இன்று உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: புயலாக மாற வாய்ப்பா..?
24 ஐப்பசி 2025 வெள்ளி 13:16 | பார்வைகள் : 105
வங்கக் கடலில் சமீபத்தில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. மேலும் தாழ்வு மண்டலமாகவோ, புயலாகவோ வலுவடையும் என சொல்லப்பட்டது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் அதற்கான அமைப்பு அப்படியே மாறியது.
இதனால் எதிர்பார்த்த மழையும் கிடைக்கவில்லை. வலுப்பெற இருந்த அமைப்பும் வலு குறைந்து காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக தற்போது நிலவி வருகிறது. இந்த நிலையில் தற்போது வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (வெள்ளிக்கிழமை) உருவாக இருக்கிறது. தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்தகட்டமாக எப்படி நகரும்? வலுவடைந்தால் அதன் இலக்கு எங்கே நோக்கி இருக்கும்? என்பது பற்றிய மற்ற விவரங்களை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கவில்லை.
ஆனால் இதுபற்றி வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தரிடம் கேட்டபோது, ‘இது தமிழகம், ஆந்திரா 2 பகுதிகளை நோக்கி நகருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆழ்கடலில் இந்த தாழ்வுப்பகுதி உருவாகி இருப்பதால் அடுத்தடுத்த நிலைகளை வேகமாக அடையக்கூடும். அந்தவகையில் 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது. தொடர்ந்து இது புயலாகவும் மாற வாய்ப்புகள் அதிகம். இப்படி அடுத்தடுத்து வேகமாக வலுவடைந்தால், ஆந்திராவை நோக்கி நகரும். அதுவே அமைப்பு வலுவடைவதில் தாமதம் ஏற்பட்டால், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ அல்லது சாதாரண புயலாகவோ வடதமிழகம்-தெற்கு ஆந்திராவை நோக்கி நகரக்கூடும். இந்த 2 போக்கில் எது அதன் இலக்காக இருக்கும் என்பதை நாளை (அதாவது இன்று) கணிக்க முடியும்' என்றார்.
வங்கக்கடலில் உருவாகி இருக்கும் இந்த அமைப்பு ஆந்திரா நோக்கி சென்றால், தமிழகத்துக்கு மழை உள்ளிட்ட எந்த தாக்கமும் ஏற்படாது. அதுவே சென்னைக்கு அருகே கடந்து, ஆந்திரா சென்றால், வட தமிழகத்தில் அதிலும் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை இருக்கும் என சொல்லப்படுகிறது.
வானிலை ஆய்வு மையம் இதை சொல்லாமல் சொல்வது போல, தமிழகம் நோக்கி இந்த அமைப்பு நகரும் பட்சத்தில் மழைக்கான வாய்ப்பு எங்கெல்லாம் இருக்குமோ, அதனை 26-ந்தேதியில் இருந்து சுட்டிக்காட்டியிருக்கிறது. அதன்படி, 26-ந்தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும், 27-ந்தேதி (திங்கட்கிழமை) ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், 28-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


























Bons Plans
Annuaire
Scan