இளமை அழகு காக்கும் உணவுகள்

14 ஆடி 2017 வெள்ளி 12:11 | பார்வைகள் : 13450
எல்லோருக்குமே தங்கள் இளமை அழகைத் தக்கவைத்துக்கொள்ள ஆசை. அதற்காக என்னென்னவோ செய்கிறார்கள்.
யார், யாரோ கூறும் யோசனைகளைப் பின்பற்றுகிறார்கள், பலவித அழகுசாதனப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள், அவ்வப்போது அழகு நிலையத்துக்கும் சென்று வருகிறார்கள்.
ஆனால் கன்னாபின்னாவென்று அழகு முயற்சிகளை மேற்கொண்டால் செல்கள் பாதிக்கப்பட்டு விரைவில் தோல் சுருங்கிவிடும். மாறாக, சரியான உணவுகளை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், இளமை எழிலைக் காக்கலாம்.
அத்தகைய உணவுகள் பற்றிப் பார்ப்போம்...
கீரை: கீரையில் லுட்டின் மற்றும் சீக்சாக்தைன் என்னும் ஆன்டிஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளன. எனவே கீரையை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் இளமைத் தோற்றத்துடன் இருக்கலாம். ஒரு கப் பசலைக் கீரையில், சருமத்துக்கும், உடலுக்கும் ஆரோக்கியத்தைத் தரும் ஆன்டி ஆக்சிடன்ட்களான லைகோபீன் மற்றும் பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன.
ஆன்டி ஆக்சிடன்ட் உணவுகள்: நல்ல ஆரோக்கியமான, இளமைத் தோற்றத்தை நீட்டிக்கும் ஆன்டிஆக்சிடன்ட் அதிகம் உள்ள உணவுகளை சேர்த்து வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, உடல் நன்கு பொலிவு பெறும். அதிலும் குறிப்பாக, வைட்டமின் சி, ஏ, ஈ, லைகோபீன், லுட்டின் போன்ற ஆன்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்த பழங்களையும் காய்கறிகளையும் உணவில் அதிகம் சேர்த்து வந்தால், முதுமை வயதிலும், சற்று இளமையுடனேயே இருக்கலாம்.
மாம்பழம்: கோடைகாலத்தில் மாம்பழம் மிகவும் தாராளமாகக் கிடைக்கும். இந்தப் பழத்தில் கரோட்டினாய்டு, பீட்டா கரோட்டீன் என்னும் ஆன்டி ஆக்சிடன்ட் அதிகம் உள்ளது. இவை சருமத்தை பொலிவோடு வைத்துக்கொள்ள உதவும். எனவே முடியும்போதெல்லாம் மாம்பழம் வாங்கிச் சாப்பிடுவது, இளமை எழிலுக்கு உதவும்.
முட்டை: முட்டையிலும் லுட்டின், சீக்சாக்தைன் ஆகிய ஆன்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை சருமத்துக்கு மட்டுமின்றி, கண்களுக்கும் சிறந்தவை.
புராக்கோலி: பச்சை இலைக் காய்கறிகளில், புராக்கோலியில் அதிக அளவில் லைகோபீன் உள்ளது. எனவே இந்தக் காய்கறியை தொடர்ந்து உணவில் சேர்த்துவந்தால், சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கி, நன்கு இளமையாகக் காணப்பட வழிகோலும்.