இந்திய எல்லையில் ராணுவ விமான இயங்கு தளம் அமைத்தது சீனா !
25 ஐப்பசி 2025 சனி 10:17 | பார்வைகள் : 167
நம் அண்டை நாடான சீனா, லடாக் எல்லையை ஒட்டிய திபெத் பகுதியில் உள்ள பாங்காங் ஏரிக் கரையில், பிரமாண்ட ராணுவ விமான இயங்கு தளத்தை கட்டி வருவது, செயற்கைக்கோள் புகைப்படங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது. இந்தியா - சீனா இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை நிலவி வருகிறது. லடாக், அருணாச்சல பிரதேசம் பகுதிகளை ஒட்டிய எல்லைப் பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாட முயற்சிப்பதே பிரச்னைக்கு காரணம்.
கடந்த 2020ல் லடாக்கை ஒட்டிய கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீறி நுழைந்த சீன வீரர்கள், இந்திய வீரர்களால் விரட்டி அடிக்கப்பட்டனர். இரு தரப்பிலும் நடந்த மோதலால், ஐந்து ஆண்டுகளாக இரு நாட்டு உறவிலும் விரிசல் விழுந்தது.
பிரதமர் மோடி - சீன அதிபர் ஷீ ஜின்பிங் சந்திப்பு, இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களின் பேச்சை தொடர்ந்து, எல்லைப் பகுதிகளில் இரு நாட்டு வீரர்களும் ரோந்து செல்ல ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, இந்தியா - சீனா இடையிலான உறவு மீண்டும் மலர்ந்துள்ளது. இரு நாடுகளும், நேரடி விமானப் போக்குவரத்தை இயக்கவும் ஒப்புக்கொண்டு உள்ளன.
இந்நிலையில், லடாக்கை எல்லையை ஒட்டிய திபெத் பகுதியில் பாங்காங் ஏரிக் கரையில் பிரமாண்ட ராணுவ விமான இயங்கு தளத்தை கட்டும் பணியை சீனா மேற்கொண்டுள்ளது. கடந்த 2020ல் மோதல் நடந்த கல்வான் பள்ளத் தாக்கில் இருந்து, 110 கி.மீ., தொலைவில், இந்த விமான தளம் கட்டப்பட்டு வருவது, செயற்கைக்கோள் புகைப்படங்கள் வாயிலாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கட்டுப்பாட்டு மையம், வீரர்கள் முகாம், வெடி மருந்து சேமிப்பு கிடங்குகள் மற்றும் ரேடார் அமைப்புகள் என ராணுவத்துக்கு தேவையான அனைத்து அம்சங்களும் அடங்கிய அதி நவீன வசதிகளுடன் இந்த விமான தளம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த தளத்தில், பல வளாகங்கள் மூடிய நிலையில் உள்ளன. இங்கு, நீண்ட துாரத்தில் இருக்கும் எதிரிகளின் இலக்குகளை மிகவும் துல்லியமாக தாக்கும் ஏவுகணை தளங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
மேற்பரப்பு மூடிய நிலையில் இருக்கும் தளங்களில் இருந்து தேவைப்படும் போது ஏவுகணைகள் பாயும் வகையில் அந்த வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிநவீன, 'ஹெச்.க்யூ., 9' வான் ஏவுகணை அமைப்புகளை இங்கு சீனா பதுக்கி வைக்கவும் திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த புவிசார் நுண்ணறிவு நிறுவனமான ஆல் சோர்ஸ் அனாலிசிஸ், சீனாவின் இந்த புதிய கட்டுமானத்தை முதலில் கண்டுபிடித்துள்ளது.
இங்குள்ளது போல், மற்றொரு ஏவுகணை தளத்தையும், திபெத்தின் கர் பவுண்டி பகுதியில் சீனா கட்டி வருவதையும், இந்த நிறுவனம் அம்பலப்படுத்தியுள்ளது. நம் இந்திய எல்லையில் இருந்து, 65 கி.மீ., தொலைவில் இந்த ஏவுகணை தளங்கள் கட்டப்பட்டுள்ளன.
லடாக்கில், நம் அரசால் கட்டப்பட்ட நியோமா விமான நிலையத்துக்கு நேர் எதிரே, இந்த ஏவுகணை தளங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
அங்கும் பல ஏவுகணைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இரு மையங்களிலும், கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில், அவற்றை விரைவில் முடிக்க சீனா திட்டமிட்டு உள்ளது. இதனால், இந்திய - சீன எல்லை பகுதியில் பதற்றம் நிலவுகிறது.


























Bons Plans
Annuaire
Scan