Paristamil Navigation Paristamil advert login

தாய்ப்பாலின் மாண்பு

தாய்ப்பாலின் மாண்பு

31 ஆடி 2018 செவ்வாய் 17:26 | பார்வைகள் : 10056


 குழந்தைக்குத் தாய்ப்பாலை ஊட்ட வேண்டிய ஊக்கத்தையும் சூழ்நிலையையும் பெற்ற தாய்க்கு நாம் ஏற்படுத்த வேண்டும். அதற்கு வேண்டிய மனநலம், சத்துணவு, தண்ணீர், போதிய நம்பிக்கை யாவையும் தாய்க்குக் குறையாமல் அமைய ஊக்குவிக்க வேண்டும். குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே தாய்ப்பாலை ஊட்டத் தொடங்கலாம். குழந்தை பசிக்காக அழும்போதெல்லாம் பால் கொடுப்பதே சிறந்த முறையாகும்.

 
குழந்தை இரண்டு அல்லது மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறை பால் அருந்தும். ஒவ்வொரு முறையும் முதலில் சில மணித்துளிகளே குடிக்கும். பிறகு 15 முதல் 20 மணித்துளிகள் தொடர்ந்து பால் அருந்தும். பசிக்காகக் குழந்தை அழுதால் குழந்தைக்குப் பால் கொடுப்பதில் தவறில்லை. சில குழந்தைகள் இரவு நேரங்களிலும் பாலுக்காக அழும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இப்பழக்கம் தானே நின்று விடும்.
 
இயல்பாகவே குழந்தைகள் தாமாகவே தமக்கென்ற ஒரு நெறிமுறைக்கு வந்துவிடும். இரண்டு, மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை பால் அருந்தும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளும். இரண்டு, மூன்று மாதத்திற்கு மேல் இரவில் பால் அருந்துவதையும் நிறுத்தி நிம்மதியாக உறங்கும்.
 
ஒவ்வொரு பக்கமாகக் குழந்தைக்கு முழுமையாகப் பால் ஊட்ட வேண்டும். குழந்தை ஒழுங்காகப் பாலை உறிஞ்சுமானால் பால் சுரப்பது எளிதாகும். ஒவ்வொரு முறையும் முழுமையாக உறிஞ்சிப் பாலுண்ணும் திறனை இயல்பாகவே குழந்தைக்குக் கற்பிக்கலாம். குழந்தைக்குப் போதுமான வசதியான உடை அணிவது அவசியம். குழந்தையை வெது வெதுப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
 
போதுமான சத்துணவும், அடிக்கடி பாலூட்டும் பழக்கமும் பால் சுரப்பதைப் பெருக்குகின்றன. பால் உற்பத்தியை மருந்துகள் மூலம் அதிகமாக்க முயல்வது தேவையற்றது. பேறுகாலத்தில் பேதலித்து நிற்கும் தாய்மார்கள் தாய்ப்பால் ஊட்டுவதால் மனத்தெளிவையும் பெறுவர்.
 
சில குழந்தைகள் பால்குடிக்க ஆரம்பித்தவுடனே தூங்கி விடும். அக்குழந்தைகளை எழுப்பி வயிறு நிறையப் பாலூட்ட வேண்டும். குழந்தை பாலை குடிக்கும்வரை அளவுக்கதிகமான பால் சுரப்பினால் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படும். அப்போது சில வினாடிகள் இடைவெளிவிட்டுக் குழந்தைக்குப் பாலூட்ட வேண்டும்.
 
குழந்தை பாலைக் குடிக்கும்பொழுது காற்றையும் உறிஞ்சிவிடும். அதனால் குழந்தையை முதுகில் தட்டி ஏப்பமிட வைக்க வேண்டும். இவ்வாறு செய்யவில்லையென்றால் குழந்தை குடித்த பாலை உடனே வாந்தி எடுத்துவிடும். இந்த வாந்தி எடுத்த பொருள் சுவாசப் பைக்குள் போகவும் நேரிடும். குழந்தை ஏப்பம் விட்டபிறகு குழந்தையை அதன் வலது பக்கத்திலோ குப்புறவோ படுக்க வைக்கவேண்டும். இவ்வாறு படுக்க வைப்பதால் உணவு குடல் வழியே செல்ல வசதியாகவுமிருக்கும்.
 
