புற்றுநோய்க்கு உடல் பருமன் காரணம்
7 சித்திரை 2018 சனி 12:36 | பார்வைகள் : 9958
மனிதர்களுக்குப் புற்றுநோய் ஏற்படுவதற்கு உடல் பருமன் அதிகரிப்பும் ஒரு காரணம் என்று ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
இதுதொடர்பாக இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வின்படி, புகைபிடித்தல் புற்றுநோய்க்குக் காரணமாவது குறைந்து, அதிக எடை அல்லது உடல் பருமன் காரணமாக புற்றுநோய் ஏற்படுவது அதிகரித்து வருகிறது.
6.3 சதவீதம் பேருக்கு அதிக எடையால் புற்றுநோய் உருவாகியுள்ளது என இங்கிலாந்தின் புற்றுநோய் ஆய்வு அமைப்பு கண்டுபிடித்திருக்கிறது. இது, 2011-ம் ஆண்டில் இருந்த 5.5 சதவீதத்தை விட அதிகமாகும்.
புகை பிடிப்பதால் ஏற்படும் புற்றுநோய் சதவீதம் வீழ்ச்சி அடைந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
உடல் பருமனால் ஏற்படும் ஆரோக்கிய அபாயத்தைச் சமாளிக்க அதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நீண்டகாலம் ஆன்டி-பயாடிக் மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு புற்றுநோய் உண்டாக வாய்ப்பு உண்டு என்கிறது ஓர் ஆய்வு.
ஸ்காட்லாந்தில் 41.5 சதவீதம், வட அயர்லாந்து 38 சத வீதம், வேல்ஸ் 37.8 சதவீதம் மற்றும் இங்கிலாந்து 37.3 சதவீதம் என அதிக சதவீதங்களில், தடுக்கக்கூடிய புற்றுநோய் காரணங்கள் இருந்ததை இங்கிலாந்து புற்றுநோய் ஆய்வு அமைப்பு கண்டறிந்திருக்கிறது.
தடுக்கக்கூடிய புற்றுநோய் 19.4 சதவீதத்தில் இருந்து 2011-ல் 15.1 சதவீதத்துக்குக் குறைந் திருந்தாலும், அந்நோயின் காரணியாக, புகை பிடிப்பது இருந்து வந்தது.
உடல் பருமனாக இருப்பது இரண்டாவது காரணியாகவும், சூரியனிடம் இருந்துவரும் புறஊதாக் கதிர்வீச்சுக்கு ஆளாவது மூன்றாவது காரணியாகவும் இருந்தன.
யாராவது உடல் பருமனாக இருந்தால், அவர் களின் உடல் நிறை குறியீடைக் (பி.எம்.ஐ.) கணக்கிட்டு நோய் அறிவதுதான் சரியான வழிமுறை யாகும்.
ஒருவர் தனது உயரத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான எடையைக் கொண்டிருக்கிறாரா என்று இதில் அளவிடப்படுகிறது.
உடல் நிறை குறியீட்டு எண் 25-க்கு மேலாக இருந்தால், நீங்கள் அதிக எடை உடையவர். இந்த எண் 30-க்கு மேலாக இருந்தால், சில விதிவிலக்குகள் இருந்தாலும் நீங்கள் உடல் பருமன் உடையவர்கள்.
புகை பிடிப்பதை தடுப்பதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகள் பலன் கொடுத்துள்ளதை, அதனால் ஏற்பட்டுள்ள இறப்பு விகிதக் குறைவு காட்டுகிறது. ஆனால், உடல் பருமனால் அதிகரித்து வரும் பிரச்சினையைச் சமாளிக்க அதிக பணிகள் செய்யப்பட வேண்டியுள்ளது என்று இங்கிலாந்து புற்றுநோய் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
உடல் பருமன் தற்போது மிகப் பெரிய ஆரோக்கியப் பிரச்சினையாக உள்ளது. இதைத் தடுக்க ஏதாவது செய்யாவிட்டால், இந்தப் பிரச்சினை இன்னும் மோசமாகும் என்று புற்று நோய் தடுப்பு ஆய்வகத்தின் நிபுணரான பேராசிரியர் வின்டா பவுல்டு தெரிவித்திருக்கிறார்.
“தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் துரித உணவு விளம்பரங்களைத் தடை செய்வது, அவசியமான ஒருங்கிணைந்த அணுகுமுறையின் முக்கியமான ஒரு பகுதியாகும்'' என்று அவர் வலியுறுத்துகிறார்.
மது அருந்துவதால் இங்கிலாந்தில் 3.3 சதவீத புற்றுநோய் உருவாவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
லண்டனில் உள்ள புற்றுநோய் ஆய்வு நிறுவனத்தின் புற்றுநோய் உயிரியலாளரான பேராசிரியர் மெல் கிரியவஸ், புற்றுநோய் பலவற்றை தடுத்துவிட முடியும் என்ற கருத்துக்கு இந்த ஆய்வு சான்றாக உள்ளது என்கிறார்.
உடல் பருமனைத் தவிர்ப்பதால் புற்றுநோய் ஏற்படும் சதவீதம் குறையுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் அந்த அபாயம் கணிசமாகக் குறையும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறும் கிரியவஸ், இளைஞர்களிடம் தற்போது காணப்படும் அதிக அளவிலான உடல் பருமன் விகிதத்தை வைத்துப் பார்த்தால், மருத்துவத் துறைக்கு அப்பாற்பட்ட ஒரு மிகப் பெரிய சமூகப் பிரச்சினை நிலவுவதை இந்த ஆய்வு காட்டுகிறது என்று சொல்கிறார்.
பொதுவாகவே, அளவுக்கு மீறி குண்டாயிருப்பது, பல வியாதிகளுக்கு வாசல்கதவை திறந்து வைப்பது போலத்தான்!