Paristamil Navigation Paristamil advert login

தூக்கம் வராமல் இருப்பதற்கான காரணங்களும் - தீர்வும்

தூக்கம் வராமல் இருப்பதற்கான காரணங்களும் - தீர்வும்

13 ஐப்பசி 2018 சனி 10:59 | பார்வைகள் : 11153


 வயதானாலே தூக்கம் குறைந்துவிடும் என்பது எல்லோருக்கும் தெரியும். பிறந்த குழந்தை ஒரு நாளுக்கு 20 மணிநேரம் தூங்கும். வயதாக ஆக தூக்கத்தின் அளவு நான்கைந்து மணிநேரமாகக் குறைந்துவிடும். தூக்கத்தின் அளவு மட்டுமின்றி, தூக்கத்தின் ஆழமும் குறையத் தொடங்கும். அடிக்கடி விழிப்பு ஏற்படுவது, சிறிய சத்தம் கேட்டால்கூட விழித்துக்கொள்வது என்று இருக்கும்.

 
அவ்வாறு தூக்கம் வராமல் இருப்பதற்கு மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் ஒரு முக்கிய காரணம் என்றாலும், வேறு சில காரணங்களும் இருக்கின்றன. முதன்மை காரணம், எந்த செயல்பாடுகளும் இல்லாமல் சும்மாவே இருப்பது. அலுவலகத்திற்கு வேலைக்கு செல்வது, வீடு திரும்புவது, தொழில் செய்பவராக இருந்தால் கடையை திறப்பது, அடைப்பது என்று அன்றாட பல விஷயங்கள் குறிப்பிட்ட நேரத்தில் சரியாக நடக்கும். இதை ஆங்கிலத்தில் டைம் மேக்கர்ஸ் (நேரக் குறிப்பான்கள்) என்று அழைக்கிறார்கள். இந்த செயல்கள் நடைபெறும் போது, நம் உடல் குறிப்பிட்ட செயல்களைச் செய்துவிட்டுத் தூங்கப் பழகியிருக்கும். வயதான பின்பு இந்த செயல்பாடுகள் இல்லை எனும் போது தூக்கம் வராமல் அவதிப்பட நேரிடுகிறது.
 
 
ஆகவே ஒரு அட்டவணைப்படித் தினமும் காலையிலிருந்து குறிப்பிட்ட செயல்களைக் குறிப்பிட்ட நேரத்தில் செய்து பழக வேண்டும். அதன்படி மாலை வெளியே சென்று வருவது, டைரி எழுதுவது, பேரன், பேத்திக்குக் கதை சொல்வது என்று குறிப்பிட்ட செயல்களைச் செய்த பின் தூங்குவது என்று வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
 
தூக்கம் வரவில்லை என்று படுக்கையிலேயே புரண்டு கொண்டிருக்காமல் எழுந்து விட வேண்டும். நல்ல புத்தகங்களைப் படிக்கலாம். தூங்குவதற்கு முன்பு அதிக சிந்தனையோ, கவலையோ கூடாது. மெகா சீரியல்களில் அதிக கவனம் எடுத்து கொண்டு, அடுத்து என்ன நடக்குமோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கக் கூடாது. நடைப்பயிற்சி அவசியம். காபி, டீ போன்றவற்றை அதிகம் குடித்தால் தூக்கம் கெடுவது உறுதி. குறிப்பாக, தூக்கம் வரவில்லையே என்று கவலைப் பட்டால், இருக்கும் தூக்கமும் போய்விடும். தேடுவதை நிறுத்துங்கள். தேடியது கிடைக்கும் என்பது ஓஷோவின் வாக்கு. பணம், புகழ் போல் அது தூக்கத்துக்கும் பொருந்தும்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்