பீஹாரில் தே,ஜ., கூட்டணி முதல்வர் வேட்பாளர்... நிதிஷ் குமார்!
25 ஐப்பசி 2025 சனி 08:17 | பார்வைகள் : 144
ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் தலைமையில் தான், பீஹார் சட்டசபை தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணி சந்திக்கிறது. முந்தைய தேர்தல்களை விட அதிக தொகுதிகளில் வென்று சாதனை படைப்போம்,” எனக் குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, 'நிதிஷ் குமார் தான் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர்' என்பதை நேற்று வெளிப்படையாக அறிவித்தார். பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள, 243 சட்டசபை தொகுதிகளுக்கு, அடுத்த மாதம் இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
நவ., 6ல், 121 தொகுதி களில் முதல் கட்ட தேர்தல் நடக்கும் நிலையில், மீதமுள்ள 122 தொகுதிகளில், 11ல் இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது; 14ல், ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த தேர்தலில், ஆளும் பா.ஜ., - எதிர்க்கட்சியான காங்., கூட்டணிகளிடையே பலத்த போட்டி நிலவுகிறது. தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, புது போட்டியாளராக தேர்தல் களத்தில் குதித்துள்ளதால், பீ ஹாரில் தேர்தல் பிரசாரம் களைகட்டி உள்ளது.
திமிர் பிடித்தவர்கள் தே.ஜ., கூட்டணியில், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., தலா, 101 தொகுதிகளில் போட்டியிடும் நிலையி ல், லோக் ஜனசக்தி 29 தொகுதி களில் களமிறங்குகிறது.
எதிர்க்கட்சிகளின், 'மஹாகட்பந்தன்' கூட்டணியில், தொகுதி பங்கீடு ஒரே குழப்பமாக இருக்கிறது. 143 தொகுதிகளில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் போட்டியிடும் நிலையில், 60 தொகுதிகளில் காங்., களம் காண்கிறது.
மஹாகட்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். முதலில் அவரை ஏற்க மறுத்த காங்., நிர்வாகிகள், பல கட்ட பேச்சுக்கு பின் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
சஹர்சாவில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், 'தே.ஜ., கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக மாட்டார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், பா.ஜ.,வும் அவரை முதல்வராக்க விரும்பவில்லை' என்றார்.
இந்நிலையில், பீஹாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில், 'பாரத ரத்னா' கர்பூரி தாக்குர் பிறந்த கிராமத்தில், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி நேற்று துவங்கினார்.
சமஸ்திபூர், பெகுசராய் ஆகிய மாவட்டங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பேசியதாவது:
தே.ஜ., கூட்டணியில் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளன. பீ ஹாரை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச்செல்ல அக்கட்சிகள் அயராது உழைத்து வருகின்றன.
மஹாகட்பந்தன் கூட்டணி சிதறிக் கிடக்கிறது. அக்கூட்டணியில் ஒற்றுமை இல்லை. இவர்களா பீஹார் மக்களை காப்பாற்றப் போகின்றனர்?
மக்கள் மீது துளிகூட அக்கறை இல்லாத காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி, எப்படி கொள்ளை அடிக்கலாம் என யோசித்து வருகிறது. 'மஹாகட்பந்தன்' என்பதற்கு பதில், 'மஹாலட்பந்தன்' என வைத்திருக்கலாம்.
கூட்டணியில் உள்ளவர்கள் ஒருவரையொருவர் கட்டைகளால் தாக்கிக் கொள்கின்றனர். இந்த கூட்டணியை பார்த்து நாடே சிரிக்கிறது.
காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர்கள் ஊழல் நிறைந்தவர்கள்; ஜாமினில் வெளியே உள்ளனர். பல ஆண்டுகளாக அதிகாரத்தில் இல்லாத போதும், கூட்டணி கட்சிகளை மதிக்க தெரியாதவர்கள்; திமிர் பிடித்தவர்கள்.
புது உற்சாகம் பீஹார் சட்டசபை தேர்தலை நிதிஷ் குமார் தலைமையில் தே.ஜ., கூட்டணி சந்திக்கிறது. முந்தைய தேர்தல்களை விட இந்த தேர்தலில் வரலாற்று வெற்றியை பெறுவோம். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். நல்லாட்சியை வழங்குவதால், தே.ஜ., கூட்டணிக்கு மக்கள் ஓட்டளிக்கின்றனர். ஹரியானா, மஹாராஷ்டிராவே அதற்கு சான்று.
லாலு பிரசாத் யாதவின் காட்டாட்சியால் பீஹார் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர்.
அவர்களின் துன்பங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அந்தளவுக்கு வேதனையை அனுபவித்தனர். அந்த கஷ்டத்தில் இருந்து அவர்களை மீட்டது, தே.ஜ., கூட்டணி.
இந்த தேர்தலில், காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணிக்கு பெண்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை, பார்லி.,யில் அக்கூட்டணி எதிர்த்ததை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
கடந்த 11 ஆண்டுகளில், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கிடைத்ததை விட, மூன்று மடங்கு அதிகமாக மத்திய அரசின் உதவி பீஹாருக்கு கிடைத்துள்ளது.
ஒரு காலத்தில் பீஹாரின் பல மாவட்டங்களில் பரவியிருந்த நக்சல், தற்போது திறம்பட கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. நாட்டில் இருந்து நக்சல்கள் முற்றிலுமாக அகற்றப்படுவர். இது, மோடியின் உத்தரவாதம்.
மறைந்த காங்., தலைவர் சீதாராம் கேசரி, பீஹாரின் பெருமை. அவர், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக இருந்து காங்., தலைவரானார். ஆனால், காந்தி குடும்பத்தின் வற்புறுத்தலால் அவர் அவமானப்படுத்தப்பட்டார். இந்த தேர்தலில், தே.ஜ., கூட்டணி நிச்சயம் வெல்லும். அதை பீஹார் மக்கள் நடத்தி காட்டுவர். இவ்வாறு அவர் பேசினார்.
தே.ஜ., கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் குழப்பம் நீடித்து வந்த நிலையில், பிரதமர் மோடியின் நேற்றைய பேச்சு, ஐக்கிய ஜனதா தள தொண்டர்கள் மத்தியில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.


























Bons Plans
Annuaire
Scan