி பொருட்களை வாங்குங்கள்; பிரதமர் மோடி அழைப்பு

20 ஐப்பசி 2025 திங்கள் 07:26 | பார்வைகள் : 141
சுதேசி பொருட்களை வாங்கி 140 கோடி இந்தியர்களின் கடின உழைப்பை, பண்டிகையுடன் கொண்டாடுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சர்வதேச அளவில் ஏற்றுமதி, இறக்குமதிக்கான வரி உயர்வு மற்றும் கட்டுப்பாடுகளை தொடர்ந்து, இந்திய பொருளாதாரத்தை தக்க வைக்கவும், வளர்த்தெடுக்கவும், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை பயன்படுத்துமாறு பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார்.
பிரதமரின் வேண்டுகோளை தொடர்ந்து சுதேசி நிறுவனங்களுக்கு இந்தியர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதற்கு ஒரு உதாரணமாக தான் சுதேசி செயலியான அரட்டைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து உள்ளது. கடந்த 2021ல் உருவாக்கப்பட்ட அரட்டை செயலுக்கு தற்போது பயனர்களின் எண்ணிக்கை புதிய உச்சம் தொட்டு வருகிறது.
இந்நிலையில் சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிறு வணிகங்களை மேம்படுத்தவும், இந்தியாவின் பொருளாதார தன்னிறைவை வலுப்படுத்தவும் உள்நாட்டு பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.இந்தியப் பொருட்களை வாங்கி, சுதேசி என்று பெருமையுடன் சொல்லுங்கள்.
நீங்கள் வாங்கிய பொருட்களை சமூக ஊடகங்களிலும் பகிர்ந்து கொள்ளுங்கள். இதன் மூலம் மற்றவர்களும் இதைச் செய்ய ஊக்கமளிப்பீர்கள். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.