இளநரை தோன்றுவது ஏன்?
1 சித்திரை 2019 திங்கள் 11:21 | பார்வைகள் : 9429
மருத்துவரீதியாக 40 வயதிற்கு உட்பட ஒருவரது தலைமுடிகளில் பாதிக்கு மேல் வெண்மை அடைந்தாலே அதனை இளநரை என்பார்கள். இளநரைக்கு காரணம், பரம்பரை சம்பந்தமானது. ரத்த உறவினர்களில் பலர் ஏற்கனவே நரைத்தவர்கள் இருந்தால் வாரிசாக ஏற்படும். தலைமுடி வேகமாக வளர்கின்ற காரணத்தால் அதுவே முதலில் நரைக்க தொடங்கும். உடல் முடிகள் நரைக்க சற்று காலம் செல்லும்.
தலையில் பொடுகு அதிகம் தோன்றினால் அது வேர்க்கால்களை அடைத்து மெலனின் உற்பத்தியை குறைத்து நரையை அதிகப்படுத்தும். தலையை அலசி குளிப்பதற்காக பயன்படுத்தும் சில வேதிப்பொருள் கலந்த வீரியமிக்க ஷாம்புகள் மற்றும் முடி அலசும் ஷாம்புகளில் உள்ள ஹைட்ரஷன் பெராக்சைடு, வேர்க்கால்களை சேதமடைய செய்து, கறுப்பு நிறமிகளை அழித்து நரைமுடிகளை அதிகப்படுத்தும். புரதச்சத்து மற்றும் இரும்பு சத்து குறைவினால் முடியின் கறுமை நிறம் மங்கி, செம்பட்டை நிறம் தோன்றுகிறது.
நாளடைவில் இதுவே நரைமுடிக்கு காரணமாக அமைகிறது. பெண்களை விட ஆண்களுக்கே முடி மிக கறுப்பாக காணப்படுகிறது. நரைமுடி அதிகரிப்பதற்கு பிசிஎல் என்ற ஜீன்கள் காரணமாக இருப்பதாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.முடியின் வளர்ச்சியானது படிப்படியாக நடக்கிறது. எல்லா முடியும் ஒரே நேரத்தில் ஒரே வீச்சில் வளருவதில்லை. சில முனைகளிலுள்ள முடிகள் வளராது. வேறு சில ஓய்வில் இருக்கும். சில முடிகள் உதிரும். ஓய்வில் இருந்தவை வளரும்.
சருமத்தின் அடியில் இருக்கும் வேர் போன்ற கலங்களில் இருந்து முடி வளர்க்கிறது. அங்கு தான் முடிக்கு கருமை நிறத்தை கொடுக்கும் மெலனின் என்ற சாயம் உள்ளது. அதில் மெலனின் உற்பத்தி நின்று விட்டால் அந்த வேரில் இருந்து வளரும் முடிக்கும் கருமை நிறம் இருக்காது. அது வெள்ளை முடியாகவே இருக்கும். ஆனால், அதே நேரம் வேறு முளைகளில் இருந்து கருமையான முடி வளரக்கூடும். படிப்படியாக மெலனின் உற்பத்தி குறைய, குறைய வெள்ளை முடிகள் அதிகரிக்கும். மெலனின் அழிவை தடுத்து, கறுப்பு நிறத்தை கூட்டி, இளநரை ஏற்படாமல் தடுக்கும் மருத்துவ முறைகளை மிக இளம் வயதிலேயே மேற்கொண்டால், இள நரை ஏற்படுவதை தடுக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.