குழந்தையின் பேச்சுத்திறன் மேம்பட பெற்றோர் செய்ய வேண்டியவை
29 சித்திரை 2019 திங்கள் 09:52 | பார்வைகள் : 9548
குழந்தைகளுக்கு மொழியைக் கற்றுத்தருவதில் பெற்றோர்களின் பங்கு முக்கியமானது. ஆனால் பெரும்பாலான வீடுகளில் குழந்தைகள் கணினித்திரையையும், டிவி திரையையும் பார்ப்பதும், பொம்மைகளுடன் விளையாடுவதுமாக கழிகிறது அவர்களுடைய பொழுதுகள். இதுபோன்ற சூழலில் சூழல்களில் குழந்தைகள் பேசுவதற்கான வாய்ப்பு குறைந்து, கேட்பது மட்டுமே நடக்கிறது. ஒரு விஷயத்தை எப்படிப் பேச வேண்டும் என்பது தெரியாமல் குழந்தைகள் வளர நாம் காரணமாகிறோம். இடம், பொருள் அறிந்து பேச வேண்டிய தெளிவும் அவர்களிடம் இருப்பதில்லை.
* பெற்றோர் குழந்தைகளுடன் பேசவும், விளையாடவும் நேரம் ஒதுக்க வேண்டும். பெற்றோர் அவர்களோடு சேர்ந்து விளையாடும்போது அவர்கள் உங்களோடு பேசப் பேச மொழித்திறன் அதிகரிக்கிறது.
* குழந்தைகள் தொலைக்காட்சி, கைப்பேசி மற்றும் வீடியோ கேம் ஆகியவற்றில் அதிக நேரம் செலவளிப்பதைக் குறைப்பது அவசியம். இவற்றில் நேரம் செலவளிக்கும்போது பெரும்பாலும் அவர்கள் பேசுவதில்லை.
* மற்ற குழந்தைகளுடன் இணைந்து புத்தகம் வாசிப்பது, கதை சொல்வது, பாடல் பாடுவது போன்ற வாய்ப்புகளை உருவாக்குங்கள்.
* குழந்தைகள் படுக்கைக்குச் சென்ற பின் தூக்கம் பிடிக்கும் வரை கதை புத்தகங்கள் வாசித்துக் காட்டலாம். இதனால் கற்பனை வளம் கூடுவதுடன் மொழி வளமும் அதிகரிக்கும்.
* குழந்தைகள் விரும்பும் வகையில் கலர்புல்லான படங்கள் கொண்ட புத்தகங்களை அறிமுகம் செய்வதோடு குழந்தைகளிடம் அது பற்றிய கற்பனை மற்றும் கதைகளைச் சொல்ல வைத்துக் கேட்கலாம். மழலை மெல்ல மெருகேருவதை உணரலாம்.
* குழந்தைகள் புதிய விஷயங்களை தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் கேட்கும் கேள்விகளுக்கு பொறுப்பாக பதில் சொல்லுங்கள். அறிவில் சேகரிக்கும் விஷயங்கள் மொழியிலும் வெளிப்படும்.
* குழந்தைகளுக்கு உறவுகளை அறிமுகம் செய்யுங்கள். அவர்களைச் சந்தித்து உறவாடவும், உறையாடவும் வாய்ப்பளிக்கலாம். இதன் வழியாக அவர்கள் உற்சாகத்துடன் பேசிப்பழகுகின்றனர்.
* குழந்தைகளை விடுமுறை நாட்களில் புதிய இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அங்குள்ள மார்க்கெட், கோயில். பொது இடங்களுக்கு அழைத்துச் சென்று அவர்கள் பார்க்கும் பொருட்கள் பற்றிப் பேச வேண்டும்.
* குழந்தைகள் தங்களது தேவைகளை வாய்விட்டு கேட்கப்பழக்குங்கள். எது வேண்டும், வேண்டாம் என்று முடிவெடுப்பதற்கான சுதந்திரமும் அவர்களுக்கு இருக்கட்டும். நிறைய சிந்திக்கவும், சிந்தித்ததை வார்த்தைகளில் பரிமாறிக் கொள்ள வாய்ப்பிருக்கும் பட்சத்தில் குழந்தைகள் மொழி அழகும், மேன்மையும் பெறுகிறது.
* புதிய நபர்களை எப்படி பேச்சில் அணுக வேண்டும் என்பதற்கு நீங்களே ரோல்மாடலாக இருங்கள்.
* குழந்தைகள் பெரும்பாலும் உங்களிடம் இருந்தே பல விஷயங்களையும் கற்றுக் கொள்கின்றனர். எதைப் பேசும்போதும் கவனத்துடன் செயல்படுங்கள்.
* மேடையில் பலர் முன் பேச பயப்படும் குழந்தைகளை அவரது நண்பர்கள் மத்தியில் பேசப் பழக்குங்கள். நன்றாகப் பேசும்போது பாராட்டுங்கள். தன்னம்பிக்கையை அதிகரிக்கும். அது அவர்கள் மொழியில் வெளிப்படும்.