துாய்மை பணியாளர்களுக்கு மூன்று வேளை இலவச உணவு !
24 ஐப்பசி 2025 வெள்ளி 12:16 | பார்வைகள் : 146
நகர்ப்புற துாய்மை பணியாளர்களுக்கு, காலை, மதியம், இரவு என, மூன்று வேளையும் இலவச உணவு வழங்கப்பட உள்ளது. முதலில் சென்னை மாநகராட்சியில் இத்திட்டத்தை துவக்க அரசு அனுமதி அளித்துள்ளது. படிப்படியாக மற்ற பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட உள்ளது. சென்னையில் மூன்று ஆண்டுகளுக்கு இத்திட்டத்தை செயல்படுத்த, 186 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க., நகர் மண்டலங்களில் துாய்மை பணிகளை மேற்கொள்ள, தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு, தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பணியாற்றிய, 2,000க்கும் அதிகமான துாய்மை பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தனியார் மயமாக்கலை ரத்து செய்ய வேண்டும்; தி.மு.க., தேர்தல் அறிக்கையின்படி, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன், ஆக., 1 முதல் 13ம் தேதி வரை, தற்காலிக கூடாரம் அமைத்து போராடினர். சுதந்திர தினம் நெருங்கிய நிலையில், துாய்மை பணியாளர்கள் போராட்டம், அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா ஆகியோர், துாய்மை பணியாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தினர்; உடன்பாடு ஏற்படவில்லை. போராட்டம் தொடர்ந்தது. பெண் ஒருவர் தாக்கல் செய்த வழக்கில், போராட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட துாய்மை பணியாளர்கள், 13ம் தேதி நள்ளிரவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இதனால், பல்வேறு மாவட்டங்களில் துாய்மை பணியாளர்கள், அரசை கண்டித்து போராட்டங்களில் இறங்கினர்; இது, அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, 'நகர்ப்புற உள்ளாட்சிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு, இலவச உணவு வழங்கப்படும். முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் திட்டம் செயல்படுத்தப்படும்' என, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆகஸ்ட் 4ம் தேதி அறிவித்தார்.
அதை செயல்படுத்தும் வகையில், சென்னை மாநகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு காலை, மதியம், இரவு என, மூன்று வேளை உணவு வழங்க, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, நகராட்சி நிர்வாகத்துறை செயலர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ள உத்தரவு:
சென்னை மாநகராட்சியில் உள்ள பல்வேறு பிரிவுகளை சேர்ந்த, 29,455 துாய்மை பணியாளர்களுக்கு, காலை, மதியம், இரவு உணவு வழங்கப்பட உள்ளது.
காலை உணவு, காலை 5:30 முதல் 6:00 மணி வரை 5,159 பேருக்கு 166 இடங்களில் வழங்கப்படும். மதிய உணவு, 1:30 முதல் 2:00 மணி வரை 22,886 பேருக்கு 285 இடங்களில்; இரவு உணவு, 9:30 முதல் 10:00 மணி வரை 1,410 பேருக்கு, 61 இடங்களில் வழங்கப்பட உள்ளளது.
'டிபன் கேரியர்' வாயிலாக உணவு வினியோகம் செய்யப்பட உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு மூன்று வேளை உணவு வழங்க, 186 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு, 'டிபன் கேரியர்' கொள்முதல் செய்வதற்கும், உணவு வழங்கும் திட்டத்தை கண்காணிப்பதற்கும், ஒரு திட்ட மேலாண்மை ஆலோசகர், சென்னை மாநகராட்சி வாயிலாக நியமனம் செய்யப்பட உள்ளார்.
சென்னை மாநகராட்சியின் ஆறாவது மாநில நிதி ஆணைய மானிய நிதியில் இருந்து, இத்திட்டத்திற்கான நிதி வழங்கப்படும்.
போக்குவரத்து செலவு, ஜி.எஸ்.டி., ஆகியவற்றுடன் சேர்த்து, ஒரு துாய்மை பணியாளரின் காலை உணவுக்கு, 47.25 ரூபாய், மதிய உணவுக்கு 57.75 ரூபாய், இரவு உணவுக்கு 42 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சென்னை மாநகராட்சியை தொடர்ந்து, மற்ற நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், படிப்படியாக இந்த திட்டத்தை துவங்குவதற்கான நடவடிக்கைகளை, நகராட்சி நிர்வாகத்துறை மேற்கொண்டு வருகிறது. இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என, துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


























Bons Plans
Annuaire
Scan