இடுப்பு தொடை சதையை குறைக்கும் உடற்பயிற்சிகள்
24 வைகாசி 2017 புதன் 05:55 | பார்வைகள் : 11519
நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை பார்ப்பதால் இளம் வயதிலேயே உடல் பருமனாகி, இடுப்பு, தொடைப் பகுதியிலும் கொழுப்பு சேர்ந்துவிடுகிறது. கட்டுக்கோப்பான உடலைப் பெற ஜிம்முக்கு செல்ல வேண்டும் என்று இல்லை. வீட்டிலேயே முறையான உடற்பயிற்சிகள் மூலம் உடலில் தேவையற்ற சதையைக் குறைக்கலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள உடற்பயிற்சிகள் உடலின் தேவையற்ற இடங்களில் சேர்ந்திருக்கும் கொழுப்பை எரிக்க உதவும். உடல் பருமனைக் குறைக்கும். தொடர்ந்து இந்தப் பயிற்சிகளை செய்துவந்தால், இடுப்பு, தொடையில் சதை குறைந்து 'ஸ்லிம்’மாகும்'
காஃபின் க்ரஞ்சஸ் (coffin crunches) :
தரையில் நேராகப் படுத்து, இரண்டு கால் முட்டிகளையும் மடக்கவும். தலை மேல் நோக்கி இருக்கட்டும். கைகளை இரண்டு பக்கத்திலும் ஊன்றிக்கொள்ளவும். கைகளை நன்றாக ஊன்றியபடியே, தலையை மட்டும் மேல் நோக்கித் தூக்கவும். முட்டிகள் மடக்கிய நிலையிலேயே இருக்கட்டும். ஓரிரு விநாடிகளுக்கு பிறகு மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும். இதுபோல் தொடர்ந்து 15முறை செய்ய வேண்டும்.
சைடு க்ரஞ்சஸ் (Side crunches) :
தரையில் நேராகப் படுத்துக்கொண்டு, இரண்டு கால்களையும் சமமாக நீட்டிக்கொள்ளவும். இரண்டு கைகளையும் தலையின் பின்னால் கட்டிக்கொள்ளவும். வலது காலின் மேலே இடது காலை வைக்கவும். தலையை லேசாக உயர்ந்து இருக்கட்டும். ஓரிரு வினாடிகளுக்குப் பிறகு பழைய நிலைக்குத் திரும்பவும். அதேபோல், இடது காலின் மேலே வலது காலை வைக்க வேண்டும். இப்படி பதினைந்து முறை இரண்டு கை கால்களையும் மாற்றி மாற்றி செய்யுங்கள்.
அப்டாமினல் ஸ்ட்ரச் (Abdominal stretch) :
தரையைப் பார்த்தபடி படுத்து இரண்டு கைகளையும் முன்னால் ஊன்றிக்கொள்ளவும். உடலோடு சேர்த்து தலையையும் தரையில் இருந்து சிறிது அடி மேலே உயர்த்தவும். மொத்த அழுத்தமும் கைகளில் இருக்கட்டும். இதே நிலையில் ஐந்து நொடிகள் இருந்து, மீண்டும் உடலை பழைய நிலைக்குக் கொண்டுசெல்லவும். சிறிது இடைவெளிக்கு பின்னர் மீண்டும் தலையையும் உடலையும் மேலே தூக்கி முன்னர் செய்தது போலவே செய்ய வேண்டும்.
எல்லா உடற்பயிற்சிகளும் செய்து முடித்ததும், இந்தப் பயிற்சியை கடைசியாகச் செய்யவும்.