கண்ணுக்குக் கீழ் உள்ள கருவளையத்தை போக்கும் எலுமிச்சை
1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 9410
எலுமிச்சையின் சாறை ஒட்டப்பிழிந்த பிறகு, மீதியிருக்கும் தோலை முகத்திலும் கைகளிலும் தேய்த்துக் கொள்ளும் அம்மாவை... பார்த்திருப்பீர்கள்! அத்தனை பெயர் பெற்ற எலுமிச்சையின் எழில் பலன்களைப் பார்ப்போம்.
* அரை டீஸ்புன் எலுமிச்சைச் சாறுடன், 5 துளி தேன், ஒரு டீஸ்பூன் பார்லி பவுடர் கலந்து, முகத்தில் பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். எலுமிச்சைச்சாறு முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்கிவிடும். பார்லி பவுடர் சேர்ப்பதால் முகம் ப்ளீச் செய்தது போல் பளிச்சென்று பிரகாசிக்கும்.
* ஜூரம், தூக்கமின்மையால் கண்களுக்குக் கீழ் ஏற்படும் கருவளையத்தைப் போக்குகிறது எலுமிச்சை. 2 டீஸ்பூன் வெள்ளரி விதை பவுடருடன், அரை டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு சேர்த்து, இது கலக்கும் அளவுக்குப் பாலைவிட்டு பேஸ்ட் செய்யுங்கள். இந்த பேஸ்ட்டை கண்ணுக்குக் கீழ் பூசி, காய்ந்ததும் கழுவுங்கள். கருவளையத்தைப் போக்கி, நல்ல நிறத்தைத் தருவதுடன் சருமத்தை மிருதுவாக்கும் தன்மையும் இந்த சிகிச்சைக்கு உண்டு.
* இளம் வயதிலேயே சிலருக்கு தோல் துவண்டு வயதான தோற்றத்தைத் தரும். இதற்கு அருமையான வைத்தியம் இருக்கிறது எலுமிச்சையில். தோல் சீவி, துருவிய உருளைக்கிழங்கு - அரை கப் எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன், சிவப்பு சந்தனம் - ஒரு டீஸ்பூன்...
இந்த மூன்றையும் சுடு தண்ணீரில் கலந்து பேஸ்ட் ஆக்குங்கள். முகத்தை ஒரு மெல்லிய மஸ்லின் துணியால் மூடி, அதன் மேல் இந்த பேஸ்ட்டைத் தடவி அரை மணி நேரம் கழித்துக் கழுவுங்கள். முகத்தில் உள்ள தோல் பகுதி இறுகி, இளமையான தோற்றம் கிடைக்கும்.