ஆரோக்கியம் தரும் சைக்கிள் பயணம்
20 சித்திரை 2018 வெள்ளி 11:11 | பார்வைகள் : 9859
நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒவ்வொரு பொருட்களும், ஏதோ ஒரு வகையில் அவர்களின் உடலை வலிமையாக்குவதாக இருந்தது. ஆனால், நாமோ நவீனம் என்கிற பெயரில் நமது மூதாதையர்கள் பயன்படுத்திய 90 சதவீத பொருட்களை தொலைத்துவிட்டோம். எஞ்சி இருப்பதையும் தொலைத்துக்கொண்டு இருக்கிறோம். அந்த பட்டியலில் சைக்கிளுக்கும் இடம் உண்டு. ஆம், சைக்கிள் ஓட்டும் பழக்கம் தற்போது வெகுவாக குறைந்து வருகிறது. மோட்டார் சைக்கிள்கள் வந்த பிறகு சைக்கிள்கள் அள்ளித்தரும் பயன்களை மறந்து போய்விட்டோம். அரை கிலோ மீட்டர் தூரம் செல்வதற்கு கூட மோட்டார் வாகனங்களை நாடுகின்றனர்.
சீனா, நெதர்லாந்து போன்ற மேலை நாடுகளில் போக்குவரத்திற்கான முதன்மை வாகனமாக சைக்கிள் திகழ்கிறது. அதே போன்று அமெரிக்கா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் பெரும்பாலும் சைக்கிளையே பயன்படுத்துகிறார்கள். ஆனால் நம் நாட்டில்...?
இங்கே சைக்கிளை தொலைத்துவிட்டு, உடற்பயிற்சி கூடத்தில் நகராமல் ஒரே இடத்தில் இருக்கும் சைக்கிளில் ‘மாங்கு, மாங்கு’ என்று பயிற்சி செய்கிறோம். இதற்கு பதிலாக குறைந்தது அரை மணி நேரமாவது இயற்கையை ரசித்தபடி, இயற்கை காற்றை சுவாசித்தபடி சைக்கிளில் பயணம் மேற்கொண்டால் எத்தனை எத்தனையோ நன்மைகள் கிடைக்கும்.
சைக்கிள் ஓட்டுகிறபோது, கால் பாதத்தில் இருந்து, மூளை வரை உடலின் அத்தனை உறுப்புகளும் இயங்கும். அரைமணி நேரம் சைக்கிள் ஓட்டினால் 300 கலோரி கொழுப்பு எரிக்கப்படுகிறது. எனவே, உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களுக்கு சைக்கிள் ஓட்டுவது ஆகச்சிறந்த பயிற்சி.
கொழுப்பை கரைப்பதால் ரத்த ஓட்டம் சீராகி ரத்த கொதிப்பு மற்றும் மாரடைப்பு போன்ற இதய நோய்கள் நம்மை அண்டாது. மேலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைச் சீராக்கி சர்க்கரை நோயால் வரும் பாதிப்புகளை தடுப்பதற்கும் உதவும். வெளி வீதியில் சைக்கிள் ஓட்டுகிறபோது சுவாசம் சீராக்கப்படுவதால் மூளைக்குத் தேவையான சுத்தமான பிராணவாயு கிடைக்கிறது. சைக்கிள் ஓட்டுகிறபோது உடம்பில் உள்ள அழுக்குகள் வியர்வை மூலம் வெளியேறுவதால் நாம் புத்துணர்ச்சி பெறுவதோடு ஆரோக்கியமான உடல்நலத்தையும் பெற முடியும்.