அறிகுறிகளை வைத்து நோயை அறியலாம்
16 வைகாசி 2017 செவ்வாய் 11:28 | பார்வைகள் : 11719
ஒரு நல்ல தரமான விகிதாச்சார உணவில் இருந்துதான் நமக்கு தேவையான சத்தினை வைட்டமின்கள், தாது உப்புகளை நாம் பெற முடியும். ஆனால் ஓரளவு அக்கறையோடு உண்டாலும் பல நேரங்களில் நமக்கு தேவையான சத்துகளை நாம்பெற முடிவதில்லை. இதற்கு வயதும், உடல்நல பாதிப்பும் முக்கிய காரணம் ஆகின்றது. சாதாரண ரத்த பரிசோதனையில் இந்த குறைபாடுகளை நாம் கண்டு பிடிக்க முடியும் என்றாலும் நமது சருமம், தலைமுடி, நகம் இவைகளை வைத்து எளிதாய் உடலின் குறைபாடுகளை கண்டு பிடித்து விட முடியும்.
* காலையில் தூங்கி எழுந்தவுடன் அனைவருக்குமே கண்கள் லேசாக உப்பினார் போல் இருக்கும். ஆனால் அதிகமாக கண் ஊதி இருப்பது அயோடின் குறைபாடு, தைராய்டு சுரப்பியின் பாதிப்பு இவற்றினை காட்டும். அதிக சோர்வு, உப்பியகண், வறண்ட சருமம், எடை கூடி இருத்தல், எளிதில் உடையும் நகம் இவையெல்லாம் இதன் அறிகுறிகள். எனவே இத்தகு அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
* வெளிறிய சருமம் என்பது சத்து அற்றது போன்ற ஒரு வெருப்பில் இருக்கும். இத்துடன் அதிக சோர்வும் இருக்கும். நாக்கு வழுவழுப்பாய் இருக்கும். இந்த அறிகுறிகள் வைட்டமின் பி12 சத்து குறைபாட்டினைச் சொல்கின்றன. இந்த அறிகுறிகளை அலட்சியமாய் ஒதுக்கி விடக்கூடாது.
* முடி வறண்டு பொலிவிழந்து இருக்கின்றதா? வைட்டமின் பி7 (அ) அயோடின் குறைபாடு உங்களுக்கு இருக்கலாம். எளிதில் உடையும் நகங்கள் குறைபாடு கூட இருக்கலாம். மருத்துவ அறிவுரையோடு இதனை சரி செய்ய முடியும்.
* வெளிறிய உதடுகள் இருந்தால் உங்களுக்கு ரத்த சோகை இருக்கின்றதா என பரிசோதித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு இரும்பு சத்து தேவை இருக்கலாம். இதன் கூடுதல் அறிகுறியாக அடிக்கடி சளி பிடிக்கலாம் ஆக ரத்த பரிசோதனை மூலம் குறையினை கண்டு பிடித்து உடனடி தீர்வு பெற வேண்டும்.
* ஈறுகளில் அடிக்கடி ரத்தம் கசிவு ஏற்படுகின்றதா? உங்களுக்கு வைட்டமின் ‘சி’ சத்து குறைபாடு இருக்கக் கூடும். மேலும் இக்குறைபாடு ‘ஸ்கர்வி’ எனும் தாக்குதலை ஏற்படுத்தலாம். எளிதில் ரத்த கசிவு, மூட்டுகளில் வலி, சதைகளில் வலி என ஏற்படலாம். எனவே கவனம் தேவை.
* இப்பொழுதெல்லாம் அனைவரும் கால்ஷியம், வைட்டமின் டி பற்றி நன்கு அறிந்தே உள்ளனர். வைட்டமின் டி சத்து எலும்புகளுக்காக என்பது மட்டுமே அறிந்துள்ளனர். ஆனால் வைட்டமின் டி குறைபாடு உயிரிழப்பு விகிதத்தினை 30 சதவீதம் கூட்டி விடுகின்றது. புற்று நோயால் ஏற்படும் உயிர் இழப்பினை 40 சதவீதம் கூட்டி விடுகின்றது. 65 சதவீதம் இருதய செயலிழப்பு நோயாளிகளுக்கு வைட்டமின் டி சத்து குறைபாடு இருந்தது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. எலும்பிற்காக கால்ஷியம் சத்திற்கு பால்குடிக்கலாம். தினமும் காலை, மாலை 15 நிமிடம் வெயிலில் இருப்பது வைட்டமின் டி குறைபாட்டினை நீக்கும். மேலும் வைட்டமின் டி குறைபாடு உடல் எடை கூடுதல், சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, மனஅழுத்தம், உடல் வலி, எப்போதும் சோர்வு, எலும்பு கரைதல், நரம்பு பாதிப்பு போன்றவைகளுக்கு காரணமாகின்றது என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் நோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் டி3 அவசியம். மருத்துவ ஆலோசனைப்படி தேவைப்பட்டால் இதனை வைட்டமின் மாத்திரையாக எடுத்துக் கொள்ளலாம்.
* வைட்டமின் மாத்திரைகளை அதிக வெளிச்சம், சூடு இருக்கும் இடத்தில் வைத்தால் அதன் நன்மைகளை அது இழந்து விடும் நிழலான குளுமையான இடத்தில் இதனை வைக்கவும்.
* வைட்டமின் ஏ, சி மற்றும் மக்னீசியம் குறைபாடு அதிகமாகவே காணப்படுகின்றது.
* வளர்ந்து வரும் நாடுகளில் 33 சதவீதம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ சத்து குறைவாக இருக்கின்றது. இதனால் இரவு கண் பார்வை மங்கும் பாதிப்பு அதிகமாக உள்ளது.
* வைட்டமின் பி12 குறைபாடு கருதரிப்பதில் கடினம் மற்றும் அபார்ஷன் இவற்றினை ஏற்படுத்துகின்றது.
* கர்ப்பகாலத்தில் சில குறிப்பிட்ட வைட்டமின்களை மருத்தவர் பரிந்துரைப்பார். இதனை அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும்.