Paristamil Navigation Paristamil advert login

மத்திய கிழக்கில் அமைதிக்கு இந்தியா முழு ஆதரவு: ஐநாவில் நிலைப்பாட்டை விளக்கிய இந்தியா!

மத்திய கிழக்கில் அமைதிக்கு இந்தியா முழு ஆதரவு: ஐநாவில் நிலைப்பாட்டை விளக்கிய இந்தியா!

24 ஐப்பசி 2025 வெள்ளி 15:16 | பார்வைகள் : 103


இந்த மாத தொடக்கத்தில் கையெழுத்தான வரலாற்று சிறப்புமிக்க காசா அமைதி ஒப்பந்தத்தை வரவேற்றதுடன், அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான ராஜதந்திர முயற்சிகளை ஐநாவில் இந்தியா பாராட்டியது.

பாலஸ்தீனப் பிரச்னை உட்பட மத்திய கிழக்கின் நிலைமை குறித்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் பேசியதாவது: இந்த மாத தொடக்கத்தில் கையெழுத்தான வரலாற்று சிறப்புமிக்க காசா அமைதி ஒப்பந்தத்தை இந்தியா வரவேற்கிறது. மத்திய கிழக்கில் அமைதிக்கான அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவு அளிக்கும்.

இந்த ஒப்பந்தத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்ததற்காக அமெரிக்காவிற்கும், குறிப்பாக அதிபர் டிரம்புக்கும் எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த இலக்கை அடைவதில் எகிப்து மற்றும் கத்தாரின் பங்கையும் இந்தியா பாராட்டுகிறது.

அமெரிக்காவின் வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சி அமைதியை நோக்கிய ராஜதந்திர உத்வேகத்தை உருவாக்கியுள்ளது.

அக்டோபர் 2023ல் மோதல் தீவிரமடைந்ததிலிருந்து, பாலஸ்தீனப் பிரச்னையில் இந்தியா பயங்கரவாதத்தைக் கண்டித்துள்ளது. பிணைக்கைதிகளை உடனடியாக விடுவிக்கக் கோரியுள்ளது. மேலும் காசாவிற்கு தடையற்ற மனிதாபிமான உதவியின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 135 மெட்ரிக் டன் மருந்துகள் மற்றும் நிவாரணப் பொருட்களை இந்தியா வழங்கியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

மக்களின் பாதுகாப்பு

ஏமன் குறித்து, மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலைமை குறித்து, பர்வதனேனி ஹரிஷ் கவலை தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், ''மனிதாபிமான உதவி அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். அது அனைத்து பொதுமக்களையும் சென்றடைய வேண்டும். ஏமனில் உள்ள இந்திய குடிமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்'', என்றார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்