நெதன்யாகு கனடா நுழைந்தால் நிச்சயம் கைது செய்யப்படுவார்! - கனடா பிரதமர் எச்சரிக்கை

23 ஐப்பசி 2025 வியாழன் 12:53 | பார்வைகள் : 205
நெதர்லாந்து சர்வதேச நீதிமன்றம் கடந்த ஆண்டு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கைது செய்வதற்கான பிடியானை பிறப்பித்திருந்த நிலையில், தனி பாலஸ்தீன நாடு உருவாக்கத்துக்கு நெதன்யாகு தடையாக இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி, நெதன்யாகு கனடாவில் நுழைந்தால், அவர் சர்வதேச நீதிமன்ற உத்தரவின் பேரில் கைது செய்யப்படுவார் என எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசா மீது இஸ்ரேல் தொடுத்த போரில் குழந்தைகள், பெண்கள் உட்பட 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இப்போர்க்குற்றம் இடம்பெற்றதற்காக நெதர்லாந்து சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சர்வதேச நீதிமன்றம் கடந்த ஆண்டு நெதன்யாகுவை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தது.
அந்த பிடியாணை நிலுவையில் உள்ள நிலையில், தனி பாலஸ்தீன நாடு உருவாக்கத்துக்கு நெதன்யாகு தடையாக இருப்பதாக கனடா பிரதமர் குற்றஞ்சாட்டினார். அத்துடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கனடாவுக்குள் நுழைந்தால் நிச்சயமாக சர்வதேச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கைது செய்யப்படுவார் என கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.
இதேபோன்று பிரான்ஸ், துருக்கி, பெல்ஜியம் உட்பட பல நாடுகள் சர்வதேச நீதிமன்றத்தின் பிடியாணை உத்தரவை நிறைவேற்றக் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.