முகத்தை பார்த்து நோயை அறியலாம்
4 ஐப்பசி 2017 புதன் 11:04 | பார்வைகள் : 11374
‘அகத்தின் அழகு முகத்திலே’ தெரியும் என்று நம் நாட்டில் சொல்வார்கள். இது மருத்துவத்திற்கும் வெகுவாய் பொருந்தும். இதனையே சீன மருத்துவ முறையில் எவ்வாறு கூறுகின்றார்கள் என்பதனைப் பார்ப்போம்.
உங்கள் ஆத்மாவினைப் பற்றி உங்கள் கண்களும், உங்கள் உடலினைப் பற்றி உங்கள் முகமும் சொல்லி விடும் என்கின்றது சீன மருத்துவம். சீன மருத்துவம் அக்கு பங்சர், தாய் சீ என்ற முறைப்படி மனம், உடல் இரண்டினையும் இணைத்தே சிகிச்சை அளிக்கின்றது. அநேக மூலிகைகளையும் குறிப்பிட்ட நோய்களுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.
முகத்தினைப் பார்த்தே நோய்களை கணிக்கின்றனர். தோல் தான் உடலின் மிகப்பெரிய உறுப்பு. உங்கள் சருமம் நன்கு இல்லை என்றால் உங்கள் உடலில் எங்கோ, ஏதோ சரியில்லை என்று உணர்த்துகிறது சீன மருத்துவம்.
முகம் உங்கள் ஆரோக்கியத்தின் கண்ணாடி. ஒவ்வொரு உடல் உறுப்பிற்கும் முகத்தில் ஒரு ஜன்னல் உள்ளது.
நெற்றி: பித்தப்பை, மற்றும் சிறு நீரகப்பையினைப் பற்றி கூறும். ஸ்டிரெஸ், உள்ளே தேக்கம் இவற்றினால் ஏற்படும் பாதிப்புகள் அதிக கொழுப்பு உணவு, புட்டியில் அடைக்கப்பட்ட உணவுகள் இவற்றினால் பித்தப் பையில் பாதிப்பு ஏற்படும். மேலும் மது, சர்க்கரை, குறைந்த தூக்கம் இவையும் உங்கள் நெற்றியில் பாதிப்பினை ஏற்படுத்தும்.
தேவையான அளவு சுத்தமான நீர், முழு தானிய உணவு, சாலட் வகைகள், தேவையான அளவு தூக்கம் இதனை பழக்கப்படுத்துங்கள். ஆல்கஹால், கொழுப்பு உணவுகளைத் தவிருங்கள். யோகா, தியான முறைகளை கடை பிடியுங்கள்.
இரு புருவங்களுக்கு மத்தியில்....
கல்லீரல், வயிறு, ஜீரண உறுப்புகள் கல்லீரலில் அதிக நச்சுத்தன்மை இருத்தால், உணவு அலர்ஜி, அதிக புரதம், இவைகூட ஜீரண உறுப்புகளை பாதித்துவிடும். சுயமாகவே கண்ட மருந்துகளையும் எடுத்துக்கொள்ளும் நபர்களுக்கு கல்லீரல் பாதிக்கக்கூடும். மிக அதிகமான புரதமும் ஜீரணத்திற்கு கடினமாகிவிடும். மது கல்லீரலுக்கு நஞ்சு. எனவே உடனடியாக மதுவினை நிறுத்த வேண்டும்.
புருவம் மற்றும் கண் பகுதி
உப்பிய கண்கள், சோர்ந்த கண்கள், கறுப்பு வளையம் கொண்ட கண்கள் இவையெல்லாம் சொல்லும் உண்மைகள்.அதிகம் உழைத்த சிறுநீரகம், குறிப்பாக அதிக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்பு, புகைபிடித்தல், அதிக மது, குறைவான ரத்த ஓட்டம், வலுவற்ற இதயம் ஆகியவை ஆகும்.
அதிக நீர் குடித்தல், ஃகேபின் தவிர்த்தல், உப்பு உணவுகளை தவிர்த்தல், அதிக சர்க்கரை சேர்த்த குளிர்பானங்களை தவிர்த்தல் ஆகியவை மிகுந்த பலன் அளிக்கும்.
மூக்கு : மூக்கு, கன்னம் பகுதிகளில் வரும் சிறு சிறு கட்டிகள், சுகாதாரமற்ற இதயம், கெட்ட கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம் இவற்றினை குறிக்கும். அதிக மது, காபி, மசாலா உணவு இவை பாதிப்பினை கூட்டிவிடும். ஃபிளாக்ஸ் விதை, ஆலிவ், தேங்காய் எண்ணை இவற்றினை பயன்படுத்துவது நல்லது.
கன்னங்கள் : கன்னங்களில் ஏற்படும் பாதிப்புகள் உங்கள் மூச்சு மண்டல பாதிப்பு, சத்துக்கள் உடல் எடுத்துக்கொள்வதில் குறைபாடு, ஆகியவற்றினை கூறுகின்றன. மேலும் புகை பிடிப்பதால் ஏற்படும் அலர்ஜியாகவும் இருக்கலாம். அலர்ஜி பாதிப்பு காரணமாக இருக்கலாம். சுற்றுப்புற சூழலில் நச்சு காற்று இருக்கலாம். சுற்றுப்புற சூழலை சுத்தமாய் வைத்திருங்கள். புகை பிடிப்பதனை விட்டுவிடுங்கள்.
வாய், உதடு : வாய் உதடுகளில் ஏற்படும் பாதிப்புகள் மண்ணீரல், வயிறு ஜீரணப்பாதைகளில் ஏற்படும் பாதிப்புகளின் எதிரொலியாக இருக்கலாம். வயிறு உப்பிசம், சுவாச துர்நாற்றம், பசியின்மை, மலச்சிக்கல் இவை உதடுகளில் பாதிப்பினை ஏற்படுத்தும். அதிக கொழுப்பு உணவு, அதிக பால் சார்ந்த உணவுகள், அதிக மாவு சத்து, அதிக குளிர்பானங்கள் இவையும் இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
வெங்காயம், பட்டை, இஞ்சி, துளசி, எள், ஏலக்காய், தனியா, தேன் போன்றவை இத்தகு பிரச்சினைகளுக்கு உதவும்.
முகவாய் : முகவாயில் ஏற்படும் கட்டி போன்ற சரும பாதிப்புகள் ஹார்மோன் பாதிப்பு உள்ளதனை கூறுகின்றது. இதனால் தான் மாதவிலக்கு காலங்களில் பெண்களில் சிலருக்கு இந்தப் பகுதிகளில் பரு, கட்டி போன்று ஏற்படுகின்றது.
7-8 மணி நேர தூக்கம், ஓமேகா 3, யோகா போன்றவை இதற்குத் தீர்வாக அமையும்.