ஆரோக்கியத்திற்கு உகந்ததா எண்ணெய்?
29 ஆடி 2019 திங்கள் 04:49 | பார்வைகள் : 9677
நமது மளிகை லிஸ்டில் தவறாமல் இடம் பிடிக்கக்கூடிய பொருள், சமையல் எண்ணெய். எப்போதும் ஒரே பிராண்ட் எண்ணெயை வாங்குவது சிலரின் வழக்கம். சிலர் டாக்டர் அல்லது டயட்டீஷியன் பரிந்துரைத்த எண்ணெயை வாங்குவார்கள். சிலர் எந்த எண்ணெய் தள்ளுபடியில் கிடைக்கிறதோ அதைத் தேர்வு செய்வார்கள். சிலர் சன்ஃப்ளவர் ஆயில், சிலர் ஆமணக்கு எண்ணெய், சிலர் ரைஸ் பிராண்ட் எனும் தவிட்டு எண்ணெய், சிலர் இவை அனைத்தையும் கலந்து வாங்குவார்கள்.
ஆனால், எல்லோருடைய தேர்வும் ஏதோவொரு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயாகவே (ரீஃபைண்ட் ஆயில்) இருக்கும். விதைகளில் இருந்துவரும் எண்ணெய், கருப்பு நிறத்தில் இருக்கும். ஆனால், பலர் கண்ணாடி போல இருக்கும் தூய எண்ணெய்களையே விரும்புகிறோம். எண்ணெயின் நிறத்தை மாற்றுவதற்காக சுத்திகரிக்கின்றனர்.
பிரஷ்ஷாகப் பிழியப்படும் எண்ணெய் ஒருவித நாற்றத்துடன் இருக்கும். அந்த நாற்றத்தைப் போக்க சில கெமிக்கல்களைப் போட்டு சுத்திகரிக்கப்படுகிறது. விதைகளிலிருந்து நசுக்கி எடுக்கப்படும் எண்ணெய் சீக்கிரமே கெட்டுவிடும். அதாவது இயற்கையாக அந்த எண்ணெயின் ஆயுள் சில நாள்களே. அதனால் சில கெமிக்கல்கள் சேர்த்து பிராசஸிங் செய்கிறார்கள்.
எண்ணெய்
ஒவ்வோர் எண்ணெயையும் அதன் தன்மைக்கேற்ப ஓரளவுக்கே சூடு செய்ய முடியும். எல்லாவித எண்ணெய்களையும் புதிதாக எடுத்துத் தனித்தனியாகச் சட்டியில் வைத்துக் கொதிக்க விடுங்கள். சில நிமிடங்களிலேயே அனைத்திலிருந்தும் கரும்புகை வரும். ஏனென்றால், அந்த எண்ணெயின் தன்மை அப்படி. அதனால், தன்மையை மாற்ற ஒரு ஹைட்ரஜன் அணுவை உள்ளே ஏற்றுகிறார்கள். இவ்விஷயங்களுக்காகவே சுத்திகரித்தல் நடைபெறுகிறது.
கொலஸ்ட்ரால் என்பது மிருகங்களால் உற்பத்தி செய்யப்படுவது. அதைத் தாவரங்களால் உற்பத்தி செய்ய முடியாது. அதனால், மார்க்கெட்டில் இருக்கும் எந்த விதை எண்ணெய்களிலும் கொலஸ்ட்ரால் இருக்காது. ஆனால், ஒமேகா6 எனும் ஒருவகை கொழுப்பு இந்த விதை எண்ணெய்களில் மிகுந்திருக்கும். இந்த ஒமேகா6, நம் ரத்தக் குழாய்களின் செல்களை பாதிக்கும்.
அந்தப் பாதிப்பைச் சரிசெய்ய நமது கல்லீரல், கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்யும். அதனால், இந்த விதை எண்ணெய்கள் நம் கொலஸ்ட்ராலை அதிகரிக்கவே செய்யும். விதை எண்ணெய்களில் கொலஸ்ட்ரால் இல்லை. ஆனால், அவற்றைப் பயன்படுத்திச் சமைத்துச் சாப்பிடும்போது நம் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாகிறது. எந்த எண்ணெயில் பொரித்தாலும் அது, டிரான்ஸ் ஃபேட் உருவாக்கி விடுகிறது. பொரித்த உணவுகளில் இக்கொழுப்பு உள்ளது. இது நேரடியாக நம் இதய ரத்தக் குழாய்களைப் பாதிக்கும்.
இன்று நீங்கள் டிரான்ஸ் ஃபேட் எடுப்பதை நிறுத்தினால்கூட, உங்கள் உடலில் உள்ள எல்லா டிரான்ஸ் ஃபேட்களும் இல்லாமல் போக மூன்று ஆண்டு ஆகும். நீங்கள் எந்த உணவுப் பொருளை வாங்கினாலும் இந்த டிரான்ஸ் ஃபேட் அளவைப் பாருங்கள். இது கொஞ்சமே இருந்தாலும்கூட, அதை வாங்கவே கூடாது.