Paristamil Navigation Paristamil advert login

அ.தி.மு.க. , - த.வெ.க., கூட்டணி அமைந்தால் தி.மு.க.,விற்கு லாபம்; அரசுக்கு உளவுத்துறை அறிக்கை

அ.தி.மு.க. , - த.வெ.க., கூட்டணி அமைந்தால் தி.மு.க.,விற்கு லாபம்; அரசுக்கு உளவுத்துறை அறிக்கை

22 ஐப்பசி 2025 புதன் 14:11 | பார்வைகள் : 161


அ.தி.மு.க., அல்லது பா.ஜ., உடன், த.வெ.க., கூட்டணி அமைத்தால், தி.மு.க.,விற்கு லாபம், தனித்து போட்டியிட்டால் சிக்கல் என, அரசுக்கு உளவுத்துறை அறிக்கை அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி துவங்கிய நடிகர் விஜய், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில் களமிறங்கி, ஆட்சியை பிடிக்கப்போவதாக கூறி வந்தார்.

அதற்கேற்ப கட்சிக்கு 120 மாவட்டச் செயலர்கள், 60,000க்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகளுக்கு, பூத் கமிட்டி அமைத்தார். சனிக்கிழமை தோறும், மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் சென்று, தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்தித்து ஆதரவு திரட்டும் பணியை, செப்டம்பர் மாதம் துவக்கினார்.

கரூரில் நடந்த பிரசார கூட்டத்தில், நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். இச்சம்பவம் விஜயையும், அவரது கட்சியினரையும் நிலைகுலைய வைத்துள்ளது.

இச்சம்பவத்தில் இருந்து மீளாத விஜய், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில், கவனம் செலுத்தாமல் உள்ளார்.

கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை, இதுவரை விஜய் சந்திக்கவில்லை. இதனால், கட்சியின் மாநில நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை சோர்வடைந்துள்ளனர்.

இந்நிலையில், விஜய்க்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடியை பயன்படுத்தி, அவரை தங்கள் கூட்டணிக்கு இழுப்பதற்கான வேலைகளை, அ.தி.மு.க., - பா.ஜ., தலைமை துவக்கி உள்ளன.


இரு கட்சிகள் தரப்பிலும், திரைமறைவில் பேச்சு நடந்து வருகிறது. அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள், த.மா.கா., தலைவர் வாசன் உட்பட பலரும், த.வெ.க., தரப்பினருடன் பேச்சில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், அ.தி.மு.க., உடன் த.வெ.க., கூட்டணி அமைத்தால், தி.மு.க., கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படுமா என, உளவுத்துறையினர் ஆய்வு நடத்தி, அரசுக்கு அறிக்கை அளித்து உள்ளனர்.

இது குறித்து தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:


த.வெ.க., தனித்து போட்டியிட்டால், அக்கட்சிக்கு 10 சதவீதத்திற்கு மேல் ஓட்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளன. தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணியை விரும்பாதவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் ஒட்டுகள் இதில் அடங்கும்.

சிறுபான்மையினர் ஓட்டுகளும், பட்டியலின மக்களின் ஓட்டுகளும், கணிசமான அளவு, விஜய்க்கு செல்லும். இது தி.மு.க.,வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

அதேநேரம், அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளுடன், கூட்டணி அமைத்து போட்டியிட்டால், சிறுபான்மையினர் ஓட்டுகள், மொத்தமாக தி.மு.க., கூட்டணிக்கு கிடைக்கும். இது த.வெ.க.,வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ; தி.மு.க.,வுக்கு சாதகமாக அமையும்.

அதேநேரம் த.வெ.க., உடன் காங்கிரஸ், வி.சி., இணைந்து ஒரு கூட்டணி உருவானாலும், தி.மு.க.,வுக்கு பாதிப்பு ஏற்படும் என, உளவுத்துறை அறிக்கை அளித்துள்ளது. இதை கட்சி தலைமை ஆய்வு செய்து வருகிறது. இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

வர்த்தக‌ விளம்பரங்கள்