Paristamil Navigation Paristamil advert login

அற்ப அரசியலை முதல்வர் ஸ்டாலின் நிறுத்தி கொள்ள வேண்டும்: அண்ணாமலை

அற்ப அரசியலை முதல்வர் ஸ்டாலின் நிறுத்தி கொள்ள வேண்டும்: அண்ணாமலை

1 கார்த்திகை 2025 சனி 09:45 | பார்வைகள் : 165


தாத்தா காலத்தில் தொடங்கிய அற்ப அரசியலை, பேரன் காலத்திலும் தொடர்வதை, முதல்வர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: திமுகவின் ஊழலும், போலி வேடமும் மக்கள் மத்தியில் அம்பலப்படும் போதெல்லாம், அதனை மடைமாற்ற, மக்கள் மத்தியில் பிரிவினையைத் தூண்டுவது திமுகவின் வழக்கம். நகராட்சி நிர்வாகத் துறையில், ரூ.888 கோடி ஊழல் நடந்திருப்பது வெளியானவுடன், அதனை மறைக்கும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். உழைக்கும் பீஹார் மக்களைத் திமுகவினர் துன்புறுத்துகின்றனர் என்று, பிரதமர் மோடி கூறியது முழுக்க முழுக்க உண்மை.

தமிழக அமைச்சர்கள் பொன்முடி, டி.ஆர்.பி ராஜா தொடங்கி, கடைக்கோடி திமுக நிர்வாகிகள் வரை, பீஹார் மக்களை ஏளனமாகப் பேசியதும், அவர்கள் மீது தாக்குதலுக்குத் தூண்டுவதைப் போல பேசியதும், தமிழக மக்கள் அறிவார்கள். முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள காணொளியிலேயே, பிரதமர் மோடி, தமிழகத்தில், பீஹார் மக்களை திமுகவினர் துன்புறுத்துகிறார்கள் என்று பேசியிருப்பது தான் இருக்கிறது.

எப்படி, திமுகவினர் தமிழகத்தின் அவமானச் சின்னமாக இருக்கிறார்களோ, அதே போல, பிரதமர் திமுகவினரைக் குறிப்பிட்டதை, தமிழக மக்களைக் குறிப்பிட்டதாக மடைமாற்ற முயற்சிப்பது, ஸ்டாலின் வகிக்கும் முதல்வர் பதவிக்கே அவமானம். தாத்தா காலத்தில் தொடங்கிய இந்த அற்ப அரசியலை, பேரன் காலத்திலும் தொடர்வதை, முதல்வர் நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்