இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்

23 ஐப்பசி 2025 வியாழன் 11:02 | பார்வைகள் : 335
இசையமைப்பாளர் தேவா பாடல்கள் எந்தளவிற்கு ஹிட்டானதோ, அதன் பின்னணியில் அவரது சகோதரர்களான சபேஷ் - முரளியின் பங்களிப்பும் இருக்கும். இதனால் தேவாவின் படங்களில் இசை உதவி என்பதில் சில படங்களில் இவர்களது பெயர்களும் இடம்பெற்றிருக்கும்.
சபேஷ் - முரளி சகோதரர்கள் சேர்ந்து சில படங்களுக்கு இசையமைப்பாளர்களாகவும் பணியாற்றியுள்ளனர். குறிப்பாக 'மிளகா, இம்சை அரசன் 23ம் புலிகேசி, மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், பொக்கிஷம், ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து' படங்களில் பணியாற்றியுள்ளனர்.
தற்போது திரைப்பட இசைக்கலைஞர் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார் சபேஷ் (எம்.சி. சபேசன்). இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 12:15 மணியளவில் அவர் காலமானார். அவருக்கு வயது 68. சபேஷின் மறைவுக்கு திரைப்பட இசைக்கலைஞர் சங்கத்தினர் மற்றும் திரைப்பட நடிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சபேஷுக்கு கீதா மற்றும் அர்ச்சனா எனும் மகள்களும் கார்த்திக் எனும் மகனும் உள்ளனர். சபேஷின் மனைவி தாரா முன்னரே காலமானது குறிப்பிடத்தக்கது. சபேஷின் இறுதி சடங்குகள் வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நாளை (அக்.,24) மாலை 3 மணிக்கு நடைபெறும் என்றும், உடல், பிருந்தாவனம் நகர் இடுகாட்டிற்கு எடுத்து செல்லப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.