தினசரி அசைவம் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?
28 ஆனி 2017 புதன் 11:44 | பார்வைகள் : 10236
நமது உடல் ஆரோக்கியமாக இயங்க கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, நீர்ச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள், நுண்ணூட்டச்சத்துகள் என ஒவ்வொன்றுமே மிகவும் அவசியம். இவற்றில் ஏதேனும் ஒன்று குறையும்போதும் நம் உடலின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.
நாம் உண்ணும் உணவை நம் உடல் கொழுப்பாக மாற்றி வைத்துக்கொள்ளும். உடலுக்கு ஆற்றல் தேவைப்படும்போது கொழுப்பை உடைத்து, தனக்குத் தேவையான ஆற்றலை உடல் தயாரித்துக்கொள்கிறது. தினசரி அசைவம் சாப்பிடும்போது, நம் உடலுக்கு கொழுப்புச்சத்து அளவுக்கு அதிகமாகக் கிடைக்கிறது. இந்தக் கொழுப்பு அப்படியே நம் உடலில் தங்கும்போது உடல்பருமன் ஏற்படுகிறது. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், இதய நோய்கள் போன்றவற்றுக்கு உடல்பருமன்தான் தலைவாசல்.
அசைவத்தில் நிறைவுற்ற கொழுப்பு அதிகம் உள்ளது. இது இதய ரத்த நாளங்களில் உள்ள நல்ல கொழுப்பைக் கட்டுப்படுத்தி, கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்யும்போது, ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதால், மாரடைப்பு, திடீர் இதயத்துடிப்பு முடக்கம், பக்கவாதம் போன்ற தீவிரமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
உடலில் அளவுக்கு அதிகமாகத் தங்கும் கொழுப்பைக் கல்லீரல்தான் சேமித்து, தேவைப்படும்போது ஆற்றலாக மாற்றுகிறது. இப்படிக் கொழுப்பு அளவுக்கு அதிகமாக சேர்ந்துகொண்டே போகும்போது கல்லீரல் பாதிக்கப்படுகிறது. இதனால், கல்லீரல் சுருக்கம் ஏற்படுகிறது.
அசைவ உணவுகளைப் பொரித்துச் சாப்பிடுவது இன்னமும் மோசமானது. ஹோட்டல்களிலும், ரெஸ்டாரன்ட்களிலும் உள்ள அசைவ உணவுகளில் பதப்படுத்துவதற்காக நைட்ரேட் சேர்க்கப்படுகிறது. இதை உயர் வெப்பநிலையில் சமைக்கும்போது, புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் (Carcinogenic) வெளிப்படுகின்றன. இந்த கார்சினோஜீன் உடலில் சேரும்போது, புற்றுநோயை ஏற்படுத்துகிறது.
ப்ராஸ்டேட், மலக்குடல்வாய்ப் புற்றுநோய், இரைப்பைப் புற்றுநோய் போன்றவை ஏற்படக்கூடும். சமைத்த எண்ணெயையே மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதும் புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளில் பிரதானமானது. எனவே, ஹோட்டல்களில் பொரித்த அசைவ உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்ப்பதே நல்லது.
தினசரி அசைவம் சாப்பிடும்போது உடலில் அளவுக்கு அதிகமாகப் புரதம் சேர்கிறது. இந்தப் புரதத்தை நீக்கவேண்டிய பணியை சிறுநீரகங்கள் செய்கின்றன. தொடர்ந்து அளவுக்கு அதிகமாக வேலை செய்ய நேர்கிறபோது, ஒருகட்டத்தில் சிறுநீரகங்கள் பழுதாகி, முழுமையாகச் செயல்படாமல் போகவும் வாய்ப்பு உள்ளது.
அசைவ உணவுகளில் ஹார்மோன்கள் அதிக அளவில் உள்ளதால், நமது பாலியல் சுரப்பைத் தூண்டித், தேவையற்ற பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக, பிராய்லர் கோழிகளுக்கு அவற்றின் வேகமான வளர்ச்சிக்காகவும் அதிகக் கறிக்காகவும் ஈஸ்ட்ரோஜென் ஊசி போடப்படுகிறது. பெண்களின் இனப்பெருக்க மண்டலத்தின் வளர்ச்சி இயக்கத்தைத் தூண்டும் ஹார்மோன் இது.
பெண்கள் பிராய்லர் சிக்கனை அடிக்கடி சாப்பிடும்போது அவர்கள் உடலில் அளவுக்கு அதிகமாக ஈஸ்ட்ரோஜென் சேர்கிறது. இதனால், மிக இளம் வயதிலேயே பூப்பெய்துவது, சீரற்ற மாதவிடாய்க் கோளாறுகள், கர்ப்பப்பை பிரச்னைகள், பி.சி.ஓ.எஸ் பிரச்சனைகள், கர்ப்பப்பைப் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. பேலியோ டயட்டில் கொழுப்புச்சத்துதான் உடலுக்கான பிரதான எரிபொருளாக உள்ளது.
இதனால், இதைப் பின்பற்றுபவர்கள் அசைவம் அதிகமாகச் சாப்பிடுகிறார்கள். இதுபோன்ற டயட் முறைகள் நல்ல பலன் தருவதாகப் பெரும்பாலானவர்கள் சொன்னாலும், இதன் விளைவுகள் பற்றி உடனடியாகச் சொல்ல முடியாது. நீண்டகால அளவில் இவை உடலில் எப்படிச் செயல்படுகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் சொல்லமுடியும். ஏனெனில், அளவுக்கு அதிமான கொழுப்பு நமது செரிமான மண்டலத்துக்கு ஆபத்து.