சத்தமே இல்லாமல் பில்லியன் கணக்கான டொலர்களை கொள்ளையிட்ட வட கொரியா

23 ஐப்பசி 2025 வியாழன் 09:53 | பார்வைகள் : 332
வட கொரியாவின் சைபர் திறன்கள் குறித்த சர்வதேச அறிக்கை ஒன்றில், கிரிப்டோகரன்சி நிறுவனங்களை ஊடுருவி வட கொரிய ஹேக்கர்கள் பில்லியன் கணக்கான டொலர்களைக் கொள்ளையடித்துள்ளதாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
வட கொரியாவின் அணு ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு நிதி திரட்டும் பொருட்டு அங்குள்ள அதிகாரிகளே இதுபோன்ற ரகசிய வேலைகளைத் திட்டமிட்டு வருவதாக 138 பக்க ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா உட்பட 11 நாடுகளை சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று ஐக்கிய நாடுகள் சபையின் தடைகளுக்கு வட கொரியா இணங்குவதை கண்காணிக்க கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது.
வட கொரியா தனது அணுசக்தி திட்டத்துடன் தொடர்புடைய சர்வதேச தடைகளைத் தவிர்ப்பதற்காக பண மோசடி செய்வதற்கும் இராணுவ கொள்முதல் செய்வதற்கும் கிரிப்டோகரன்சியைப் பயன்படுத்தியுள்ளது.
மட்டுமின்றி, அளவில் சிறியதாக இருந்தாலும் வட கொரியா தாக்குதல் சைபர் திறன்களில் பெருமளவில் முதலீடு செய்துள்ளது. மேலும், வட கொரிய ஹேக்கர்களின் நுட்பம் மற்றும் திறன்களைப் பொறுத்தவரை, தற்போது சீனா மற்றும் ரஷ்யாவிற்கு போட்டியாக உள்ளனர் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மட்டுமின்றி, வெளிநாட்டு அரசாங்கங்கள், வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலையும் வட கொரிய ஹேக்கர்கள் உருவாக்கியுள்ளனர். சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் போலல்லாமல், தனது அரசாங்கத்திற்கு நிதியளிப்பதற்காவே வட கொரியா அதன் ஹேக்கர்களை பயன்படுத்தி வருகிறது.
கடந்த ஆண்டு வட கொரியாவின் நடவடிக்கைகளை கண்காணிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிபுணர்கள் குழுவை நியமிக்கும் தீர்மானத்தை ரஷ்யா வீட்டோ செய்த நிலையிலேயே பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி போன்ற 11 நாடுகள் ஒரு குழுவை உருவாக்கினர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், வட கொரியாவுடன் தொடர்புடைய ஹேக்கர்கள் Bybit நிறுவனத்திடம் இருந்து 1.5 பில்லியன் டொலர் மதிப்புள்ள Ethereum நாணயத்தை திருடி இதுவரை இல்லாத மிகப்பெரிய கிரிப்டோ கொள்ளைகளில் ஒன்றை நடத்தினர்.
இந்த திருட்டு வட கொரிய உளவுத்துறை சேவைக்காக பணிபுரியும் ஹேக்கர்கள் குழுவுடன் தொடர்புடையது என பின்னர் FBI அதிகாரிகள் உறுதி செய்தனர்.
மேலும், அமெரிக்க நிறுவனங்களால் பணியமர்த்தப்பட்ட ஆயிரக்கணக்கான ஐடி ஊழியர்கள் உண்மையில் வட கொரியர்கள் என்றும், தொலைதூர வேலைக்கு அனுமானிக்கப்பட்ட அடையாளங்களைப் பயன்படுத்தியதாகவும் பெடரல் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். மட்டுமின்றி, குடியிருப்பில் இருந்து வேலை செய்வதால், ஒரு ஊழியர் பல நிறுவனங்களில் பணியாற்றுவதும் விசாரணையில் அம்பலமானது.