பைசன் படத்திற்கு எதிராக போராட்டம் - இயக்குனர் மாரி செல்வராஜுக்கு சிக்கல்?

22 ஐப்பசி 2025 புதன் 05:16 | பார்வைகள் : 186
பைசன் படத்திற்கு எதிராக சில அமைப்புகள் போராட்டத்தில் குதித்த நிலையில் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜுக்கு சட்ட ரீதியில் சிக்கல் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த தீபாவளியை முன்னிட்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த பைசன், ஹரிஷ் கல்யாணின் டீசல் மற்றும் பிரதீப் நடித்த டியூட் ஆகிய 3 படங்கள் மட்டுமே வெளிவந்தன. இவற்றில் பைசன் திரைப்படம் ட்ரெய்லர் வெளியான நாளில் இருந்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
பைசன் படத்திற்கு பாசிடிவான விமர்சனங்கள் வந்த நிலையில் நாளுக்கு நாள் இந்த படத்துடைய வசூல் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து இந்த திரைப்படம் நல்ல வசூலை அள்ளி வருவதால் விரைவில் கலெக்சன் ரூ. 100 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடியை சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை தழுவி பைசன் படம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் 90களில் தமிழகத்தின் தென்பகுதியில் ஏற்பட்ட சில பிரச்னைகளை மிகுந்த கவனத்துடன் பைசன் படத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் கையாண்டுள்ளதாக பாராட்டுகள் குவிந்துள்ளன.
இதற்கிடையே பைசன் படம் சாதிய பிரச்னைகளை ஏற்படுத்துவதாக கூறி சில அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு காணப்பட்டது.
இந்த போராட்டங்களால் பெரிய அளவில் பிரச்னைகள் ஏற்படாத சூழலில், பைசன் படத்திற்கு தடை விதிக்கக் கோரி சில அமைப்புகள் நீதிமன்றத்தை நாட முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் இயக்குனர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் சட்ட ரீதியில் பதில் அளிக்கும் நிலைக்கு ஆளாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.