உலக வங்கி உணர்த்துகின்ற எச்சரிக்கை - இலங்கையின் பொருளாதாரத்திற்கு நடக்கப் போவது என்ன?
 
                    31 ஐப்பசி 2025 வெள்ளி 12:06 | பார்வைகள் : 118
இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பாக அண்மையில் உலக வங்கி வெளியிட்ட அறிக்கை மிக முக்கியத்துவம் மிக்கதாக இருக்கின்றது.
அதில் கூறப்பட்டுள்ள விடயங்கள், செய்யப்பட்டுள்ள மதிப்பீடுகள், எதிர்வு கூறல்கள் என்பன இலங்கையின் பொருளாதாரத்தின் முக்கிய தீர்க்கமான விடயங்களாக அமைந்திருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
அதாவது இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது மீண்டும் சரியான தடத்துக்கு இன்னும் வரவில்லை என்றும் இன்னும் பல சவால்கள் காத்திருப்பதாகவும் உலக வங்கியின் இந்த அறிக்கை பிரதானமாக சுட்டிக் காட்டியிருக்கிறது. இன்னும் சவால்கள் தொடர்வதாகவே இதில் தெரிவிக்கப்படுகிறது. இதுவே கடந்த ஏப்ரல் மாதம் உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மிக சிறப்பாக இருப்பதாகவும் மீண்டு வரும் செயற்பாடுகள் குறிப்பிடத்தக்க மட்டத்தில் சிறந்ததாக காணப்படுவதாகவும் விரைவாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டி இருந்தது.
குறிப்பாக உலகில் மீண்டு வரும் பொருளாதாரங்களில் இலங்கை முக்கிய இடத்தில் இருப்பதாக இந்த வருடம் ஏப்ரல் மாதம் உலக வங்கியினால் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் இம்முறை ஒக்டோபர் மாதம் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் சவால்கள் இருப்பதாகவும் இன்னும் சரியான இடத்துக்கு இலங்கையின் பொருளாதாரம் வரவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏப்ரல் மாதத்துக்கும் ஒக்டோபர் மாதத்துக்கும் இடையில் உலக வங்கி வெளியிட்ட இரண்டு அறிக்கைகளில் இரண்டு வித்தியாசமான விடயங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றமைக்கான காரணம் என்ன என்பதைப் பார்க்க வேண்டும்.
உதாரணமாக ஓட்டப்பந்தயத்தில் பங்கெடுக்கின்ற ஒருவர் திடீரென மயக்கம் போட்டு விழுகிறார். அவருக்கு உடனடியாக முதலுதவி வழங்கப்பட்டு அவர் மீண்டும் எழுந்து கொள்வதாக எடுத்துக் கொள்வோம். அப்படி எழுந்து கொள்ளும் போது அவர் மீண்டு வந்துவிட்டார். ஆனால் அவரால் மீண்டும் ஓட்டப் போட்டியில் பங்கேற்க உடனடியாக முடியாது. அதற்கு இன்னும் காலம் தேவை. அதற்கு அவர் மருந்துகளை எடுக்க வேண்டும். தேவையானளவு பயிற்சிகள் செய்ய வேண்டும். எனவே அவர் மீண்டு விட்டார். ஆனால் அவரால் பழைய இடத்தை அடையமுடியவில்லை. அந்த நிலைமையில் தான் தற்போது இலங்கையின் பொருளாதாரம் காணப்படுகிறது.
அதாவது இலங்கை விழுந்த இடத்திலிருந்து தற்போது எழுந்திருக்கிறது. ஆனால் இன்னும் சரியான வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வேண்டி இருக்கிறது. அதில் பல சவால்களும் சிக்கல்களும் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இதனைத் தான் உலக வங்கி இம்முறை அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
அதாவது உலக வங்கி ஏப்ரல் மாதத்தில் கூறியது போன்று இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்தும் சவால் நிலைமையில் இருந்தும் மீண்டு வந்து கொண்டிருக்கிறது. ஆனால் தற்போது ஒக்டோபர் மாத அறிக்கை பிரகாரம் பொருளாதார ரீதியாக முன்னேறுவதற்கு இன்னும் இலங்கைக்கு நெருக்கடியான நிலைமை காணப்படுகிறது. உதாரணமாக 2024 ஆம் ஆண்டில் இலங்கை 4.4 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடையும் என்று ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது.
