சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அனுமதி; விதி மீறி வழங்கியதாக அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு
24 ஐப்பசி 2025 வெள்ளி 11:16 | பார்வைகள் : 146
மத்திய அரசின் அங்கீகாரமான 'ராம் சார்' அறிவிக்கையில் இடம் பெற்றுள்ள பெரும்பாக்கம், பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் கட்டடம் கட்ட, 'பிரிகேட்' என்ற தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. விதிகளை மீறி சுற்றுச்சூழல் மற்றும் கட்டட அனுமதி வழங்கியுள்ளதாக, அறப்போர் இயக்கம் புகார் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கூறியதாவது: நீர்நிலைகள், சதுப்பு நிலங்களை பாதுகாப்பதற்காக, 'ராம்சார்' ஒப்பந்தப்படி, சர்வதேச அளவிலான அங்கீகாரம் வழங்கப்படுகிறது. அதன்படி, சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின், 3,080 ஏக்கர் நிலபரப்பு ராம்சார் தளமாக, 2022 ஏப்., 8ல் அறிவிக்கப்பட்டது. இவ்வாறு, ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் வரையறுக்கப்பட்ட எல்லைக்குள், கட்டடங்கள் உள்ளிட்ட எவ்வித நிரந்தர அமைப்புகளை ஏற்படுத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியை, சூழலியல் ரீதியாக பாதுகாக்க வேண்டியது கட்டாயமாகிறது. புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்நிலையில், இங்கு, 15 ஏக்கர் நிலத்தில், 2,000 கோடி ரூபாய் மதிப்பில், 1,250 வீடுகள் அடங்கிய 'பிரிகேட் மார்கன் ஹைட்ஸ்' என்ற அடுக்குமாடி குடியிருப்பு கட்ட, 'பிரிகேட்' நிறுவனம், 2022 ஜூலையில் சுற்றுச்சூழல் அனுமதி கோரியது.
இந்த விண்ணப்பம், மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் வல்லுநர் குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அதில், நிலத்தின் அமைவிடம் குறித்து பிரிகேட் நிறுவனம் தவறான தகவல்களை அளித்துள்ளது. இதன் பின், 2024, ஜனவரியில், தமிழக அரசு நடத்திய உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்று, இத்திட்டம் தொடர்பாக அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டது.
உலக முதலீட்டாளர் மாநாட்டு ஒப்பந்த திட்டம்' என்ற அடைமொழியுடன் இத்திட்டம் தொடர்பான கோப்புகளுக்கு வனத்துறை, வருவாய் துறை அதிகாரிகள், விதிகளை மீறி ஒப்புதல் அளித்துள்ளனர். இதன் அடிப்படையிலான ஆய்வின்போது வனத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் உண்மை நிலைக்கு மாறாக, தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
தவறான கருத்துகள் குறிப்பாக, ராம்சார் தள வரைபடத்தின் அடிப்படையில் பார்க்காமல், பள்ளிக்கரணை சதுப்பு நில எல்லை என்ற பெயரில் அதிகாரிகள் இந்நிறுவனத்துக்கு சாதகமாக, தவறான கருத்துகளை கோப்புகளில் பதிவிட்டுள்ளனர். இதன் அடிப்படையில், இந்த ஆண்டு ஜன., 20ல், பிரிகேட் நிறுவன திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மூன்று நாட்களில் அதாவது, ஜன., 23ல் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., இத்திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை, ராம்சார் அங்கீகாரத்துடன் மேம்படுத்துகிறோம் என, முதல்வர் அறிவித்து வருகிறார். அவர் முன்னிலையிலேயே சதுப்பு நிலத்தை அழித்து கட்டடம் கட்டும் திட்டத்துக்கு, அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்கிறது.
இதில் நடந்துள்ள முறைகேடுகளை விசாரித்து, சம்பந்தப்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய நிலவரப்படி, 2,000 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இத்திட்டத்தில், 100 கோடி ரூபாய்க்கு மேல் அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து முதல்வர், தலைமை செயலர், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் உள்ளிட்டோருக்கு புகார் அனுப்பி இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


























Bons Plans
Annuaire
Scan