Paristamil Navigation Paristamil advert login

பெண்களே உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்

பெண்களே உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்

30 வைகாசி 2019 வியாழன் 11:29 | பார்வைகள் : 9743


 பெண்களுக்கு 10 வயதுக்குள் இரும்புச்சத்து மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறையும், 11 முதல் 20 வயதுக்குள் பூப்பெய்தல், மாதவிடாய்ப் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. 21 முதல் 40 வயதுக்குள் ரத்தசோகை, ஃபோலிக் ஆசிட் குறைபாடு, பி.சி.ஓ.டி என்னும் சினைப்பைக் கட்டிகள், மெனோபாஸ், அதீத மாதவிடாய் ரத்தப்போக்கு, எலும்பு அடர்த்திக் குறைவு, உடல் பருமன், அதீத உடல்பருமனால் ஏற்படும் ஆர்த்ரைட்டிஸ், அதிக கொழுப்பால் ஏற்படும் இதயப் பிரச்னைகள், சர்க்கரைநோய் போன்றவை அவர்களைப் பாதிக்கின்றன. 41-ல் இருந்து 60 வயதுக்குள் இதய பாதிப்பு, சர்க்கரை நோய், கண் நோய்கள், எலும்பு அடர்த்திக் குறைவதால் ஏற்படும் எலும்பு முறிவு பிரச்னை போன்றவற்றை எதிர்கொள்கிறார்கள். 

 
இவர்களில் பலர், தங்களுக்கு ஒரு நோயின் அறிகுறி ஏற்பட்டபிறகும் நேரமின்மை அல்லது அலுவலகப் பணிச்சுமை காரணமாக மருத்துவரிடம் செல்வதில்லை. இது, அனைத்துப் பெண்களிடம் பரவலாகக் காணப்படும் மனநிலையாக இருக்கிறது. பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் தருவது மிகவும் அவசியம். 
 
 
பெண்கள் அவசியம் கடைப்பிடிக்கவேண்டிய ஆரோக்கிய விதிகள் குறித்துப் பார்ப்போம்.
 
* வேலைக்குச் செல்லும் பெண்கள் மட்டுமல்ல, வீட்டிலிருப்பவர்களும்கூட காலை உணவைத் தவிர்ப்பது வழக்கமாக இருக்கிறது. காலை உணவுதான் அன்றைய நாளின் உற்சாகத்துக்கு அடிப்படை. காலை உணவாக, ஒரு முட்டை, இரண்டு பழங்கள்/ இட்லி, சாம்பார்/ சாண்ட்விச், ஜூஸ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைச் சாப்பிடலாம். 
 
* உடல்பருமன் பல்வேறு நோய்களுக்கு நுழைவுவாயிலாக இருக்கிறது. எனவே, உயரத்துக்கேற்ப உடல் எடையைப் பராமரிப்பது அவசியம். ஒருவருக்கு ஒரு நாளைக்குச் சராசரியாக 2,000 கலோரி தேவை. ஒருவரின் உடலுழைப்பு, பி.எம்.ஐ அளவைப்பொறுத்து மாறுபடும் என்பதால், உணவியல் நிபுணரின் ஆலோசனைப்படி சாப்பிட வேண்டும். குறிப்பாக, பெரியளவில் உடலுழைப்பு இல்லாத பணிகளைச் செய்பவர்கள் கார்போஹைட்ரேட் உணவுகளை முடிந்தஅளவு குறைக்க வேண்டும். உணவில் எப்போதும் அதிகமான காய்கறிகள் இடம்பெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
 
 
 
* ஹார்மோன் சமச்சீரின்மைக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இது மாதவிடாயில் தொடங்கி மகப்பேறுவரை பல்வேறு வகையில் பெண்களைப் பாதிக்கிறது. எனவே, ஹார்மோன்கள் சரியாக சுரக்கின்றனவா என்பதைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் சோதிப்பது நல்லது. பிரச்னை இருந்தால் அதற்கான சிகிச்சைகளை எடுக்க வேண்டும். 
 
* உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவை உடல் ஆரோக்கியத்துக்கு அடிப்படை. தினமும் 30 நிமிடம் யோகா அல்லது ஏதேனும் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமான தேகத்துக்கு வழிவகுக்கும். உடற்பயிற்சி நிபுணர்களிடம் ஆலோசித்து, வீட்டிலேயே எளிமையான பயிற்சிகளைச் செய்யலாம். 
 
* கர்ப்பப்பை புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் போன்ற நோய்கள் அண்மைக்காலமாகப் பெண்களை அதிக அளவில் பாதித்து வருகின்றன. எனவே, 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தங்கள் மார்பகத்தைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் `மாமோகிராம்' (Mammogram) பரிசோதனை செய்வது நல்லது. மார்பகங்களில் வலி, வீக்கம், கட்டிகள், அரிப்பு மற்றும் வேறுவிதமான மாற்றங்கள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி காரணத்தைக் கண்டுபிடித்து சிகிச்சை எடுக்க வேண்டும். பொதுவாக 40-லிருந்து 50 வயதுவரையுள்ள பெண்களுக்குத்தான் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படும். பெண்கள் பருவமடைவதில் தாமதம் ஏற்படுவது, மாதவிடாய் சரியாக நிகழாமல் இருப்பது போன்றவை இருந்தால், இந்தப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. `பாப் ஸ்மியர் டெஸ்ட்' (pap smear test ) பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.
 
* 40 வயதைக் கடந்த பெண்களுக்கு மெனோபாஸ் நின்றுவிடும் என்பதால், ஹார்மோன்களின் சுரப்பு குறைந்துவிடும். இதனால் `ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) எனும் எலும்பின் அடர்த்தி குறையும் பிரச்னை வருவதற்கான வாய்ப்பு அதிகம். இதனால் முதுகு வலி, எலும்பு முறிவு பிரச்னைகள் ஏற்படும். இத்தகைய குறைபாடு உள்ளவர்கள் அடர்பச்சை நிறக் கீரைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். எலும்பு மருத்துவரின் ஆலோசனைப்படி வைட்டமின் டி மற்றும் கால்சியம் சப்ளிமென்ட்டுகளை உட்கொள்ளலாம்.
 
* உடலின் சீரான செயல்பாட்டுக்குத் தேவையான அளவு நீர் அருந்தவேண்டியது அவசியம். மனித உடல் 70 சதவிகிதம் தண்ணீரால் ஆனதே. எனவே, தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்துவது உடலை ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் வைக்க உதவும். இதன்மூலம் டிஹைட்ரேசன் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்" என்கிறார் காவியா கிருஷ்ணன்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்