இலங்கை 2024 ஆம் ஆண்டில் ஐந்து சதவீத பொருளாதார வளர்ச்சி நோக்கிப் பயணித்தது. ஆனால் 2025 ஆம் ஆண்டில் 3.9 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் தற்போது ஒக்டோபர் மாத அறிக்கையில், இலங்கை 2025 ஆம் ஆண்டில் 4.4 சதவீத பொருளாதார வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் என்று உலக வங்கி எதிர்வு கூறியுள்ளது. இலங்கை முதலாவது காலாண்டில் 4.8 சதவீத பொருளாதார வளர்ச்சியையும், இரண்டாவது காலாண்டில் 4.9 சதவீத பொருளாதார வளர்ச்சியையும் அடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோன்று, 2026 ஆம் ஆண்டில் இலங்கை 3.5 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடையும் என்று உலக வங்கி எதிர்வு கூறுகிறது. பொருளாதார வளர்ச்சி தொடர்பான இந்த எதிர்வு கூறல்கள் அவ்வப்போது மாற்றமடைகின்றன. காரணம், இலங்கை எப்போதுமே தான் செய்யப் போவதை வைத்துக்கொண்டே வளர்ச்சியை மதிப்பிடும். ஆனால், உலக வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்கள் நாம் செய்துகொண்டிருப்பதை வைத்து எமது வளர்ச்சியை மதிப்பிடும். அந்த வகையிலேயே உலக வங்கி இலங்கையின் பொருளாதார வளர்ச்சி தொடர்பாக மதிப்பீட்டு எதிர்வு கூறலை வெளியிட்டிருக்கிறது.
எனவே, பொருளாதார சீர்திருத்தச் செயற்பாடுகளைத் தொடரும் பட்சத்தில் மட்டும்தான் வளர்ச்சியை அதிகரித்துக் கொள்ள முடியும் என்பது இதிலிருந்து நிரூபணமாகிறது.
இந்த அறிக்கையின் பிரகாரம் இலங்கையின் வறுமை தற்போது 22 சதவீதமாகக் காணப்படுகிறது. கடந்த காலத்தில் வறுமை வீதம் 26சதவீதமாக இருந்தது, தற்போது அது 22 சதவீதமாகக் குறைவடைந்து இருக்கிறது. 2022-–2023 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் வறுமை வீதம் குறைவடைந்திருக்கிறது. ஆனாலும், இன்னும் 22 சதவீதம் வறுமையில் இலங்கை இருக்கிறது.
அதாவது, 22 சதவீதமான மக்கள் வறுமைக் கோட்டுக்குள் இருக்கின்றார்கள். கிட்டத்தட்ட 60 இலட்சம் பேர் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளார்கள். அதேபோன்று, வறுமைக் கோட்டின் மேல் சற்று கூடுதலான வருமானத்தை பெறுகின்ற இன்னும் 10 சதவீதமான மக்கள் இருப்பதாக உலக வங்கியின் அறிக்கை கூறுகிறது.
அதாவது, வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்கள் ஒரு நாளைக்கு இரண்டு டொலர்களுக்குக் குறைவாக வருமானம் பெறுகின்றனர். எனவே, அதற்கு மேல் பத்து வீதமானோர் சற்று கூடிய அளவில் வருமானம் பெறுகின்றனர். பொருளாதார ரீதியாகப் பார்க்கும்போது அவர்களும் சவால்களை எதிர்கொள்கின்றார்கள். அவர்களும் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் சிக்கலை எதிர்கொள்கின்றார்கள். அப்படிப் பார்க்கும்போது இலங்கையில் மூன்று பேரில் ஒருவர் வறுமையின் பிடியில் உள்ளார் என்பதே அதற்குப் பொருளாகும்.
அதேபோன்று, அரசாங்க ஊழியர்கள் இலங்கையில் கிட்டத்தட்ட 14 இலட்சம் பேர் இருக்கின்றனர். அவர்களின் சம்பள அளவு போதுமானதல்ல என்ற ஒரு கருத்து நீண்டகாலமாக நிலவிக்கொண்டிருக்கிறது. அது தொடர்பாக பொருளாதார ரீதியான அறிக்கைகளும் வருகின்றன. 14 இலட்சம் அரசு ஊழியர்கள் இருப்பதால், சம்பளத்தை அதிகரிப்பது என்பதும் இலகுவான விடயம் அல்ல.
இந்த விடயத்தையும் உலக வங்கி மிக முக்கியமாக சுட்டிக் காட்டி இருக்கிறது. அதேபோன்று, இந்த அறிக்கையில் உலக வங்கி சுட்டிக்காட்டிய மற்றுமொரு விடயம், வரவு–செலவுத் திட்டத்தில் அரசாங்கத்தின் செலவு அதிகமாக எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பது தொடர்பானதாகும். அதாவது, இலங்கை தனது செலவினத்தில் 80 சதவீதமானவற்றை வட்டி செலுத்தவும், ஓய்வூதியம் வழங்கவும், அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கவும் பயன்படுத்துகிறது.
