Paristamil Navigation Paristamil advert login

அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் சேருங்கள்: விஜய்க்கு ஆந்திர துணை முதல்வர் அட்வைஸ்

அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் சேருங்கள்: விஜய்க்கு ஆந்திர துணை முதல்வர் அட்வைஸ்

20 ஐப்பசி 2025 திங்கள் 12:26 | பார்வைகள் : 129


தி.மு.க., ஆட்சியை வீழ்த்த, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் சேருங்கள்' என, த.வெ.க., தலைவர் விஜய்க்கு, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் அறிவுரை வழங்கியதாக, தகவல் வெளியாகி உள்ளது.

த.வெ.க., கட்சியை துவக்கி, வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை இலக்காக வைத்து, விஜய் பணியாற்றி வருகிறார். கட்சி துவக்கிய பின் நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், த.வெ.க., போட்டியிடவில்லை.

தன் கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்பும் கட்சிகளுக்கு, ஆட்சியில் பங்கு உண்டு என, மாநாடுகளில் விஜய் அறிவித்தார். ஆனால், த.வெ.க.,வில் இதுவரைக்கும் எந்த ஒரு கட்சியும் கூட்டணி அமைக்கவில்லை. திரைமறைவில் அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன், த.வெ.க., பேச்சு நடத்தி வருகிறது.

முதல் தேர்தல் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ரெட்டி சமூக பிரமுகர் ஒருவர், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனி சாமியின் மகன் மிதுனுடன் கூட்டணி தொடர்பாக பேசி வருகிறார்.

இதற்கிடையில், பா.ஜ., தரப்பிலும் விஜயிடம் பேசப்பட்டு வருகிறது. ஆந்திர துணை முதல்வரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் வாயிலாக, அ.தி.மு.க., - பா.ஜ., - த.வெ.க., கூட்டணி முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

விஜயிடம் நேற்று முன்தினம் தொலைபேசியில் பேசிய பவன் கல்யாண், தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அப்போது, அவர்கள் பேசியது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:

இருவரும் பரஸ்பரம் தீபாவளி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக, விஜய் எடுக்கிற முடிவு, தி.மு.க., ஆட்சியை அகற்றுவதாக இருக்க வேண்டும். தமிழகத்தில் ஏழு முறை அ.தி.மு.க., ஆட்சி அமைத்துள்ளது. பா.ஜ.,வும் மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.

எனவே, இந்த கட்சிகளுடன் த.வெ.க., இணையும் போது அமோக வெற்றி கிடைக்கும். இது, நீங்கள் சந்திக்க போகும் முதல் தேர்தல். எனவே, துணை முதல்வர் பதவியை, பெற்றுக்கொள்ள வேண்டும். உங்களுக்கு இன்னும் வயது இருக்கிறது. கட்சி, ஆட்சியை நடத்த, அனுபவம் பெறுவதற்கு, துணை முதல்வர் பதவி முக்கிய பங்கு வகிக்கும்.

ஆலோசனைக்கு நன்றி

என் அண்ணன் சிரஞ்சீவி, கடந்த 2008ல் அரசியலில் நுழைந்தார். உங்களை போல அவரும் சூப்பர் ஸ்டார் தான். அதே ஆண்டில் திருப்பதியில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில், அவர் 'பிரஜா ராஜ்யம்' என்ற பெயரில் கட்சியை துவக்கினார்.

அரசியல் ஆய்வாளர்கள், தேர்தலுக்கு எட்டு மாதங்களுக்கு முன்பே கட்சியை சிரஞ்சீவி அறிவித்ததால், கட்சி துவங்கி, ஒன்பது மாதங்களில் முதல்வராவார் என கணித்தனர். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரஜா ராஜ்யம் கட்சி தோல்வி அடைந்தது. கடந்த 2009 பொதுத்தேர்தலில், பிரஜா ராஜ்யம் கட்சி வெறும் 18 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பாலகொல்லு, திருப்பதி என, இரண்டு தொகுதிகளில் சிரஞ்சீவி போட்டியிட்டார்.

ஆனால், திருப்பதியில் மட்டுமே வெற்றி பெற்றார். பின், கட்சியை காங்கிரசில் இணைத்தார். அங்கு ராஜ்யசபா எம்.பி.,யாக நியமிக்கப்பட்ட சிரஞ்சீவி, மத்திய சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்தார்.

ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்ட பின், அரசியலில் இருந்து சிரஞ்சீவி விலகி விட்டார். நான் 'ஜன சேனா' கட்சியின் தலைவரானதும், தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்ததால் துணை முதல்வராக முடிந்தது.

எனவே, நீங்களும் என்னை பின்பற்றி முடிவெடுக்க வேண்டும் என, பவன் கல்யாண் வேண்டுகோள் விடுத்தார். விஜயும், 'உங்கள் ஆலோசனைக்கு ரொம்ப நன்றி. நான் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. நல்ல முடிவு எடுக்கும் போது உங்களிடம் தெரிவிப்பேன்' என்று கூறியிருக்கிறார். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன

வர்த்தக‌ விளம்பரங்கள்