Paristamil Navigation Paristamil advert login

மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வும்

மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வும்

26 பங்குனி 2018 திங்கள் 09:22 | பார்வைகள் : 9378


 மலச்சிக்கல் என்று தன் பெயரிலேயே சிக்கலைக் கொண்டது இந்நோய். அதுமட்டுமல்ல, இந்த ஒரு சிக்கலால் உடலின் பல பாகங்களில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. 

 
1. நமது செரிமானம் வாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் என்று நான்கு நிலைகளில் செயல்படுகிறது. இதில் எந்த நிலையில் தடை ஏற்பட்டாலும் மலச்சிக்கல் ஏற்படும். ஆகவே, செரிமானம் நன்கு நடைபெறும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
 
2. போதிய அளவு நீர் குடிக்காததால் மலச்சிக்கல் ஏற்படும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 2 அல்லது 3 கோப்பைகள் நீர் அருந்த வேண்டும். நீரில் எலுமிச்சை சாறு கலந்தும் குடிக்கலாம். சிலர் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுவர். இது சரியல்ல. அதிக அளவு நீர் குடித்தால் சிறுநீரகங்களின் வேலை அதிகமாகி பாதிப்பு ஏற்படலாம்.
 
3. நாம் உண்ணும் உணவில் நார்ச்சத்து குறைவாக இருந்தால், மலச்சிக்கல் ஏற்படும். வெள்ளை ரொட்டி, கேக், பிஸ்கட், ஜாம், க்ரீம், துரித உணவுகள், டின்களில் பாதுகாக்கப்பட்ட உணவுகள் இவை மலச்சிக்கலை ஏற்படுத்தும். கீரைகள், காய்கறிகள், பழங்கள் இவற்றில் நார்ச்சத்துகள் அதிகம் உள்ளன.
 
 
 
4. வேலை தொந்தரவினால் மலம் கழிக்கும் உந்துதல் வரும்போது சிலர் அதை அடக்கி வைத்துக் கொள்வர். இதனால், மலம் உள்ளுக்குள் தள்ளப்பட்டு சிக்கலை உருவாக்குகிறது. காலையில் எழுந்ததும் நமது காலைக் கடன்களில் மலம் கழித்தலை முக்கிய கடமையாக நினைத்துச் செயல்பட வேண்டும்.
 
5. வயதானவர்களுக்கும், போதிய உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும் மலச்சிக்கல் ஏற்படும். வயதானவர்கள் அதிக சத்துள்ள உணவுகள், காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்துள்ள உணவுகள் இவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். அவரவர் வயதிற்கேற்ப காலையில் சுமார் அரைமணி நேரமாவது எளிய உடற்பயிற்சிகள் செய்யலாம். நடைப்பயிற்சி செய்யலாம்.
 
6. பெருங்குடல், சிறுகுடல் பகுதிகள் பாதிக்கப்பட்டால் அல்லது அடைப்புகள் ஏற்பட்டால் மலம் கழித்தல் சிரமமாக இருக்கும். இந்த அடைப்புகளை நீக்க மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
 
7. மலச்சிக்கல் ஏற்பட்டால் சிலர் உடனே மலமிளக்கி மருந்துகளை நாடுவர். இம்மருந்துகள் சில நாட்களுக்குத்தான் பலன் தரும். பிறகு மருந்துகளின் அளவை அதிகரிக்க வேண்டிவரும். இம்மருந்துகளால் குடல் பலவீனமடைகிறது. உடலில் வைட்டமின் சத்துக்களை உட்கிரகிக்கும் சக்தி குறைந்துவிடும். ஆகவே, இம்மருந்துகளைத் தவிர்த்து இயற்கையான முறைகளைப் பின்பற்ற வேண்டும். மருந்திற்குப் பதில் இவர்கள் எனிமா எடுத்துக்கொள்ளலாம். 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்