Paristamil Navigation Paristamil advert login

தூங்கும்போது ஸ்மார்ட்போன் அருகில் இருப்பது ஆபத்து

தூங்கும்போது ஸ்மார்ட்போன் அருகில் இருப்பது ஆபத்து

13 ஆனி 2018 புதன் 11:33 | பார்வைகள் : 12558


 இரவில் தூக்கத்தை வரவழைப்பதற்காக ஸ்மார்ட்போன்களுடன் மல்லுக்கட்டுபவர்கள் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். பின்பு அதுவே அவர் களின் தூக்கத்திற்கு தடையாக மாறிவிடுகிறது. இப்படிப்பட்டவர்கள் தலையணைக்குப் பதிலாக ஸ்மார்ட்போனை அணைத்துக்கொள்கிறார்கள். ஒருசிலர் மார்பில் வைத்துக்கொண்டும், தலையணைக்கு அடியில் வைத்துக்கொண்டும் தூங்குகிறார்கள். இது நல்ல பழக்கம் அல்ல. தூங்கும்போது ஸ்மார்ட்போன் அருகிலோ, அரவணைப்பிலோ இருப்பது ஆபத்தானது என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

 
செல்போன்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். புற்றுநோய் உருவாகுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும். கண்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஸ்மார்ட்போன்களில் இருந்து வெளிப்படும் நீலநிற ஒளி கண்களில் உள்ள ரெட்டினாவை சேதப்படுத்தும் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. அதனால் இரவு நேரங்களில் செல்போனில் வெளிப்படும் நீல நிற ஒளியின் அளவை குறைத்து வைப்பது அவசியமானது. 
 
இந்த நீல நிற ஒளி உடலின் தூக்க சுழற்சியை ஒழுங்கு படுத்தும் ஹார்மோன்களுக்கு இடையூறை ஏற்படுத்திவிடும். இரவு தூக்கம் தடைபடுவதால் சோர்வு மட்டுமல்ல இதய நோய், எடை அதிகரிப்பு, மன அழுத்தம், பதற்றம் உள்பட பல வகையான ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். இரவு நேரத்தில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவது குழந்தைகள் மற்றும் டீன் ஏஜ் பருவத்தினரின் மனநலத்தை பாதிக்கும் என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 
 
ஆஸ்திரேலியாவின் கிரிப்த் பல்கலைக்கழகமும், முர்டேக் பல்கலைக் கழகமும் இணைந்து 29 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 8 முதல் 11 வயது நிரம்பிய 1100 மாணவ-மாணவிகளிடம் மேற்கொண்ட ஆய்வில் இந்த முடிவு தெரியவந்திருக்கிறது. ஆய்வின் முடிவில் இரவு நேரத்தில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் மாணவர்கள் தூக்கமின்மை மற்றும் மனநல பாதிப்புகளுக்கு ஆளாவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்