செந்தில் பாலாஜி பற்றி விஜய் பேசியதால் கரூர் கூட்டத்தில் மின்தடை ஏற்படுத்தினர் : நாகேந்திரன்
25 ஐப்பசி 2025 சனி 11:17 | பார்வைகள் : 158
கரூர் பிரசார கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றி த.வெ.க., தலைவர் விஜய் பேசியதால், மின்தடை ஏற்படுத்தப்பட்டது,' என தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் குற்றஞ்சாட்டினார்.
சட்டசபை தேர்தலையொட்டி, 'தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்' என்ற பெயரில், யாத்திரை மேற்கொண்டுள்ள நாகேந்திரன், பெரம்பலுாரில், பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது, அவர் பேசியதாவது:
சமூக நீதி கட்சி என கூறிக் கொள்ளும் தி.மு.க., ஆட்சியில், பெண்கள் இரவில் நடந்து செல்ல முடியவில்லை. கல்லுாரி செல்லும் மாணவியர் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். பெரம்பலுாரில், கிட்னி திருட்டு சாதாரணமாகி விட்டது. பெரம்பலுாரில் மட்டும் மழையால் 12 லட்சம் ஹெக்டேர் விவசாய பயிர்கள் நாசமாகி இருக்கிறது. தி.மு.க.,வைத் தவிர, யார் பிரசாரம் செய்தாலும் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. கரூரில் த.வெ.க., தலைவர் விஜய் பேசியபோது, மின் தடை ஏற்பட்டதால் 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
இரவோடு இரவாக 41 பேரின் உடலை ஏன் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்? மாநில முதல்வர் ஏன் உடனே கரூர் செல்ல வேண்டும்? முன்னாள் அமைச்சர் செந்திபாலாஜியை காப்பாற்றவா?.அவரை பற்றி விஜய் பேசியதால்தான் மின்தடை ஏற்படுத்தப்பட்டது. இதை மூடி மறைக்க அரசு முயற்சிக்கிறது.
சென்னை செம்பரம்பாக்கம் ஏரி திறப்பில், தமிழக காங்., தலைவர் செல்வபெருந்தகை புறக்கணிக்கப்பட்டுள்ளார். அவர் தாழ்த்தப்பட்டவர் என்பதால் அழைக்கவில்லையா? அவரே, இது குறித்து கேள்வி கேட்டுள்ளார்.
பெண்களுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்குவதாக, கடந்த தேர்தலில் தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறினர். ஆனால், ஆட்சிக்கு வந்த முதல் இரு ஆண்டுகள் வழங்கவில்லை. லோக்சபா தேர்தல் வந்தபோது, தகுதியான பெண்களை தேர்வு செய்து, அவர்களுக்கு மட்டும் ரூ.1000 வழங்கியது. தற்போது, விடுபட்ட பெண்களுக்கு வழங்க ஏற்பாடு நடக்கிறது. இதை ஏன் ஆட்சிக்கு வந்த உடனே செய்யவில்லை.
காவிரி -குண்டாறு இணைப்புக்கு, இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. மத்திய அரசு, ரூ.150 கோடிக்கு, மருதை ஆறு குறுக்கே பாலம் அமைத்தது; ரூ.3,500 கோடியில் பெரம்பலூர், திருச்சி, அரியலூர், கும்பகோணத்திற்கு சாலை அமைத்து கொடுத்துள்ளது.
'இண்டி' கூட்டணியில் இருக்கும் கேரள முதல்வர் பினராய் விஜயன், ரூ.10 ஆயிரம் கோடி மத்திய அரசு நிதி பெற்று துறைமுகம் அமைத்துள்ளார். ஆனால் தமிழக அரசு மட்டும் மக்களை சிந்திக்க விடாமல் செய்கிறது. இதற்கு மக்கள் தி.மு.க., கட்சியை புறக்கணிக்க வேண்டும். பா.ஜ., கூட்டணியை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


























Bons Plans
Annuaire
Scan