குறைமாதக் குழந்தைகளாலும் பிளவுபட்ட உதடுகளுடைய குழந்தைகளாலும் தொடக்கத்தில் பாலை உறிஞ்சிக் குடிக்க இயலாது. அப்பொழுது தாய் தன் பாலைக் கையால் கறந்து கொடுக்கவேண்டும். அலுவலகத்திற்குச் செல்லும் மகளிர் கையால் கறந்த பாலைப் புட்டிகளில் சேகரித்துக் குளிர்பதனப் பெட்டியில் வைத்துத் தேவைப்படும்போது குழந்தைக்குப் புகட்டச் செய்யலாம்.
 
எப்போதும் தாய்ப்பால் தான் ஊட்ட வேண்டுமென்று அனைவரும் இப்போது வலியுறுத்தி வருவதால் எவ்வாறேனும் முயற்சி செய்து தாய்ப்பாலைச் சுரக்க வைப்பதுதான் ஒரு தாயின் இன்றியமையாத கடமையாகும். ஒரு குவளை பால் பழச்சாறோ வேறு சுவை நீர்களையோ தாய்ப்பால் கொடுப்பதற்கு முன் ஒரு தாய் அருந்தவேண்டும்.
 
 
 
தாய்ப்பால் கொடுக்கும் இடைவெளி அதிகமாக இருந்தால் குழந்தைக்கு அவ்வப்போது பாலூட்டு முறையைக் கடை பிடிக்க வேண்டும். முதலிலிருந்தே இரு பக்க மார்பகங்களில் இருந்தும் பாலூட்டும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
 
பால் உருவாக்கத்துக்குக் குழந்தை, தாய் ஆகிய இருவருடைய ஒத்துழைப்பும் தேவை. குழந்தை மட்டும் உறிஞ்சிக் கொண்டிருந்தால் சிறிதளவு பாலிற்கு மேல் அதற்குக் கிடைக்காது. அதே போல, ஒரு தாய் தன்னால் தேவையான பாலை உற்பத்தி செய்ய முடியாது என்று நினைத்தாலோ, அஞ்சினாலோ பால் சுரப்பது குறைந்துவிடும். ஆகையால் அத்தாய் எந்த வகையான மனச்சோர்வுமில்லாமல் நெஞ்சுரத்தோடு திகழவேண்டும்.
 
குழந்தை நல மருத்துவர், மருத்துவக்கல்லூரிகள், தாய்சேய் நல மருத்துவமனைகள் ஆகியவற்றில் தாய்பால் தவிரப் பிற செயற்கைப் பாலால் நேரும் கேடுகளை வலியுறுத்த வேண்டும். பள்ளிக்கூட அளவிலேயே தாய்ப்பாலின் பெருமையைப் பரப்ப வேண்டும். வளமான நாடுகளில் தாய்மார்கள் தாய்ப்பாலின் சிறப்பை உணர்ந்து குப்பிப் பாலைத் தவிர்ப்பது போலவே வறுமையில் அகப்பட்டுத் தவிக்கும் நாடுகளைச் சேர்ந்த தாய்மார்களுக்கு இக்கருத்தை ஊட்டவேண்டும்.
 
கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவதைப் போல எளியவர்கள் வறுமையாளர்கள் என்ற வேறுபாடில்லாமல் அனைத்துத் தாய்மார்களுக்கும் இயல்பாய்ச் சுரக்கும் தாய்ப்பாலைப் போற்றும் எண்ணம் உருவாக வேண்டும். அலுவலக வாழ்க்கை வாழும் தாய்மார்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் அளிப்பதில் இடையூறுகள் நேரலாம். அலுவலக அன்னையர் தாய்ப்பால் அளிப்பதற்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்கித் தரவேண்டும்.
 
நீண்ட பேறுகால விடுப்பை கருவுற்ற தாய்மார்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் வழங்க வேண்டும். இத்தாய்மார்களுக்கு கணவன்மார்களின் ஒத்துழைப்பும் தேவையாகும். அவர்களும் குழந்தை வளர்ப்பில் ஆர்வம் கொண்டு மனைவி மனநிறைவுடன் செயல்பட உதவ வேண்டும்.
 
அதே போல, மகளிர் நிம்மதியாக எந்த வகை மன இறுக்கமும் இன்றி தாய்ப்பால் அளிக்கும் சூழ்நிலையை இல்லத்திலும் பணியாற்றும் இடங்களிலும் ஆண்கள் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
 
அனைத்து மக்களுக்கும் இச்செய்தியை ஆழமாக அறிவுறுத்தித் தாய்ப்பாலையே ஓராண்டு வரையிலாவது குழந்தைகள் அருந்தினால் எதிர்காலத்  இளையச் செல்வங்கள் ஆற்றலோடும் அறிவுத்திறனோடும் நாட்டின் நன்மணிகளாக மிளிர்வார்கள்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்