கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்
16 சித்திரை 2018 திங்கள் 11:31 | பார்வைகள் : 10042
கண்டதும் கண்களில் படும் கூந்தலின் தோற்றத்தை, இயற்கைப் பொருட்களை பயன்படுத்தி ஆரோக்கிய வளர்ச்சிக்கு சிறப்பு சேர்க்கலாம். எந்தெந்த ஆரோக்கிய உணவுகளை உட்கொள்வதன் மூலம், முடி வளர்ச்சிக்கான தூண்டுதலை ஏற்படுத்தலாம் என்பதை இன்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
கறிவேப்பிலை
முடியின் வளர்ச்சிக்கு கறிவேப்பிலை மிகமிகச் சிறந்த உணவு. உணவில் சமைக்கும்போது சேர்க்கும் கறிவேப்பிலை உணவிற்கு வாசனையைத் தருவதைத் தாண்டி, ஆரோக்கியத்தை வலுவாக்குவது. இதன் முக்கியத்துவத்தை உணராத பலர் உணவில் இருக்கும் கறிவேப்பிலையினை தூக்கி எறிவார்கள். கறிவேப்பிலையினை அப்படியே உண்ண பிடிக்காதவர்கள், பொடி செய்து உணவில் கலந்து உண்ணலாம்.
காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் இரண்டு கொப்புக் கறிவேப்பிலையை கழுவி சுத்தம் செய்து, மென்று உண்டால் அது கருமை நிறமான கார் மேகக் கூந்தல் வளரக் கட்டாய கேரண்டி. கறிவேப்பிலையை தொக்கு செய்தோ அல்லது அதன் இலைகளை நிழலில் நன்றாக உலர்த்தி, பொடியாக்கி சாதத்துடன் இணைத்தோ அல்லது சட்னியாக்கியோ, ஏதோ ஒரு வடிவத்தில் உணவாக உட்செலுத்தினால் முடிகள் வெள்ளையாவதிலிருந்து தப்பிக்கலாம். கொத்தமல்லியையும் பச்சையாகவும், உணவிலும் சேர்த்து உண்டால் முடி வளர்ச்சிக்கு நல்லது.
நெல்லிக்காய்
நெல்லிக்காய் முடிக்கு நல்ல வளர்ச்சியும், கருமை நிறமும், ஆரோக்கியமும் தரவல்லது. எனவே நெல்லிக்காயினை அரைத்து பானமாகவோ அல்லது திட உணவாகவோ, காய வைத்து பொடியாகவோ உணவாக எடுக்கலாம்.
பனங்கிழங்கு
இது நார்ச்சத்து மிக்க ஆரோக்கியமான உணவு. பனம் பழம், பனங்கிழங்கு இவை இரண்டுமே ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. பனங்கிழங்கை வேகவைத்து, சிறு சிறு துண்டாக்கி வெயிலில் காய வைத்து, பொடியாக்கி தினமும் காலை ஒரு ஸ்பூன் உண்டால் முடி வளர்ச்சியினைத் தூண்டும்.
கீரை வகைகள்
எல்லாக் கீரை வகையும் ஆரோக்கியம் சார்ந்ததே. ஏதாவது ஒரு கீரையினை தினமும் பொரியல் செய்து உணவோடு சேர்த்தால், அதில் கிடைக்கப்பெறும் சத்து, முடி வளர்ச்சிக்கும் சிறப்பானதாக அமையும். ராஜ கீரை என அழைக்கப்படும் முருங்கைக்கீரையில் அனைத்து சத்தும் நிறைந்துள்ளது. இதை அடிக்கடி உணவாக எடுக்க வேண்டும். முருங்கை மரத்தில் இருந்து வரும், கீரை, காய், பூ, அதன் குச்சி எல்லாமே ஆரோக்கியம் சார்ந்தது. வாரத்தில் நான்கு நாளாவது கீரைகளைத் தவிர்க்காமல் உணவாக எடுத்தல் வேண்டும்.
காய்கறிகள், பழங்கள்
இருப்புச் சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் சத்து நிறைந்த பழங்களை தினமும் உணவில் மாற்றி மாற்றி உட்கொள்ள வேண்டும்.மீனும் முடி வளர்ச்சிக்கு உகந்தது.