தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டம்: விஜயுடனான கூட்டணி குறித்து பேச தடை
28 ஐப்பசி 2025 செவ்வாய் 13:33 | பார்வைகள் : 182
காங்கிரஸ் அறக்கட்டளை உறுப்பினர்கள் பதவிக்கு எத்தனை பேர் நியமிக்கப்படுவர் என்ற விவரம் எதுவும் கூறாமல், அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், ஒரு நாள் பயணமாக புதுச்சேரி வந்தார். அந்த பயணத்தையொட்டி, நேற்று முன்தினம் திடீரென தமிழக காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம், சத்தியமூர்த்தி பவனில் நடத்தப்பட்டது. அக்கட்சியில், மொத்தமுள்ள 41 செயற்குழு உறுப்பினர்கள், ஒன்பது எம்.பி.,க்கள், 17 எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அணிகளின் தலைவர்கள் என, சிறப்பு அழைப்பாளர்கள் 80க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால், மூத்த தலைவர்கள் சிதம்பரம், அழகிரி, டாக்டர் செல்லக்குமார், விஸ்வநாதன், மயூரா ஜெயக்குமார் போன்றோர், கூட்டத்திற்கு வரவில்லை. அதேபோல் ஒன்பது எம்.பி.,க்களில் மூன்று பேர் மட்டும் பங்கேற்றனர். எம்.எல்.ஏ.,க்களில் ஆறு பேர் வரவில்லை.
காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான, 2,000 கோடி ரூபாய்க்கு அதிகமான மதிப்புள்ள சொத்துக்களை, காங்கிரஸ் அறக்கட்டளை வாயிலாக பாதுகாக்கவும், முறைப்படுத்தவும், கணக்கு வழக்குகளை பார்க்கவும், டில்லி மேலிடம் விரும்பியது. காங்கிரஸ் தலைவர் கார்கே உத்தரவின்பேரில், தமிழக காங்கிரஸ் அறக்கட்டளைக்கு, புதிய உறுப்பினர்களை நியமிப்பதற்குரிய நடைமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
கட்சியின் மேலிட பொறுப்பாளர், மாநிலத் தலைவர், சட்டசபை காங்கிரஸ் தலைவர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் இடம்பெறும் வகையில், அறக்கட்டளை நிர்வாகம் அமைக்கப்படுகிறது. இந்த மாற்றத்திற்கான விபரங்களை செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்காமல், டில்லி உத்தரவின்படி, தீர்மானத்தில் உறுப்பினர்களின் கையெழுத்து பெறப்பட்டுள்ளது.
முன்னாள் தலைவர் தங்கபாலு, அறக்கட்டளை உறுப்பினர்கள் எண்ணிக்கை, யார், யார் இடம் பெறுகின்றனர் என்ற விபரத்தை படிக்கும்படி கேட்டதற்கு, கிரிஷ் சோடங்கர் மறுத்துள்ளார். மேலும், தங்கபாலு பேசுகையில், “தமிழக காங்கிரஸ் கட்சியின் பூத் மிட்டியை, இன்னும் நிரப்பாமல் இருக்கிறோம். அதை நிரப்பும் பணியில் ஈடுபட வேண்டும்,” என்றார்.
அதற்கு கிரிஷ் சோடங்கர், “தற்போது, 125 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணிகளை துவக்க வேண்டும். தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கிறது. விஜய் கட்சி கூட்டணி குறித்து, யாரும் பேச வேண்டாம். எதிர்கால கூட் டணி குறித்து, டில்லி மேலிடம் நல்ல முடிவை அறிவிக்கும்,” என்றார். கூட்டத்தில் விஜய் கட்சியுடன் கூட்டணி குறித்து பேசுவதற்கு தயாராக இருந்த காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் சிலர், 'டில்லி மேலிடம் எங்களுக்கு வாய்ப்பூட்டு போட்டு விட்டது' என்றனர்.


























Bons Plans
Annuaire
Scan