டில்லியில் செயற்கை மழை பொழிய வைக்கும் முயற்சிக்கு பலன் இல்லை!
29 ஐப்பசி 2025 புதன் 15:00 | பார்வைகள் : 160
மேக விதைப்புக்கு பிறகும் டில்லி இன்னும் வறண்டே இருப்பதுக்கான காரணம் குறித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, கான்பூர் ஐஐடி இயக்குநர் மணிந்திர அகர்வால் விளக்கம் அளித்துள்ளனர்.
டில்லியில் காற்று மாசு மிகப்பெரும் பிரச்னையாக உள்ளது. இதனால் குழந்தைகள், முதியோர் மற்றும் நோயாளிகள் நுரையீரல் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக அக்டோபர் முதல் ஜனவரி வரை காற்றின் தரம் மிக மோசமான நிலையை எட்டும்.
ஈரப்பதம் அண்டை மாநிலங்களில் பயிர் கழிவுகளை எரிப்பது, குளிர்காலத்தில் காற்றோட்டம் குறைவு போன்ற காரணங்களால் இந்த நிலை ஏற்படுகிறது. இந்த சமயத்தில் காற்றின் தரத்தை மேம்படுத்த செயற்கை மழையை ஏற்படுத்த டில்லி அமைச்சரவை முடிவு செய்தது.
கடந்த மே 7-ல், 3.21 கோடி ரூபாய் செலவில், ஐந்து செயற்கை மழை சோதனைகள் மேற்கொள்வதற்கான திட்டத்தை அமைச்சரவை அங்கீகரித்தது. கடந்த வாரம் புராரி பகுதியின் மேல் இந்த சோதனை நடந்தது.
2வது முறையாக நேற்று டில்லி அரசு, ஐ.ஐ.டி., கான்பூருடன் இணைந்து டில்லியின் சில பகுதிகளில் செயற்கை மழைக்கான சோதனையை நடத்தியது. இருந்தாலும் மழை பொழியவில்லை.
ஈரப்பதம் இல்லை
இது குறித்து டில்லி சுற்றுச்சூழல் அமைச்சர் சர்தார் மஜீந்தர் சிங் சிர்சா கூறியதாவது: 10-15% ஈரப்பதம் உள்ள நிலையில் மேக விதைப்பு செய்ய முடியுமா என்பதைச் சரிபார்க்க நடத்தப்பட்டது. மேக விதைப்புக்குப் பிறகும் டில்லி இன்னும் வறண்டே உள்ளது. ஈரப்பதம் குறைவாக இருப்பதே காரணம்.
செயற்கை மழை சோதனை இதுவரை எந்த பலனைத் தரவில்லை. பொதுவாக, நமக்கு 50% க்கும் அதிகமான ஈரப்பதம் தேவை. ஐஐடி கான்பூர் இந்த பரிசோதனையை மேற்கொண்டது. ஐஐடி கான்பூர் நம்பிக்கையுடன் இருந்ததால், நாங்கள் அதைத் தொடர்ந்தோம். சோதனைகள் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
ஐஐடி இயக்குநர் சொல்வது என்ன?
கான்பூர் ஐஐடி இயக்குநர் மணிந்திர அகர்வால் கூறியதாவது: நாங்கள் இரண்டு முறை மேக விதைப்பு சோதனை செய்தோம். ஒன்று மதியம் மற்றும் மற்றொன்று மாலையில் நடத்தப்பட்டது.
தற்போது விமானம் மீரட்டுக்குத் திரும்பியது. இதுவரை மழை பெய்யவில்லை. எனவே, அந்த வகையில், இந்த சோதனை முழுமையாக வெற்றி பெறவில்லை, என்றார்.


























Bons Plans
Annuaire
Scan