எனவே, 20 சதவீதம் தான் மூலதனச் செலவுகளுக்காகப் பயன்படுத்த வேண்டிய தேவை காணப்படுகிறது. கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கான திட்டங்களுக்காக 20 சதவீதத்தையே செலவிட வேண்டி இருக்கிறது. உட்கட்டமைப்புச் செலவுகளுக்கும் இதிலிருந்தே நிதியைப் பெற வேண்டி இருக்கிறது. எனவேதான், இங்கு பொருளாதார சீர்திருத்தம் முக்கியத்துவம் மிக்கதாக அமைகிறது.
இங்கு முக்கியமாக சர்வதேச முதலீடுகளை பெறுவதில் காணப்படுகின்ற தடைகளை நீக்க வேண்டும். வெளிநாட்டு நேரடி முதலீடுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். வெளிநாட்டு நேரடி முதலீடுகளைப் பெற்றுக் கொள்வதில் காணப்படுகின்ற தடைகளை நீக்குவதற்கான ஏற்பாடுகள் செய்வது அவசியமாகும்.
குறிப்பாக ஒற்றைச் சாளர முறையில் இந்த வெளிநாட்டு நேரடி முதலீடுகளை உள்ளீர்க்க வேலைத் திட்டங்கள் முக்கியமாக இருக்கின்றன. தற்போது இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்துக்குள் இருக்கின்றது. எப்படி இருப்பினும், மற்றுமொரு நெருக்கடி வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோன்று, பொருளாதார வளர்ச்சி அபிவிருத்தியை நோக்கிப் பயணிக்க வேண்டும். அதற்கு விசேட மறுசீரமைப்பு வேலைத் திட்டங்களும், புதிய திட்டங்களும் அவசியமாகின்றன. அது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
முக்கியமாக வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகரித்துக் கொள்ளவும், பொருளாதார விரிவாக்கத் திட்டங்களைச் செயற்படுத்தவும் வேலைத் திட்டங்கள் அவசியமாகின்றன. வட்டி வீதங்களில் குறைவு ஏற்பட வேண்டும். பொருளாதாரம் விரிவடைவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாவது முக்கியமாகும். பொருளாதார வளர்ச்சியை இதன் ஊடாக ஏற்படுத்துவது அவசியமாக இருக்கிறது. உலக வங்கியின் இந்த அறிக்கையில் காணப்படுகின்ற விடயங்களை அரசாங்கம் சரியாக உள்ளீர்ப்பது மிகவும் தீர்க்கமானதாக உள்ளது.
2022 ஆம் ஆண்டு இந்த நாடு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது. பாரிய பொருளாதார சவால்களை மக்கள் எதிர்கொண்டார்கள். அதன் பின்னர் 2023 ஆம் ஆண்டு இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஒப்பந்தத்தைச் செய்து கொண்டது. அதன் ஊடாக இலங்கைக்கு தற்போது 2.9 பில்லியன் டொலர்கள் வழங்குவதற்கான ஏற்பாடு நடந்துகொண்டிருக்கின்றது. விரைவில் ஆறாவது தவணைப் பணமும் இலங்கைக்கு வழங்கப்பட இருக்கிறது. காரணம், ஐந்தாவது மீளாய்வுச் செயற்பாடுகளுக்கு உத்தியோகத்தர் மட்டத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
எனவே, இது ஒரு சாதகமான தன்மையைக் காட்டுகிறது. ஆனாலும், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதில் இன்னும் சவால்கள் காணப்படுகின்றன. உலக வங்கி கூறியிருப்பதைப்போன்று, இன்னும் 22 சதவீதமானவர்கள் கடுமையான வறுமையின் கீழ் இருக்கின்றனர். மேலும் பத்து சதவீதமானோர் வறுமைக் கோட்டின் மேல் சற்று உயர்வான வருமானத்தைப் பெறுகின்றனர். எனவே, இந்த நிலைமை மாற்றம் அடைய வேண்டும். பொருளாதார ரீதியாக மக்கள் வலுவூட்டப்படவேண்டியது அவசியமாகும்.
நன்றி virakesari
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 CCTV - VIDÉO SURVEILLANCE 24 மணி நேர வீடியோ கண்காணிப்பு
        CCTV - VIDÉO SURVEILLANCE 24 மணி நேர வீடியோ கண்காணிப்பு         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan